சென்னை – இன்று வெள்ளிக்கிழமை மாலை அப்போல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி விடுத்துள்ள அறிக்கையொன்றில், “ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவிகள் துணையின்றி இயல்பாக சுவாசிக்கின்றார். எப்போது வேண்டுமானாலும் அவர் இல்லம் திரும்பலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒவ்வொரு நாளும் சுமார் 15 நிமிடங்கள் மட்டும் செயற்கை சுவாசக் கருவியின் மூலம் அவர் சுவாசம் செய்ய வைக்கப்படுகின்றார் என்றும் அதற்குக் காரணம் அதன் மூலம் அவரது நுரையீரல்கள் நன்கு விரிவடைந்து செயல்பட முடியும் என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
“இன்னும் அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம், அவரது நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக இருப்பதால், தொற்று கிருமிகள் அவரை மீண்டும் பாதிக்கக் கூடும் என்ற அச்சம்தான்” என்றும் பிரதாப் ரெட்டி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 முதல் மருத்துவமனையில் இருந்து வரும் ஜெயலலிதா தற்போது ஆலோசனைகளும், உத்தரவுகளும் வழங்கும் நிலையில் இருக்கின்றார் என்றும் அவரது நினைவாற்றலும், செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கின்றன என்றும் கூறியுள்ள பிரதாப் ரெட்டி, முதல்வராக மீண்டும் அவர் செயல்பட தகுதியான உடல் நிலையில் இருக்கின்றார் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவரது சில உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னேற்றம் காணும் வகையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் மேலும் பிரதாப் ரெட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.