Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “காஷ்மோரா” – கோகுல் – கார்த்தியின் ‘ஏமாற்று’ வேலை!

திரைவிமர்சனம்: “காஷ்மோரா” – கோகுல் – கார்த்தியின் ‘ஏமாற்று’ வேலை!

744
0
SHARE
Ad

kashmora-poster-1

கோலாலம்பூர் – “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற இயல்பான நகைச்சுவையோடு கூடிய படத்தைக் கொடுத்து இரசிகர்களை மகிழ்வித்த இயக்குநர் கோகுல், கார்த்தி-நயன்தாரா எனக் கூட்டணி அமைத்திருக்கிறாரே, என ஆர்வத்துடன் அரங்கில் போய் அமர்ந்தால், அவரும் கார்த்தியும் இணைந்து ‘ஏமாற்று’ வேலைகள் நிறைய செய்திருக்கின்றார்கள் – முழம் முழமாக காதில் பூச்சுற்றல்களோடு!

கதை-திரைக்கதை

#TamilSchoolmychoice

மாந்திரீகம்- பில்லி சூன்யம் என்ற அம்சங்களின் அடிப்படையில் பின்னப்பட்டிருக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் ஆரம்பிக்கும் படம் என்று பார்த்தால், போகப் போக, வழக்கம்போல், இராஜா-இராணி காலத்து கதை. அரச குடும்பத்துக் காதல் தோல்வியில் முடிந்து 700 ஆண்டுகளாக, மரணமடைந்த இளவரசியும், தளபதிகளும், மறுபிறவிகளிலும் ஆவிகள் வடிவில் தொடர்ந்து பூலோகத்தில் வாழ்கிறார்கள் என “கதை” விட்டிருக்கின்றார்கள்.

kashmora-karthi-4

பேய்களை விரட்டும், பில்லி சூன்யத்தை அகற்றும் – மாந்தீரிக வித்தைகள் தெரிந்த குடும்பமாக தந்தை விவேக்- மகன் கார்த்தி குடும்பம். கார்த்தியின் பெயர்தான் காஷ்மோரா. ஆனால் உண்மையில் அனைவரும் ஏமாற்று வித்தைக்காரர்கள், சூன்யம் இருப்பதாக பொய் கூறி, நம்ப வைத்து, பின்னர் அதை அகற்றுவதாக பணம் பறிப்பவர்கள்.

பேய்கள், ஆவிகள் குறித்த ஆராய்ச்சி மாணவி ஸ்ரீதிவ்யா, பேய் ஆராய்ச்சிக்காக கார்த்தியைப் பின்தொடர்கின்றார்.

கார்த்தியின் கைங்கரியங்களால், ஒரு போலீஸ் அதிகாரி, அமைச்சர், என அனைவரும் அவரை நம்பத் தொடங்குகின்றனர்.

kashmora-karthi-3

இந்த சூழ்நிலையில் அவர் ஏமாற்றுக்காரர் என்பது தெரிய வர, அமைச்சரும், போலீஸ்காரரும் கார்த்தியைத் தேடுகின்றனர், அவரிடம் சிக்கிக் கொண்ட தங்களின் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்வதற்காக!

அதே வேளையில் கார்த்தி, மர்ம ஆவிகளால் அழைத்து வரப்பட்டு, ஒரு பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கின்றார். ஏன் ஆவிகள் அவரை அங்கு அழைத்து வந்தன, பாழடைந்த அரண்மனையின் பின்னணிக் கதை என்ன, என்பதையும், கடைசியில் ஆவிகளிடம் இருந்து கார்த்தியும், அவரது குடும்பமும் எவ்வாறு மீண்டார்கள் என்பதையும் படத்தின் பின்பாதிக் கதை விவரிக்கின்றது.

“ஏமாற்று” கதைப் பின்னல்

kashmora-karthi

முதல் சில காட்சிகளில் மிகவும் சீரியசான சூன்யம் அகற்றும் மாந்திரிகவாதியாக சிடுசிடு, கடுகடு முகத்துடன் வருகிறார் கார்த்தி. ஆனால், அவர் ஏமாற்றுக்காரர் என்பதையும், அவரது குடும்பத்தினர் எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்பதையும் விவரிப்பது சுவாரசியமாக இருக்கிறது.

ஆனால், போகப் போக, கார்த்தியின் வழக்கமான நகைச்சுவையும், இல்லை – இயக்குநர் கோகுல் பாணி நகைச்சுவையும் இல்லை – சும்மா பெயருக்கு வந்து போகும் கதாநாயகி ஸ்ரீதிவ்யாயுடன் சுவாரசியமான காதலும் இல்லை – சம்பிராதயத்துக்குக் கூட, அவரும் கார்த்தியும் இணையும் ஒரு பாடல் கூட இல்லை – என திரைக்கதை போகத் தொடங்க,

நாமும் போரடித்துப் போய், எப்போது வருவார் நயன்தாரா என ஏங்கத் தொடங்கி விடுகின்றோம்.

kashmora-nayanthara

படத்தின் இடைவேளைக்குப் பின்னர் சுமார் இருபது நிமிடங்கள் மட்டுமே வருகிறார் நயன்தாரா. ஆனால், அவர்தான் படத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றியிருக்கின்றார். அவரது ஆளுமையால், அவர் வரும் காட்சிகள் மட்டுமே இரசிக்கும் வகையில் இருக்கின்றன.

