Home Featured நாடு ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலி! விடுபட்டுப் போன அவரது சில ஆளுமைகள்!

ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலி! விடுபட்டுப் போன அவரது சில ஆளுமைகள்!

1563
0
SHARE
Ad

karthigesu-re-decd

கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 21) மாலை தலைநகரில் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது சிறப்பான சில ஆளுமைகளையும், சாதனை முகங்களையும் வந்திருந்தவர்களுக்கு எடுத்துக் காட்டியது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததோடு, ரெ.கார்த்திகேசு குறித்த அவரது நினைவலைகளை ஆவணப் படங்கள் மூலமும், காணொளிகள் மூலமும் எடுத்துக் காட்டியிருந்தனர்.

#TamilSchoolmychoice

re-karthigesu-memorial-meet-21-nov

கூட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டவர்களில், ரெ.கா.வின் நட்புக் குழாமும், இலக்கிய ரசிகர்களும், சக படைப்பாளர்களும் குடும்பத்தினர்கள், உறவினர்களும் அடங்கியிருந்தனர்.

அவரது குடும்பத்தில் அவரது மகனே ஒரு சிறந்த சித்தார் கலைஞராக உருவெடுத்திருக்கிறார் என்ற தகவலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு புதிதாக இருந்திருக்கும்.

இரங்கல் உரை ஆற்றியவர்களில், கலந்து கொண்டவர்களில், அமைச்சர், துணையமைச்சர், இந்தியத் தூதர், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் (கிம்மா) என இந்திய சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்கள் இருந்தனர் என்பதிலிருந்து ரெ.கா.வுக்கு சமூகத்தில் இருந்த மதிப்பும், மரியாதையும் புலப்பட்டது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ரெ.கா. துணைத் தலைவராகப் பதவி வகித்தபோது, ஆற்றிய பணிகள், அவருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவருக்காக எடுக்கப்பட்ட பாராட்டு விழா, அவரது இலக்கியப் படைப்புகள் மீதான கருத்தரங்கம், ஆகியவை விரிவான முறையில் இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

அந்த வகையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் முன்னாள் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கும் அவரது குழுவினருக்கும், பாராட்டுகள்!

விடுபட்டுப் போன ரெ.கா.வின் சில முகங்கள் – ஆளுமைகள்

karthigesu-reka-sellinam-photoஇருப்பினும், ரெ.காவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் விடுபட்டுப் போன அவரது குறிப்பிடத்தக்க மேலும் சில இலக்கிய ஆளுமைகளையும், அவரது தனிப்பட்ட திறன்களையும், ஆற்றல்கள், சாதனைகள் குறித்தும் இங்கே சுட்டிக் காட்டுவது, பொருத்தமாக இருக்கும் என்பதோடு, அவருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும் எனக் கருதுகின்றோம்.

இங்கே நாம் கூறியிருக்கின்ற கருத்துகள் நமது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமன்று. ரெ.கா.வின் அந்த அம்சங்கள் நினைவஞ்சலிக் கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் பிரதிபலித்த, பகிர்ந்து கொண்ட  ஆதங்கங்களைத்தான் நாமும் இங்கே பதிவு செய்துள்ளோம்.

ரெ.கார்த்திகேசு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவி வகித்ததும், அந்த சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியதும், அவருக்காக, அவர் வாழும் காலத்திலேயே அவருக்குப் பாராட்டு விழா எடுத்தது – என இவை அனைத்தும் அவருக்குப் பெருமை சேர்ப்பவை, ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தில் நினைவுகூரத்தக்கவை என்றாலும், இவை மட்டுமே ரெ.கா.வின் முகங்கள் அல்ல! இவை மட்டுமே அவருக்குப் பெருமை சேர்த்தவை அல்ல!

இதையும் தாண்டி அவருக்கென சில திறன்கள், ஆளுமைகள் இருந்தன.

karthigesu-re-decdஅவையும் பாராட்டப்பட வேண்டிய, ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தில் முன் வைக்கப்பட வேண்டிய அம்சங்கள்தான். அவற்றையும் இணைத்திருந்தால், நினைவஞ்சலிக் கூட்டம் மேலும் முழுமையடைந்திருக்கும், நிறைவாக இருந்திருக்கும் என்பது நமது கருத்து.

ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் என்னும்போது, பல பேச்சாளர்கள் பேச வேண்டிய கட்டாயம் இருக்கும்போது, அதற்கான ஏற்பாட்டு விவகாரங்களில் பல இடையூறுகள் இருக்கும்போது, சில விஷயங்கள் விடுபட்டுப் போவது இயல்புதான்.

எனவே, நாம் குறிப்பிடுகின்ற விஷயங்களை நிகழ்ச்சி குறித்த குறையாகக் கொள்ளாமல், அடுத்து வாய்ப்புகள் அமையுமானால், ரெ.கா.குறித்த அவரது இந்த விடுபட்ட ஆளுமைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமோ, ரெ.கா.வின் சாதனைகளை முறையாகப் பதிவு செய்ய விரும்புகின்ற இயக்கங்களோ தனிநபர்களோ கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை நாம் கூறுகின்றோம்.

