நீலாய் – தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அருகாமையில் அமைந்திருக்கும் மலாய் பள்ளியில் தஞ்சம் அடைந்து பயின்று வரும் நிலைமையைப் போக்கும் வகையில் கூடிய விரைவில் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் அமையும் என்றும், அரசாங்கம் அளித்துள்ள நிதியினைக் கொண்டு முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் இந்த பள்ளியின் பரிசளிப்பு விழாவிற்கு வருகை புரிந்திருந்த மஇகாவின் தேசிய உதவித் தலைவரும், மிஃபா எனப்படும் மலேசிய இந்திய காற்பந்து சங்கத்தின் தலைவருமான டத்தோ டி.மோகன் (படம்) கூறினார்.
“இந்தப் பள்ளியின் சூழலைப் பார்க்கையில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள் ஆகியோரின் இன்னல்களை உணர முடிகிறது. இந்த நிலைமை தொடராமல் இருக்க வேண்டுமானால் நாம் உடனடியாக கட்டிட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அவர்கள் இந்தப்பள்ளியை பார்வையிட்டதோடு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் பணித்துள்ளார். சில காரணங்களினால் இந்தப்பள்ளியின் வேலைகள் தள்ளிப்போன நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் வழி வழங்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்த கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி வாரியமும் இணைந்து புதிய கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டும்” எனவும் மோகன் மேலும் கேட்டுக் கொண்டார்.
நீலாய் தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப் பள்ளிக்கு வருகை தந்த டி.மோகன் பள்ளியைச் சுற்றிப் பார்த்தபோது….
இந்தப்பள்ளியின் கணக்கில் 4 லட்சத்து பத்தாயிரம் வெள்ளி இருக்கின்ற நிலையில் முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்காமல் இழுத்தடிப்பு செய்தால் இந்தப்பள்ளிக்கு கட்டிடம் அமைவது கேள்விக்குறியாகி விடும். சில நேரங்களில் சமுதாய நலன் சார்ந்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கஷ்டமான சூழலிலும் நன்றாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாது தனிப்பட்ட முறையிலும் பல திறமைகளை உள்ளடக்கியிருக்கிறார்கள். அத்தகையை நிலையில் இவர்களுக்கு நல்லதொரு சூழலை அமைத்துக்கொடுக்க வேண்டியது நமது கடமை” என்றார் டி.மோகன்.
நீலாய் தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப் பள்ளியின் தோற்றம்….
“பள்ளியின் தலைமையாசிரியர் அக்னஸ்செல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சங்கர், பள்ளியின் வாரியக்குழுத்தலைவர் மூர்த்தி, கட்டிட குழுத்தலைவர் நாகமுத்து மற்றும் மா.ஆறுமுகம் ஆகியோர் பள்ளியின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்” என்றும் கூறிய மோகன், பள்ளியின் நலன் கருதியும், சமுதாயத்திற்காகவும் எனது நிலைப்பாட்டில் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் உறுதி கூறினார்.
இந்தப்பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் டி.மோகன் அவர்கள் எடுத்து வழங்கியதோடு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.