கோலாலம்பூர் – இயல்பாகவே பலவீனமான மலேசியப் பொருளாதாரத்தின் தாக்கத்தால், மலேசிய ரிங்கிட், அனைத்துலக நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகளும் சேர்ந்து கொள்ள, இன்று வெள்ளிக்கிழமை ரிங்கிட்டின் மதிப்பு மேலும் சரிந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிராக 4.40 ரிங்கிட் என்ற மதிப்பில் இன்று ரிங்கிட்டின் நாணய பரிமாற்ற வீழ்ச்சி இருந்தது. ஜனவரி 22-ஆம் தேதிக்குப் பின்னர் மிக மோசமான சரிவாக இது கருதப்படுகின்றது.
இருப்பினும், இன்று பேங்க் நெகாராவின் 2016-ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது தொடர்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பேங்க் நெகாராவின் ஆளுநர் (கவர்னர்) டத்தோ முகமட் இப்ராகிம் அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் மதிப்பு நிரந்தரமாக நிர்ணயிக்கப்படாது என்று தெரிவித்தார்.