Home Featured நாடு அரசியல் கேலிச்சித்திர ஓவியர் சுனார் கைது!

அரசியல் கேலிச்சித்திர ஓவியர் சுனார் கைது!

990
0
SHARE
Ad

zunar-cartoonist

ஜோர்ஜ்டவுன் – எதிர்க்கட்சி ஆதரவாளரும், பிரபல கேலிச்சித்திர ஓவியருமான சுனார் என்று அழைக்கப்படும் சுல்கிப்ளி அன்வார் உல்ஹாக் (படம்) பிரதமர் நஜிப் துன் ரசாக்கை கேலி செய்யும் விதத்தில் கேலிச்சித்திரங்களை வரைந்து ஓவியக் கண்காட்சி நடத்தியதற்காக தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கு கொம்தார் கட்டிடத்தில் அவர் தனது ஓவியக் கண்காட்சியை நடத்தி வந்தார். அவரது கேலிச்சித்திர ஓவியங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

குற்றவியல் பிரிவு 504-இன் கீழ், அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே மற்றொருவரை அவமதித்த காரணத்திற்காகவும் சுனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினர் சுனார் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ்.என்.ராயர் சுனாரை வழக்கறிஞராகப் பிரதிநிதிக்கின்றார்.

சுனார் இன்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

zunar-cartoonist-receiving-award-from-kofi-annan

இந்த ஆண்டின் மே மாதத்தில் ஜெனிவாவில் முன்னாள் ஜ.நா.செயலாளர் கோஃபி அன்னானிடம் இருந்து உலக அமைதிக்கான கேலிச்சித்திர ஓவியருக்கான விருது சுனாருக்கு வழங்கப்பட்டபோது…

சுனார் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது இது 10-வது முறையாகும். தேச நிந்தனை சட்டத்தின் கீழ் ஏற்கனவே 9 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் சுனாருக்கு, அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 43 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கக் கூடும்.

வெளிநாடு செல்வதற்கும் ஏற்கனவே சுனாருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்று சுமார் 30 பேர் கொண்ட அம்னோ குழுவினர் சுனாரின் ஓவியக் கண்காட்சியில் அத்துமீறி நுழைந்து கலவரம் புரிந்ததோடு, சுனாரின் கேலிச் சித்திரங்கள் சிலவற்றையும் உதைத்து சேதப்படுத்தினர்.

அவர்கள் தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் சுனார் குற்றம் சாட்டியிருந்தார்.

ஜோர்ஜ்டவுன் இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக சுனாரின் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு 20 வெளிநாடுகளில் இருந்து சுமார் 60 பங்கேற்பாளர்கள் வருகை தந்துள்ளனர்.

சுனார் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென ஜோர்ஜ் டவுன் இலக்கிய விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.