கோலாலம்பூர் – அரசியல் கேலிச்சித்திர ஓவியர் (கார்ட்டூனிஸ்ட்) சுனார் என்ற சுல்கிப்ளி அன்வார் உல்ஹாக் இன்று சனிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் “சுனாருடன் தேநீர்” என்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சாதாரண உடையிலிருந்த ஐந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
சுனார் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டபோது…
இன்று பிற்பகல் 4.00 மணியளவில், சுனாரை அணுகிய காவல் துறையினர் இந்த நிகழ்ச்சியை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றும் நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்றும் அவரிடம் தெரிவித்ததாக சுனாரின் மனைவி ஃபாஸ்லினா ரோஸ்லி தெரிவித்ததாக மலேசியாகினி செய்தித் தளம் தெரிவித்தது.
தற்போது அவர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொண்டதற்காக குற்றவியல் பிரிவு 124 (C) -இன் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கேலிச்சித்திரங்கள் அடங்கிய 1000 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அதனால் சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாருடன் சேர்த்து, சமூக இயக்கவாதி லாரன்ஸ் ஜெயராஜ் என்பவரும், ஜசெக உறுப்பினர் ஜேம்ஸ் வோங் என்பவரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.