கோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல், சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு தலா 20 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் அறிவித்துள்ளார்.
நாட்டுக்குள் தரை வழியாக வருவதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் 12 நுழைவாயில்கள் அனைத்திலும் இந்தக் கட்டணம் நாளடைவில் அறிமுகப்படுத்தும் என்றாலும், நவம்பர் 1 முதல், சிங்கையிலிருந்து ஜோகூர்பாரு வரும் இரண்டு நுழைவாயில்களில் முதல் கட்டமாக இந்தக் கட்டண விதிமுறை அமுலாக்கப்படுகின்றது.
வாகனங்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படுவதாகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போதைக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கையிலிருந்து நுழையும் வாகனங்களுக்கான கட்டண விதிப்பு மற்றும் பதிவு முறை விரைவில் முழுமையாக அறிவிக்கப்படும் என்றும் லியோவ் கூறியிருக்கின்றார்.