சென்னை – நடிகர் கமல்ஹாசனுடன் கடந்த 13 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை விட்டுப் பிரிவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கௌதமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“நானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்கப் போவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன். 13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதை கருதுகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.”
“ஒரு குழந்தைக்குத் தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அந்த கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்து, எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்கு தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.”
“சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து, அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன். சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாக கருதுகிறேன்.”
“அவருடையை படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்று கொண்டு, அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.”
“இதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்து, அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளை புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால் அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்து தெரிவிக்க நான் காத்திருக்கிறேன்.”
“பல வகைகளில் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் நடப்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.”
“கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.” – இவ்வாறு கௌதமி தெரிவித்துள்ளார்.