கோலாலம்பூர் – இசை நிகழ்ச்சிகள் என்றாலே செவிகளுக்கு விருந்துதான். அதிலும் ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் போட்டி என்றாலே மிகப் பெரிய கொண்டாட்டம் தான். இந்த நிகழ்ச்சியானது, கடும் சவால்கள் நிறைந்த தளத்தில், புதிய திறமைசாலிகளைக் கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதுதான்.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் போட்டி நமது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இவ்வருடம் அதன் 16வது வருடத்தைத் தொடுகிறது. “பாடல் திறன் போட்டி” எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த உள்ளூர் பாடல் போட்டி, 16 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்கள் பெற்று இப்போது “சூப்பர் ஸ்டார் என்றும்16” ஆக உருவெடுத்து மலேசிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்கிறது.
சுவாரசியமான அனுபவங்களோடு 10 வாரங்களை கடந்து விட்ட நமது இசைப் போரின் இறுதிச் சுற்று இன்று சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி மாலை 8 மணிக்கு ஷா ஆலாம்-இல் அமைந்துள்ள ராஜா மூடா மூசா அரங்கில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் அலெக்ஸ் ராவ் ராஜூ, 26 (சிலாங்கூர்), குமரேஷ் கமலக்கண்ணன், 22 (கோலாலம்பூர்), நாராயினி பாலசுப்ரமணியம், 24 (பினாங்கு), போமதிபிரியா சுரேஷ், 20 (பேராக்), சிந்திஹஸ்னி ஆறுமுகம், 22 (சிலாங்கூர்) மற்றும் ரூபன் ராஜ் சாமுவேல், 23 (பேராக்) ஆகியோர் களமிறங்குகின்றார்கள்.
முதல் இடத்தை வெல்லும் அந்த வெற்றியாளருக்கு ஹோண்டா எச்ஆர்வி (Honda HRV) மற்றும் ரொக்கப்பரிசு ரிங்கிட் 20,000 காத்திருக்கிறது. இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு ரொக்கப்பரிசு ரிங்கிட் 15,000, மூன்றாம் நிலையில் வரும் வெற்றியாளருக்கு ரொக்கப்பரிசு ரிங்கிட் 10 000 வழங்கப்படவுள்ளது.
மூன்று பிரிவுகளாக நடைபெறவிருக்கும் இந்த இறுதிச்சுற்று மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு இடையில் நமது உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளும் இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.
நாம் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இறுதிச் சுற்றின் நேரலை, எதிர்வரும் சனிக்கிழமையன்று (19.11.2016) ஆஸ்ட்ரோ விண்மீன் HD (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), மற்றும் ஆஸ்ட்ரோ ஒன் தி கோ (AOTG) -இல் இரவு 8 மணிக்கு ஒளியேறவிருக்கிறது.
இந்த இசை விருந்தில் குடும்பத்தோடு இணைய மறவாதீர்கள்.