சென்னை – எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி 123 பேரிடம் 83 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படும் சினிமா பட அதிபர் மதனை இன்று புதன்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.
கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வட இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவரை, பலக்கட்ட தேடலுக்குப் பிறகு திருப்பூரில் வைத்து காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில், இந்த மோசடி குறித்து அவரிடம் முழு விசாரணை நடத்த 10 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வேண்டும் என இன்று நீதிமன்றத்திடம் காவல்துறை கோரிக்கை வைத்தது. ஆனால், மதன் தரப்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நீதிமன்றம் அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து வரும் நவம்பர் 29-ம் தேதி வரையில், மதனை காவல்துறை விசாரணையில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மதன் அந்த 85 கோடி ரூபாய் பணத்தை எங்கே வைத்திருக்கிறார்? எங்கெல்லாம் சொத்துகள் வாங்கியிருக்கிறார் போன்றவற்றை அறிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.