Home One Line P2 அரசியல் குழப்பத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சி – ரிங்கிட் மதிப்பும் பலவீனமடைந்தது

அரசியல் குழப்பத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சி – ரிங்கிட் மதிப்பும் பலவீனமடைந்தது

807
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று முதல் நாட்டில் நிலவி வரும் அரசியல் குழப்பங்கள், இன்று பிற்பகலில் துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியது – பெர்சாத்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல் – ஆகிய நடப்புகளைத் தொடர்ந்து கோலாலம்பூர் பங்குச் சந்தை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான முறையில் வீழ்ச்சியடைந்தது.

கோலாலம்பூர் பங்குச் சந்தை குறியீடு இன்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் 38.94 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 1,492.26 புள்ளிகளாக இருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி 1,500.91 புள்ளிகளாக கோலாலம்பூர் பங்குச் சந்தை இருந்ததற்குப் பின்னர் இப்போதுதான் ஆகக் குறைந்த புள்ளிகளுடன் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதாவது 1,500 புள்ளிகளுக்கும் குறைவான நிலைமையை அடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 1,531.20 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை இன்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்டபோது, 41.14 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

#TamilSchoolmychoice

நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கும் பங்குச் சந்தை கீழிறங்கியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை மீட்டுக் கொள்ள முனைப்புக் காட்டத் தொடங்கியதால் இந்த வீழ்ச்சி தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2011 முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான வீழ்ச்சியை கோலாலம்பூர் பங்குச் சந்தை சந்தித்துள்ளது.

மலேசிய ரிங்கிட் மதிப்பும் சரிவு

இதற்கிடையில் மலேசிய ரிங்கிட் மதிப்பும் அரசியல் குழப்பங்களாலும், கொவிட்-19 விவகாரத்தாலும், எண்ணைய் விலை சரிவு,  சரிவைச் சந்தித்தது.

ஒரு சிங்கப்பூர் டாலருக்கு ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட்டுக்கும் கூடுதலாக பரிவர்த்தனை செய்யப்பட்ட அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.0101 ரிங்கிட் என்ற அளவுக்கு நாணயப் பரிவர்த்தனையில் ரிங்கிட் மதிப்பு பலவீனமடைந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இதுவே ரிங்கிட்டின் குறைந்த மதிப்பாகும்.

அமெரிக்க டாலருக்கும் எதிராகவும் ரிங்கிட் பலவீனமடைந்தது. ஓர் அமெரிக்க டாலருக்கு 4.20 ரிங்கிட் என்ற அளவில் நாணயப் பரிவர்த்தனை இன்று நடைபெற்றது. பிற்பகல் 3.11 மணியளவில் ஓர் அமெரிக்க டாலருக்கு 4.2250 ரிங்கிட் பரிவர்த்தனை என்ற அளவில் ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.