Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: கொடி – அரசியல் படம்; தனுஷ், திரிஷாவின் நடிப்பிற்காகப் பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: கொடி – அரசியல் படம்; தனுஷ், திரிஷாவின் நடிப்பிற்காகப் பார்க்கலாம்!

1096
0
SHARE
Ad

kodi-first-lookகோலாலம்பூர் – பதவி ஆசை அரசியல்வாதியை எந்த எல்லை வரை கொண்டு செல்லும்? என்னவெல்லாம் செய்யச் சொல்லும் என்பதை முதல் முறையாக இரட்டை வேடத்தில் தனுஷை நடிக்க வைத்து ‘கொடி’யசைத்து துவக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில் குமார்.

படத்தின் காதல் காட்சிகளில் கூட அரசியல் பேசும் அளவிற்கு இது முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதை. மருந்தளவில் கதை திசை மாறிவிடக்கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருப்பது காட்சிகளின் வாயிலாகத் தெரிகின்றது.

கதைப்படி, வாய்பேச முடியாத அடிமட்டத் தொண்டனான கருணாஸ், தான் சார்ந்திருக்கும் கட்சியிலேயே தனது இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரான ‘கொடியை’ மேடை ஏற்றுகிறார். கொடியை அரசியல் பேச வைத்து ரசித்து மகிழ்கிறார். ஒரு பிரச்சினைக்காக தன் மகனின் கண் முன்னரே, தன்னையே கொளுத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

#TamilSchoolmychoice

என்றாலும், தனது தந்தையின் ஆசைப்படி அதே கட்சியிலேயே இருந்து அரசியல்வாதியாக உருவாகிறார் கொடி (தனுஷ்), அம்மா சரண்யாவின் பேச்சைக் கேட்டு கல்லூரி பேராசிரியர் ஆகிறார் அன்பு (தம்பி தனுஷ்).

இதனிடையே, எதிர்கட்சி உறுப்பினரான ருத்ராவை (திரிஷா) காதலிக்கிறார் கொடி. கட்சிகள் வேறாக இருந்தாலும் அரசியல் மீதிருக்கும் பிடிப்பால் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அன்பு அதே ஊரில் வசிக்கும் அனுபமா பரமேஷ்வரனைக் காதலிக்கிறார்.

இப்படி இருக்க, பாதரச தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டது தொடர்பில், தனது தந்தை கருணாஸ் உயிரை விட்ட அதே விவகாரம் மீண்டும் தக்க ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த ஆதாரங்களில் தொடங்குகிறது பிரச்சினை. அதன் பிறகு அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிறது. முடிவில் நியாயம் வென்றதா? என்பதே கிளைமாக்ஸ்.

நடிப்பு

dhanushகொடியாகவும், அன்பாகவும் உடல்மொழியிலும், அடர்த்தியான தாடி சகிதமான ஒப்பனையிலும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கிறார் தனுஷ். தம்பியின் காதலுக்கு உதவ தாடி எடுப்பதும், தம்பிக்கு பதிலாக வில்லன்களை வெளுத்து வாங்குவதுமாக தனுஷ் அசத்துகிறார்.

திரிஷா.. தொடக்கத்தில் திரிஷாவின் நடிப்பு சற்றே நெருடலாக இருந்தாலும் கூட, போகப் போக படத்தில் யார் ஹீரோ என்றும் எண்ணும் அளவிற்கு மெல்ல அவரது கதாப்பாத்திரத்திற்கான அழுத்தத்தைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர். அதற்கு ஏற்ப திரிஷாவும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர்களோடு, கருணாஸ், கட்சித் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், மாரிமுத்து, காளி வெங்கட் ஆகியோரின் பலமான கூட்டணி ரசிக்க வைக்கின்றது.

ரசிக்க 

kodi1தனுஷின் வித்தியாசமான நடிப்பு அவரது ரசிகர்களை கொண்டாட வைக்கும். சில காட்சிகளில் அவரது நடை, உடை, பாவனைகளால் திரையரங்கமே அதிருகிறது.

திரிஷா.. இன்னமும் அதே இளமையும், அழகுமாக படம் முழுவதும் வந்திருப்பது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து. அதே நேரத்தில், அவரது கதாப்பாத்திரமும், நடிப்பு கூடுதல் சிறப்பு.

அனுபமா.. சில காட்சிகளே வந்தாலும், இளைஞர்கள் பிரேமம் கொள்ளும் அளவிற்கு அழகால் கவர்கிறார்.

அரசியல் சூழ்ச்சிகள், கட்சிக்குள் எடுக்கப்படும் முடிவுகள் போன்ற காட்சிகள் செஸ் விளையாட்டு போல் ரசிக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக தேர்தலில் தனுஷ் வேட்பாளராக அறிவிக்கப்படும் அந்த காட்சி சுவாரசியத்தின் உச்சம்.

வெங்கடேசின் ஒளிப்பதிவில் கதைக்குத் தேவையான வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. முற்றிலும் கிராமமாக இல்லாமல், மேம்பாடு அடைந்த நகரமாகவும் தெரியாமல் வளர்ந்த கிராமம் ஒன்றில் கதை நடப்பாக காட்சிகள் இருப்பது ரசிக்க வைக்கின்றது.

சந்தோஷ் நாராயணின் இசையில், பாடல்கள் புதுமை. பின்னணி இசை ஒகே இரகம்.

சொதப்பல் 

kodi-movie-stills-06தனுஷின் முதல் இரட்டை வேடப் படம். ஆனால் அதற்கான கதாப்பாத்திர வடிவமைப்பில் ஏனோ அவ்வளவு கவனம் செலுத்தாதது போல் தெரிகின்றது.

ஒரு சின்ன வட்டிக் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே அண்ணன் கொடியின் தயவை எதிர்பார்க்கும் தம்பி தனுஷ், திடீரென புதிய அவதாரம் எடுத்து பலசாலியாகவும், புத்திசாலியாகவும் சேர்ந்து, மொத்த உருவமாக வருவதெல்லாம் நம்பும் படியாக இல்லை.

அரசியல் களத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடப்பு அரசியலை இன்னும் வலுவாகச் சொல்லியிருக்கலாம். என்றாலும், பாதரசம் கழிவுகள் சொன்ன விதம் ஈர்ப்பு.

காதல், கொலை போன்றவற்றில் பல லாஜிக் சொதப்பல்கள். அவற்றையெல்லாம் நீக்கி இயல்பாக அதன் போக்கில் நகர்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், அரசியலைக் கதைக் களமாகக் கொண்ட கொடியை தனுஷ், திரிஷாவின் நடிப்பிற்காக ஒரு முறைப் பார்க்கலாம்.

-ஃபீனிக்ஸ்தாசன்