Home Featured கலையுலகம் ஏழைகளுக்கு உதவுமாறு விஜய்க்கு அறிவுரை!

ஏழைகளுக்கு உதவுமாறு விஜய்க்கு அறிவுரை!

853
0
SHARE
Ad

vijayசென்னை – 20 விழுக்காடு பணக்காரர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி முடிவால், எஞ்சியிருக்கும் 80 விழுக்காடு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகர் விஜய் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜய் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே நல்ல விஷயம் தான். நல்ல முடிவு தான். நம் நாட்டுக்குத் தேவையான, துணிச்சலான, வரவேற்கக்கூடிய ஒரு முயற்சி தான். கண்டிப்பாக இது நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

#TamilSchoolmychoice

“ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த பாதிப்புகள், நோக்கத்தை விட அதிகமாக ஆகிவிடக்கூடாபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்”

“ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரை கூட வாங்க முடியாமல் சிரமப்படுவதாகச் சொல்கிறார்கள். அதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.”

“நாலைந்து நாட்களாக இருந்த அந்த பதற்ற நிலை இப்ப குறைந்து வருவதாகவும் சொல்கிறார்கள். சிறுதொழில், தியேட்டர்கள், மார்க்கெட் போன்றவைகளும் இதனால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், “20% பேர் பணக்காரர்கள் இருப்பார்களா நாட்டில்? அதில் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக மீதமுள்ள 80% மக்கள் என்ன செய்வார்கள்?” என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

500, 1000 ரூபாய் தாள்கள் இனி செல்லாது என திடீரென மோடி அறிவித்தது நாடெங்கிலும் பல்வேறு குழப்பநிலையை ஏற்படுத்தியது. இதில் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் தங்களிடம் இருந்த சொற்ப பணத்தை மாற்ற வழியில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

எனினும், இத்திட்டத்திற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் மோடியைப் பாராட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விஜயின் கருத்துக்கு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உடனடியாக பதில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை அந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் அவர்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும்.”

“அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொதுவெளியில் வந்து ஏழை எளிய மக்களின்  கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்னைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள நடவடிக்கையை நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்கு கிலி ஏற்பட்டுள்ளது’’ என்று வானதி தெரிவித்துள்ளார்.