ஜோர்ஜ் டவுன் – நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கேலிச்சித்திர ஓவியர் சுனார் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சுனார் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவரது இயற்பெயர் சுல்கிஃபி அன்வார் உல்ஹாக் என்பதாகும்.
பிரதமர் நஜிப் துன் ரசாக்கை அவமதிக்கும் கேலிச் சித்திரங்களை வரைந்து அவற்றைக் கொண்டு ஓவியக் கண்காட்சி நடத்திய அவர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவர் நடத்தவிருந்த அவரது நூல் வெளியீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட சுனார் (நடுவில் ஆரஞ்சு வண்ண பையுடன்). உடன் இருப்பவர்கள் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான ராயர், நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு….
நேற்று மாலை கைது செய்யப்பட்ட அவருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கப்பட காவல் துறை இன்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும் நீதிமன்றம் ஒரு நாள் தடுப்புக் காவல் மட்டுமே வழங்கியது.
பினாங்கு கொம்தார் கட்டிடத்தில் சுனார் நடத்திய ஓவியக் கண்காட்சியில் அத்து மீறி நுழைந்த அம்னோவைச் சேர்ந்த ஒரு குழுவினர் அவரைத் தாக்க முற்பட்டதோடு, அவரது ஓவியங்களையும் சேதப்படுத்தியதாக சுனார் குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னர் சுனார் கைது செய்யப்பட்டதோடு, அவரது ஓவியங்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தனது விடுதலைக்காக குரல் கொடுத்த, உதவி புரிந்த அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் சுனார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.