நயனும், தளபதி ராஜநாயக்காக வரும் கார்த்தியும் அரச உடையிலும், ஒப்பனையிலும் கவர்கின்றார்கள் என்றாலும், அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதை அதரப் பழசு. 1960-ஆம் ஆண்டுகளிலேயே மறுபிறவிக் கதையாக வந்த ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முதல் கொண்டு எத்தனையோ படங்களில் பார்த்த ஜமீன், அரச குடும்பத்து காதல் கதைதான் என்பது மிகப் பெரிய பலவீனம்.

இருந்தாலும், கார்த்தியுடன் ஒரு நெருக்கமான பாடல் காட்சி, இளவரசிக்கே உரிய மிடுக்கு, திமிர், கவர்ச்சி என தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கின்றார் நயன்தாரா. அதே வேளையில், அவரை இன்னும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல், அவரைப் போய் பாதிநேரம் வாள் சண்டை என்ற பெயரில் அந்தர் பல்டி அடிக்க வைப்பதும், அங்கும் இங்கும் வாளுடன் பாய வைப்பதும், கொடுமை!

kashmora-karthi-nayan

கார்த்தியின் தளபதி வேடமும், உடல் மொழியும் அருமை. ஆனால், அவரை ஆவியாகக் காட்டுவதாக, பல காட்சிகளில் அவரைத் தலை தனியாகவும், முண்டம் தனியாகவும் காட்டுவது வெறுப்பேற்றுகின்றது.

பலவீனங்கள்

இடைவேளைக்கு முன்னரும், இடைவேளைக்குப் பின்னரும், பாழடைந்த அரண்மனையில் கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் – ஆவிகள் பயமுறுத்தும் – காட்சிகள் சரியான போரடிப்பு என்பதோடு, தலைவலியையும் உண்டாக்குகின்றன.

கதையில் பல ஓட்டைகள். எங்கோ தென்கிழக்காசியாவில் இருப்பதாக ஆலயம் ஒன்று காட்டப்படுவது ஏன் – அங்கிருந்து பருந்து ஒன்று பறப்பது – ஓலைச் சுவடிகள் காணாமல் போவது – என கதையோடு ஒட்டாத பல காட்சிகள். பருந்து ஓலைச் சுவடியை இந்தியாவில் கொண்டு வந்து போடுகிறதாம்.

அதைத்தான் கார்த்தி எடுத்துப் படிக்கிறார் என்றால், அந்த ஓலைச் சுவடி எப்படி உடைக்க முடியாத பெட்டிக்குள் சென்று அடைக்கலமானது? இப்படி முரண்பாடுகள் பல இடங்களில்!

தலை வேறு – முண்டம் வேறாக நடப்பது, பேய்முகங்கள், இரத்தச் சிதறல்கள் போன்ற காட்சிகளால், அருவருப்புதான் ஏற்படுகின்றதே தவிர, அவை பயமுறுத்தவில்லை.

அவ்வப்போது தலைகாட்டும் ஸ்ரீதிவ்யாவையும் சரியான முறையில் இயக்குநர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

விவேக்கின் நடிப்பும் வழக்கமானதுதான்.

kashmora-karthi-2

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது. ஆனால் பாடல்கள் ஏனோ, மனதில் தங்கவில்லை.

சிஜி எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பான முறையில் கையாளப்பட்டிருந்தாலும், அழுத்தமான, ஆர்வத்தை ஏற்படுத்தும் கதைக்களம் அமையாததால், அந்தக் காட்சிகளெல்லாம் எடுபடவில்லை – இரசிக்கவும் முடியவில்லை.

படத்தின் மொத்த செலவு 60 கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள்.

ஆனால், அத்தகைய தொகையின் ஐந்து – அல்லது பத்து சதவீதத்தில் இயக்குநர் கோகுல் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ஏற்படுத்தித் தந்த சினிமா அனுபவத்தை காஷ்மோரா தரவில்லை.

மொத்தத்தில், இயக்குநர் கோகுலும் – கார்த்தியும் சேர்ந்து நடத்தியிருக்கும் ‘ஏமாற்று’ வேலை கதைக்களம் கொண்ட   காஷ்மோரா – இரசிகர்களையும் ஏமாற்றி விட்டது!

-இரா.முத்தரசன்