Home Featured நாடு “சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்…” குறளுக்கேற்ப தீபாவளியைக் கொண்டாடுவோம் – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

“சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்…” குறளுக்கேற்ப தீபாவளியைக் கொண்டாடுவோம் – டாக்டர் சுப்ரா வாழ்த்து!

1048
0
SHARE
Ad

subra-dr-mic

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் விடுத்துள்ள தீபாவளி சிறப்பு வாழ்த்துச் செய்தியில்,

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

எனும் குறளுக்கேற்பக் கொண்டாடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இத்தீபத்திருநாளில் சுற்றத்தினர் அன்புடன் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே, ஒருவர் பெற்ற செல்வத்தினால் கிடைக்கப்பெறும் பயனாகும் என்பதை விளக்கும் இந்தக் குறளின்படி, தெளிவுற்று, தூய எண்ணத்துடன் அனைவரிடமும் ஒற்றுமை பகிர்ந்து  அறத்தின் வழியில் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டும். குடும்பத்தில் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், சுற்றத்தார் மத்தியில் ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைகள் அதிகரித்துக் குதூகலமான தீபாவளியாக இந்நாள் அமைய வகை செய்து ஒற்றுமையை வலுப்பெறச் செய்ய வேண்டும்” என்று டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடவிருக்கும் இந்த இனிய தருணத்தில், அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்தினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ள சுப்ரா, “இத்தீபத்திருநாளில் இல்லங்களில் இருள் நீங்கி ஒளி மலர்வதைப் போன்று இந்தியர்களின் உள்ளங்களிலும் தீய என்ணங்கள் அகன்று நல்ல எண்ணங்கள் பெருக்கெடுத்துப் புதியதொரு சமுதாயமாக உருமாற்றம் அடைய வேண்டும். பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் குடும்ப உறவினர்களிடையே ஆனந்தமும், சாந்தமும் நிலவி சிறப்பினை அடைய வேண்டும். இந்தியர்களின் தாய்க்கட்சியான ம.இ.காவின் தேசியத் தலைவர் எனும் முறையில் சமுதாய உருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய தார்மீக பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையில் நாட்டிற்கு முதுகெலும்பாகத் திகழும் இளைஞர்களிடையே நற்சிந்தனைகள் மேலோங்கி, சமுதாய உருமாற்றத்திற்கு வித்திடப் பாடுபட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

உடல் நலத்துக்கு முக்கியத்துவம் தருவோம்

Happy_Deepavali - 2014

“தீபாவளி என்றாலே ஏராளமான உணவுகளும், இனிப்பு வகைகளும் இருக்கும். விருந்தோம்பல் முறையில் அதிகமான விருந்தினர்களை இல்லத்தில் கூட்டி உபசரிப்போம். அதேநேரத்தில் நாமும் பலரது இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். இத்தகைய காலக்கட்டத்திலும், நமது அன்றாட வாழ்க்கை முறையிலும் சுகாதார அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் கலாச்சாரம் நம்மிடையே மேலோங்க வேண்டும். விருந்தோம்பல் முறையில் ஆரோக்கியத்தை நாம் கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும்” என்றும் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் அறிவுறுத்தியுள்ளார்.

“உணவை அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை என்று நம் பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளது. நம் முன்னோர்களின் கூற்றுக்கு ஏற்ப அளவான உணவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அளவுக்கு மிஞ்சிய உணவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கையை ஏற்படுத்திவிடும் என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும். இதனையே “உணவே மருந்து; மருந்தே உணவு” என்று அறிஞர்கள் இயம்புகின்றனர். அதன் அடிப்படையில், அளவான முறையில் உட்கொள்வதோடு, புகை, மது போன்றவற்றிலிருந்து விடுபட்டு கலாச்சாரத்தையும் பேணிக் காக்க வேண்டும்” என்றும் சுப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், பல இனத்தவர்கள் வாழும் இந்நாட்டில் இத்தீபத்திருநாளானது அனைத்து மலேசியர்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மேலோங்குவதற்கு ஊன்றுகோலாக அமைய வேண்டும் என்றும், இதுவே ஒரு நாடு சுபிட்சமும் ஒற்றுமையும் அடைய முக்கிய அம்சமாகும் என்றார் அவர்.

ம.இ.காவின் தார்மீக மந்திரமான “ஒரே குரல்; ஒன்றே இலக்கு” என்பதற்கொப்ப இன வேறுபாடின்றி மிதவாதத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், அவ்வகையில், பண்பாட்டைப் பாதுகாத்து நேர்த்தியான முறையிலும் சமுதாய ஒற்றுமையையும் கடைப்பிடித்தும் இத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அவ்வகையில், ஒளிமிகும்  இத்திருநாளில், எல்லோரது வாழ்விலும் இன்ப ஒளி பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தித்திக்கும் இத்தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளத்தையும பெற்று இன்புற்று, பகைமை மறந்து, ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்தினை உரித்தாக்கிக் கொள்வதுடன் அனைவரும் சிறப்புடன் வாழ இறைவனையும் இறைஞ்சுகிறேன்” என்றும் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சுப்ரா தெரிவித்துள்ளார்.