Home Featured நாடு “அரசாங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஜமால் யூனுசுக்கு வாழ்த்துகள்” – மகாதீர் கிண்டல்!

“அரசாங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஜமால் யூனுசுக்கு வாழ்த்துகள்” – மகாதீர் கிண்டல்!

1332
0
SHARE
Ad

Tun Mahathir

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை தனது ‘செ டெட்’ (Che Det) இணைய வலையத் தளத்தில் வரைந்த கட்டுரையில் “சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யூனுஸ், மலேசிய அரசாங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்டதற்கு” முன்னாள் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான துன் மகாதீர் முகமது கிண்டலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சிவப்பு சட்டைக்காரர்கள் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனக் கூறியிருப்பதன் மூலம் அவர்கள் கோலாலம்பூர் மாநகரசபையை கையிலெடுத்துக் கொண்டுள்ளார்கள் என்பது தெரிகின்றது. ஆனால் அன்று பெர்சே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கோலாலம்பூர் மாநகரசபை தடை செய்துள்ளது” என்று தனது கட்டுரையில் மகாதீர் சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என மிரட்டியுள்ளதைத் தொடர்ந்து சிவப்பு சட்டைக்காரர்கள் மறைமுகமாக அரசாங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டார்கள். மலேசியாவின் பிரதமராகத் தன்னை மறைமுகமாக பிரகடனப்படுத்திக் காட்டிக் கொண்டுள்ள ஜமாலுக்கு எனது வாழ்த்துகள்” என்றும் மகாதீர் கிண்டலாகத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய அமைதிக்கு பங்களிப்பை வழங்கும் வீதிப் போராட்ட பயங்கரவாதிகள் சிவப்பு சட்டைக்காரர்கள்” எனவும் மகாதீர் வர்ணித்துள்ளார்.

“வாழ்த்துகள் டத்தோ! எப்போது உங்களுக்கு டான்ஸ்ரீ கிடைக்கப் போகிறது?” என்றும் மகாதீர் ஜமாலை நோக்கி கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சிவப்பு சட்டை அணியினருக்கு ஜமால் தலைமை தாங்குகிறார்.

இன்றைய மலேசியா உருவாகியதற்கான காரணம் பிரிட்டிஷாருக்கு எதிரான வீதி ஆர்ப்பாட்டங்கள்தான் எனவும் மகாதீர் நினைவுறுத்தியுள்ளார். 1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் ஒப்பந்தங்களுக்கு எதிராக பொதுமக்களும், தலைவர்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதால்தான் இந்த ஒப்பந்தங்கள் பின்னர் பிரிட்டிஷாரால் கைவிடப்பட்டன என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படாவிட்டால் இன்றைய மலேசியா உருவாகியிருக்காது” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.