நேற்றைய நினைவஞ்சலிக் கூட்டத்தில் விடுபட்டுப் போன ரெ.காவின் சில முக்கிய ஆளுமை அம்சங்களில் சில:-

  • இலக்கிய சக படைப்பாளிகளின் நினைவஞ்சலி

நினைவஞ்சலிக் கூட்டத்தில் இரங்கல் உரை ஆற்றியவர்கள் ஏறத்தாழ அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருந்தார்கள். தவறில்லை. இதுவும் ரெ.காவுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்தான்.

Karthigesu Signatureஆனால், ரெ.கா.வுக்கு இருந்தது அரசியல் முகமோ, சமூகப் போராளி முகமோ அல்ல! இலக்கிய முகம்.

அவரது சக இலக்கியப் படைப்பாளி ஒருவரை அழைத்து அவரது கோணத்தில் ரெ.கா.வின் இலக்கியம் மீதான உழைப்புகளை, உணர்வுகளை பிரதிபலித்திருக்கலாம்.

அவரது நீண்ட கால நண்பரும், இலக்கியப் படைப்பாளரும், சக வானொலி பிரபலமுமான மைதீ.சுல்தான் நினைவஞ்சலிக் கூட்டத்தில்  உரையாற்றினாலும், அவரது உரை ரெ.காவுக்கென வழங்கப்பட்ட கவிதாஞ்சலியை மையமிட்டிருந்தது.

  • ரெ.கா.வின் கவிதை முகம்

உரைநடை எழுத்தாளராகவும், விமர்சகராகவும் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்ட ரெ.கா. கவிதையும் எழுதியவர். ‘வானம்’ என்ற புனை பெயரில் அவர் கவிதைகளும் எழுதியதாக பத்திரிக்கையில் படித்தேன். அதனையும் சுட்டிக் காட்டியிருந்தால், அவரது இலக்கிய ஆளுமையின் இன்னொரு வடிவமும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

  • ரெ.கா.வின் வானொலி பங்களிப்பு

வானொலியில் நீண்ட காலம் பணியாற்றி சில பங்களிப்புகளையும் செய்தவர் ரெ.கா. அது குறித்து மின்னல் பண்பலை சார்பில் அதன் பொறுப்பாளர் குமரன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றினாலும், ரெ.கா.வுடன் பணியாற்றிய சக பணியாளர் ஒருவரின் மூலமாக அவரது வானொலித் துறை பங்களிப்புகளை பதிவு செய்திருக்கலாம்.

  • ரெ.கா.வின் கல்வி ஆளுமைகள்

ரெ.கா. மாஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற பொதுமக்கள் தகவல் தொடர்பு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் முனைவர் பட்டமும் பெற்றவர்.

இன்று மிக விரிவடைந்து பிரபலமாக இந்த  தகவல் தொடர்புத் துறை இருந்தாலும், அன்று இந்தத் துறை நமது நாட்டில் அறிமுகம் கண்டபோது, அந்தத் துறையில் உயர்நிலைப் பட்டங்கள் பெற்ற முதல் சில நபர்களில் ரெ.கா.வும் ஒருவர்.

எனவே, அவரது பினாங்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் பணிகள் குறித்த பங்களிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாநாடுகளில் ரெ.காவின் பங்களிப்பு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டுவதற்கு முன்பே, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அனைத்துலக மாநாடுகளில் ஈடுபாடு காட்டியதோடு, சில பங்களிப்புகளும் செய்தவர் ரெ.கா. தமிழ் நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு ஒன்றில், டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தலைமையின் கீழ், மலேசியப் பேராளர் குழுவுக்கு  செயலாளராகவோ முக்கியப் பொறுப்பு ஒன்றிலோ அவர் பணியாற்றியதாக நினைவு. இதையும் பதிவு செய்திருக்கலாம்.

  • கணினித் துறை ஈடுபாடு

தமிழ் எழுத்தாளர்களில் கையால் எழுதுவதை விட்டுவிட்டு, கணினி மூலம் தனது படைப்புகளை உள்ளீடு செய்து படைத்து வந்தவர் ரெ.கா. கணினி அறிமுகமான காலத்திலேயே தொடங்கிய அவரது இந்த ஈடுபாடு, இன்றும் கையால் எழுதிக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.

karthigesu-re-feature

நமது நாட்டின் முன்னணி எழுத்தாளரான கோ.புண்ணியவான் செய்திருந்த ஒரு பதிவில், கணினியில் எழுத்துக்களை உள்ளீடு (டைப்) செய்யுமாறு ரெ.கா. தன்னை பல முறை வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது சக மலேசிய இலக்கியப் படைப்பாளர்களின் மீதும் அவர்களின் உற்பத்தி மற்றும் படைப்பாற்றல் திறன் மீதும் ரெ.கா.அக்கறை காட்டியவர் என்பதும் இதுபோன்ற பதிவுகளின் மூலம் வெளிப்படுகின்றது.

