கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை, தலைநகர் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற டத்தோ எஸ்.சோதிநாதன் அணியினர் மீண்டும் மஇகாவில் இணையும் நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்த இணைப்பின் மூலம் நியாயமாக அனைவரையும் அரவணைத்து, சரிசமமாக அவர்களைச் சமன்படுத்தும் கடமையின் பாரம் தனது தலைமைத்துவத்திற்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும் அந்தப் பொறுப்பை செவ்வனவே ஆற்ற, தான் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அதே வேளையில் நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்த நினைக்கும் வெளி சக்திகளிடம் இருந்து நாம் எச்சரிக்கையாக இருந்து வரவேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா அறைகூவல் விடுத்தார்.
சுப்ராவின் சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்
“நான் பல ஆண்டுகளாக சஷ்டி விரதம் இருந்து வருகின்றேன். இந்த ஆண்டும் இருக்கின்றேன். அந்த ஆறு நாள் விரதத்தின்போது வெறும் பால், பழம் மட்டுமே சாப்பிடுவேன். அதனால், எனது உரையில் தொய்விருந்தால் புரிந்து கொள்ளுங்கள்” என தனது உரையைத் தொடங்கிய சுப்ரா, நேற்றைய சனிக்கிழமை சூரசம்ஹாரப் போரின் இறுதி நாள் என்பதை நினைவுறுத்தி அதே போன்று இன்றுடன் மஇகாவின் அணிப் போரும் ஒரு முடிவுக்கு வருகின்றது என்று கூறினார்.
இணைப்பு விழாவில் சோதியின் உரை…
“இறுதி நாள் போரில், ஒரு மரமாக மறைந்து கொண்ட சூரபத்மனை தனது வேலால் இரண்டாகப் பிளந்து முருகப் பெருமான் அழித்தார். ஆனால் பின்னர் சூரபத்மனும் மற்றவர்கள் வேண்டியதற்கிணங்க, தன்னோடு போரிட்ட அவர்களை மயிலாகவும், சேவலாகவும் தன்னுடனே வைத்துக் கொண்டார். அதுபோல பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேரும், நம்முடன் இணையும் முக்கியமான நாள் இது” என்றும் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.
“இன்று சோதிநாதன் இணைந்தது முழுக்க முழுக்க கட்சியின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும்தான். நமது கட்சி 70 ஆண்டுகளுக்கு முன்னால் நமது முன்னோர்களால், நமது சமுதாய நலன் கருதி உருவாக்கப்பட்ட கட்சி. இதைப் பலவீனப்படுத்தவோ, சிதைக்கவோ நாம் யாருக்கும் உரிமையில்லை. கட்சியை மக்களுக்குப் பயன்படுத்தும் விதத்தில் நடத்திச் செல்வதற்குத்தான் நமக்கு உரிமை இருக்கின்றது. பல தலைவர்கள் இதற்கு முன்னால் இருந்து கட்சியை வழிநடத்தினார்கள். ஆனால், அவர்கள் இன்றில்லை. அதுபோல நானும் நிரந்தரமல்ல. ஆனால், கட்சி தொடர்ந்து இருக்கும்” என்றும் சுப்ரா கூறினார்.
பழனிவேலுவை 70-ஆம் ஆண்டு விழாவுக்கு வரவழைக்க பெருமுயற்சி எடுத்தோம்.
நிகழ்ச்சியின் இறுதியில் “கொட்டு முரசே” பாடலை அனைவரும் பாடினர்- சுப்ராவுடன் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல்
முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேல் மீது தனக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் இருப்பதாகவும், நடந்து முடிந்த மஇகாவின் 70-ஆம் ஆண்டு விழாவின்போது அவரையும் வரவழைத்துக் கௌரவிக்க பல முயற்சிகள் எடுத்ததாகவும் சுப்ரா தெரிவித்தார்.
“முன்னாள் தேசியத் தலைவர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதை வழங்க நான் விரும்பினேன். அவர் எங்கிருக்கிறார் என்பது கூட கண்டு பிடிக்க முடியாமல் பல நாட்கள் அலைந்து திரிந்து அவரது இருப்பிடம் கண்டு பிடித்து அழைப்பையும் சேர்ப்பித்தோம். ஆனால் அவரால் வர இயலவில்லை. தொடர்ந்து, அவருடன் தொடர்பு கொள்ளவும் அவருக்குரிய மரியாதையை வழங்கியும் வருவோம்” என்றும் சுப்ரா கூறினார்.
கட்சி பலவீனமல்ல என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவோம்
சுப்ராவுக்கு கட்சியில் இணைந்தவர்களின் மாலை அணிவிப்பு….
ஆரம்பம் முதல் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த, பல முயற்சிகளையும் எடுத்ததாகக் கூறிய சுப்ரா, நமது பலவீனத்தைப் பயன்படுத்தி மற்ற சக்திகள் இந்திய சமுதாயத்தின் அரசியல் தலைவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சி எடுப்பதாகவும், இன்றைய நமது ஒற்றுமையின் மூலம் அதனை முறியடித்து, நாம் பலவீனமானவர்கள் அல்ல என்பதையும், மஇகாதான் இந்தியர்களின் தாய்க் கட்சி என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.
வரப்போகும் பொதுத் தேர்தல் மஇகாவுக்கு மிகப் பெரிய சவால் என்றும் அந்தப் பொதுத் தேர்தலில் மஇகாவின் சக்தியை நிரூபிக்க நாம் அனைவரும் ஒன்றாக, ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் என்றும் சுப்ரா, மஇகாவினரைக் கேட்டுக் கொண்டார்.
-செல்லியல் தொகுப்பு