கோலாலம்பூர்- “லைப்ல என்ன வேணாலும் நடக்கலாம்.. ஆனா நாம அதுக்குத் தயாரா இருக்கோமாங்கிறது தான் கேள்வி” – முன்னோட்டத்தில் வரும் இந்த வசனம் படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியத்தையும் தாங்கி நிற்கிறது.
முதல் பாதி ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போல் ஒரு அழகான காதல் என்றால், இரண்டாம் பாதியில் ‘வேட்டையாடு விளையாடு’ போல் அதிரடியாகத் துப்பாக்கிச் சத்தங்களால் நகர்ந்திருக்கிறது படம்.
எம்பிஏ படித்து முடித்துவிட்டு அடுத்தது என்ன செய்யலாம்? என்று ஆர அமர யோசித்துக் கொண்டிருக்கும் சிம்புவின் வீட்டிற்கு அவரின் தங்கையின் தோழியாக வந்து அறிமுகமாகிறார் மகாராஷ்ட்ரா பெண்ணான மஞ்சிமா மோகன்.
பார்த்த முதல் பார்வையிலேயே இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போக, தனிமையான சந்தர்ப்பங்கள் பல அமைந்து, அவர்கள் இருவரும் பேசிப் பழக வாய்ப்பாக அமைகின்றது. ஒரு கட்டத்தில் மஞ்சிமா மோகன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
சிம்புவும் தான் வாங்கிய புது ராயல் என்ஃபீல்ட் பைக்கில் ஒரு நீண்ட பயணத்திற்குத் தயாராகிறார். ஆச்சர்யமாக மஞ்சிமா மோகனும் சிம்புவுடன் அந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்புகிறார். இருவரும் ஊரைச் சுற்றக் கிளம்புகிறார்கள்.
‘முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில், பின்னில் ஒரு பச்சைக்கிளி முதுகினில்’ கூடிய அந்த அழகான காதல் பயணத்தில் ஆபத்து ஒன்று பின்தொடர்ந்து வந்து தாக்குகிறது.
தாக்கியது யார்? காரணம் என்ன? வாழ்வா? சாவா? – இது தான் இரண்டாம் பாதி அச்சம் என்பது மடமையடா…
நடிப்பு
இரண்டாவது படத்திலும் கௌதம் மேனன் சொல்படி கேட்டு அவரது பாணியிலேயே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார் சிம்பு. என்ன? படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளை சிம்புவின் தோற்றத்தை வைத்தே நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சில காட்சிகளில் ரொம்ப இளமையாகத் தெரியும் சிம்புவின் முகம். அடுத்து வரும் காட்சிகளில் மிகவும் உப்பலாகத் தெரிகின்றது. என்றாலும், அப்படி இப்படி என்று படத்தொகுப்பில் ஒருவழியாகச் சமாளித்திருக்கிறார்கள்.
மஞ்சிமா மோகன்.. இயக்குநர் கௌதம் தமிழுக்கு கொண்டு வந்திருக்கும் இன்னொரு அழகி.. ஆடம்பரம் இல்லாத எளிமையான தோற்றம், குழந்தைத்தனம் கலந்த முகம் இவை இரண்டும் இப்படத்தின் லீலா கதாப்பாத்திரத்திற்கு சிறப்பாகப் பொருந்தியிருக்கிறது. அதேநேரத்தில், கண்களால் பேசுவதிலும், முகபாவனைகளிலும் அசரடிக்கும் நடிப்புத் திறமை கொண்டிருக்கிறார். முதல் பாதி முழுக்க மஞ்சிமா மோகனை வைத்து தான் கதை நகர்ந்திருக்கிறது.
படத்தில் இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரம் சிம்புவின் நண்பராக வரும் நடன இயக்குநர் சதீஷ். அவரது இருப்பு படத்தில் கதையினூடே வரும் நகைச்சுவைக்கும், பரபரப்பிற்கும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றது.
“மச்சான் .. சூப்பர் டா.. செம்ம..” என்று உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் சிம்புவை ஓடிச் சென்று கட்டியணைக்கும் காட்சியில் சதீஷுக்கு திரையரங்கே கைதட்டி ஆரவாரம் செய்கின்றது.