ரெ.கா.கணினி பயன்படுத்தத் தொடங்கி ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்துதான் தானும் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும், அதன்பின்னரே அதன் வலிமையைத் தான் உணர்ந்ததாகவும், படைக்கும் திறனில் தான் ஒரு பந்தயக் குதிரையாகவும் மாறியதாகவும் கோ.புண்ணியவான் நன்றியுடன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், சக எழுத்தாளர்களை ஊக்குவித்ததிலும், அவர்களின் பல நூல்களுக்கு விமர்சனங்கள் வரைந்து தந்ததிலும் ரெ.கா.வின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை  செல்லியலில் உலகக் கிண்ண காற்பந்து செய்திகள் சிறப்பாக வெளியிடப்பட்டது குறித்து தனது பாராட்டுதல்களை – மின்னஞ்சல்  மூலமாகவே தெரிவித்தவர் ரெ.கா.

  • முரசு அஞ்சல் மென்பொருளின் முதல் பயனர்

கணினி போன்றே, மின்னுட்பத் துறையிலும் (டிஜிடல்) தமிழ் மொழி விரிவடைந்தபோது, அதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டியவர் ரெ.கா.

முரசு அஞ்சல் மென்பொருளை அதன் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் அறிமுகப்படுத்தியபோது, அதன் முதல் பயனராக முன்வந்து அதற்குரிய விலை கொடுத்து வாங்கி, தனது ஈடுபாட்டைக் காட்டியவர் ரெ.கா. என முத்து நெடுமாறனே முரசு அஞ்சலின் 30-ஆம் ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பதிவு செய்திருந்தார்.

ரெ.கா.வும் முரசு அஞ்சல் பயன்படுத்தியது குறித்து, முரசு அஞ்சலின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார்.

தனது எழுத்துப் படிவங்களை கணினி மூலம் உள்ளீடு செய்ததோடு, தான் படைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனைத்துலக அரங்குகளுக்கு மின்வடிவிலேயே, நவீன தொழில்நுட்பங்களோடு கொண்டு சென்றவர் ரெ.கா. என்றும் முத்து நெடுமாறன் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

  • மின்னூல்கள் வடிவாக்கத்தில் ரெ.கா.வின் ஈடுபாடு

அது மட்டுமல்லாமல், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில், நமக்குத் தெரிந்து முதன் முறையாக தனது படைப்புகளை மின்னூல் வடிவத்தில் (இ-புக்) இணையத்தில் பதிவேற்றம் செய்தவர் ரெ.கா.என்பதும் அதனை வடிவமைத்துத் தந்தவர் முத்து நெடுமாறன் என்பதும், பதிவு செய்யப்பட வேண்டிய மற்றொரு வரலாற்றுக் கூறு.

Karthigesu-Re Ka-function banner

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய ரெ.கா.வின் படைப்பிலக்கியக் கருத்தரங்கில் ரெ.காவின் இந்த மின்னூல் பதிவேற்றம் ஓர் அங்கமாக இடம் பெற்றது என்பதும், இதன் மூலம் ஒரு மலேசியாவில் மின்னூல் பதிவேற்றத்தில் ஒரு முன்னோடியாக ரெ.கா. திகழ்ந்திருக்கின்றார் என்ற மிக முக்கியமான பதிவும் நினைவஞ்சலிக் கூட்டத்தில் முன்வைக்கப்படாமல் போனதால், அதனைச் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகின்றது.

எதிர்கால எழுத்துலகம், அது எந்த மொழியைச் சார்ந்ததாக இருப்பினும், இணையம், மின்னுட்பம், மின்னூல் என்ற தளங்களில்தான் இனி இயங்கப் போகின்றது என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பு.

அந்த வகையில், எதிர்கால மலேசியத் தமிழ் எழுத்துலகம் தனது வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, மின்னூல் பயன்பாட்டை, அறிமுகப்படுத்தும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ரெ.கா. என்பதை வரலாறு கூறும்.

நமது கருத்தில் பட்ட மேற்கூறப்பட்ட அம்சங்கள் தவிர்த்து ரெ.கா.வுக்கு மேலும் சில முகங்களோ, ஆளுமைகளோ இருந்திருக்கலாம்.

இனிவரும் காலங்களில், எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டுக்காக, ஆவணங்களாக அவை பதிவு செய்ய்யப்பட வேண்டியதும் அவசியமாகும்.

ஓர் எழுத்தாளரின் எழுத்துப் படிவங்கள் எதிர்கால சந்ததியினருக்காகவும், நமது நாட்டின்  இலக்கிய  வரலாற்றுக்காகவும் ஆவணப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த எழுத்தாளர்கள் குறித்த பின்புலங்களும், முகங்களும், ஆளுமைகளும்,  சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டியதும் முக்கியமாகும்.

-இரா.முத்தரசன்