இவர்களோடு டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் பாபா செகல் ஆகியோரும் மிரட்டியிருக்கிறார்கள். எனினும் அவர்கள் இருவரையும் இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இன்னும் பரபரப்பு தொற்றியிருக்கும்.
திரைக்கதை
படத்தின் டைட்டில் கார்டிலேயே (பெயர்) படத்தின் கிளைமாக்ஸ் வரையிலான பல காட்சிகளை அதிவேகமாக ஓடவிட்டிருக்கிறார் கௌதம். ஆனால் கண்டிப்பாக அது நமக்குப் புரியாது. ஏதோ ஒன்று சூடாக ஆவி பறக்க பின்னால் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிர, முதலில் பரிமாறப்படும் காதலை நிதானமாக சுவைக்கத் தொடங்குகிறோம்.
எந்த குழப்பமும் இல்லாமல் முதல் பாதியும், இரண்டாம் பாதியும் நகர்கிறது. முதல் பாதியில் எப்படா சிம்பு காதலை சொல்லுவாரு? என்று ரசிகர்கள் ஏங்க.. இரண்டாம் பாதி யாரு டா இவ.. என்ன தான் நடக்குது? என்று மஞ்சிமாவுக்குப் பின்னால் சொல்லப்படும் மர்மங்களைப் பற்றி அறிய ஆவல் பிறந்துவிடுகின்றது.
குறிப்பாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் மிகவும் சிறப்பு. அதில் மனதளவில் அவ்வளவு நெருக்கம் காட்டியிருக்கும் இயக்குநர் இருவருக்கும் இடையில் நாகரீகமான இடைவெளியை காட்டி காதலின் மேன்மையை உணர்த்தியிருக்கிறார்.
ஆனால், கடைசியாக சிம்புவின் திடீர் சூப்பர் ஹீரோயிசம் அவதாரம் தான் சற்றே நெருடுகிறது. அதிலும் தொடக்கம் முதல் சிம்புவின் பெயரைச் சொல்லாமல் அதில் ஒரு சுவாரசியம் வைத்து கடைசியில் கூறும் ‘அந்த’ பெயர் சிம்பு கதாப்பாத்திரத்தின் மீதான பார்வையை தடாலடியாக மாற்றி ரசிகர்களை நெளிய வைக்கிறது.
மற்றபடி, ஹீரோவின் தங்கை மூலமாக ஹீரோயின் அறிமுகம், ஹீரோவின் பருவ வயது காதல் தோல்விகள், அழகான அப்பா அம்மா, கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் என கௌதமின் படத்தில் வரும் வழக்கமான சுவாரசியங்கள் இப்படத்தில் இடம்பெறத் தவறவில்லை.
‘தள்ளிப் போகாதே’ – பாடல் வைக்கப்பட்ட இடமும், பாடல் காட்சியும் அருமை..
ஒளிப்பதிவு, இசை
டேன் மெக்கார்தர் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளீச் இரகம். குறிப்பாக சாலையில் பைக் செல்லும் காட்சிகள், இரவு வெளிச்சங்கள், கன்னியாகுமரி என அனைத்தும் அழகு.
ஏஆர் ரஹ்மானின் இசை பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் அனைத்தும் மிகப் பிரபலம். படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டியதில் இசை முக்கியப் பங்கு வகித்தது. திரையிலும் பின்னணி இசையும், பாடல்களும் மிகச் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டு மிகவும் ரசிக்க வைக்கின்றன.
குறிப்பாக, ‘ராசாளி’ பாடலில் இடம்பெறும் இலக்கிய நயம் கொண்ட அழகான பாடல் வரிகளை எழுதியுள்ள பாடலாசிரியர் தாமரைக்கு இந்த ஆண்டு விருதுகள் பல காத்திருக்கின்றன.
மொத்தத்தில், ‘அச்சம் என்பது மடமையடா’ – காதலும், மர்மமும் நிறைந்த திகில் பயணம்! திரையரங்கு சென்று பார்த்து ரசிக்க நிறைய சுவாரசியங்கள் உள்ளன. குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்ற படம்.
-ஃபீனிக்ஸ்தாசன்