Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘மாவீரன் கிட்டு’ – தீண்டாமையின் வலியை உணர்த்தும் படம்!

திரைவிமர்சனம்: ‘மாவீரன் கிட்டு’ – தீண்டாமையின் வலியை உணர்த்தும் படம்!

1051
0
SHARE
Ad

mvkகோலாலம்பூர் – தாழ்த்தப்பட்ட மக்களின் பிணத்தைக் கூட ஆதிக்க சாதி மக்கள் வாழும் வீதிகளில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தீண்டாமை தலைதூக்கியிருந்த ஒரு காலத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தில் இருந்து எழுச்சி பெற்று வரும் ஒரு தலைவனும், அவனுக்காக எதையும் செய்யத் துணியும் ஒரு இளைஞனின் கதை தான் மாவீரன் கிட்டு.

80 களில் நடக்கும் கதையில், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடும் தலைவனாக சின்னராசு கதாப்பாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நடை, உடை, பாவணை என அனைத்திலும் அக்கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

“மாற்றம் வரும்.. ஒரு நாள் நீ என் முன்னால கை கட்டி நிப்ப” என்று ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஹரிஸ் உத்தமனிடம் சவால் விடுவதும், “சூழ்ச்சியால தான் இங்க எத்தனையோ பேர் வீழ்ந்திருக்காங்க” என்று தன் மக்களிடம் புலம்புவதுமாக படம் முழுவதும் தனது நடிப்பால் கவர்கிறார் பார்த்திபன்.

#TamilSchoolmychoice

கிட்டு கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் அருமையான நடிப்பு. நாளுக்கு நாள் அவரது நடிப்பு மெருகேறிவருவதை இப்படத்தில் பார்க்க முடிகின்றது. தன்னை தாழ்த்தப்பட்டவனாக ஆதிக்க சாதியினர் பார்க்கும் போது உள்ளுக்குள் பொங்கி எழுவதும், எப்படியாவது படித்து கலெக்டர் ஆகி தான் சார்ந்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பதுமாக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஸ்ரீதிவ்யாவிடம் பாடப் புத்தகத்தின் பின் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் “தீண்டாமை குற்றம்” வாசகத்தைக் காட்டி உணர்த்துவதும், அவர் தன் காதலைச் சொல்லும் போது தயங்குவதுமாக விஷ்ணு விஷால் பல இடங்களில் கைதட்டல் பெறுகின்றார்.

ஒரு எளிமையான கிராமத்து இளைஞனின் உடல்மொழியையும், முகபாவணைகளையும் அப்படியே நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

இவர்களோடு, கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா, ஸ்ரீதிவ்யாவின் தந்தையாக ‘கயல்’ பெரோஸ், தாழ்ப்பட்டவர்களை நசுக்கும் போலீஸ் அதிகாரியாக ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோரும் மனதில் நிற்கும் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைக்கதை

maaveeran-kittu-movie-stills-4படம் தொடங்கியது முதல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் துயரங்கள், சமூகத்தில் அவர்கள் நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றை மிக நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்கிறது திரைக்கதை அமைப்பு.

அதற்கு ஏற்ப யுகபாரதியின் நச் வசனங்களும் பக்கபலமாக அமைந்துள்ளன. “பதில் சொல்லியே பழகிய சமூகம் திடீர்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சா சும்மாவா இருப்பாய்ங்க”, “ஓட்டுப் போடுறதத் தவிர நமக்கு என்ன உரிமை இருக்கு?.. அடிக்கிறவன் அடிச்சிக்கிட்டே இருக்கான்.. தட்டிக் கேட்டா திமிருங்கிறான்”

“அண்ணே.. அந்த ஊருக்கு பஸ் போக ஆரம்பிச்சதுல இருந்து தாண்ணே இத்தனை பேரு படிக்க போறாய்ங்க”, “இன்னைக்கு பொணம் தூக்கிட்டுப் போறேம்பாய்ங்க.. நாளைக்கு பொண்ணு கேட்டு வருவாய்ங்க.. இவங்கள இப்படியே பொழங்க விட்டுக்கிட்டு இருந்தா அவ்வளவு தான்”

இப்படியாக இரு தரப்பில் இருந்தும் வரும் வசனங்கள் தீண்டாமையின் தீவிரத்தையும், அம்மக்கள் பட்ட துன்பங்களையும் நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

அதோடு, தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவனை தன் மகள் காதலித்தாள் என்பதற்காக கழுத்தை அறுக்கத் துணியும் ஆணவக் கொலை, தாழ்த்தப்பட்டவர்களை சமமாக மதிக்கிறான் என்பதற்காக தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை கொலை செய்யும் சாதிவெறி, பாம்பு கடித்து செத்தாலும் பரவாயில்ல.. தாழ்ந்த சாதிக்காரனின் கை படக் கூடாது என்ற வீம்பு எனப் பல இடங்கள் சாதிப் பாகுபாட்டை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இரண்டாம் பாதியில், பார்த்திபன் தலைமையில் நடக்கும் போராட்டமும், வியூகமும் ரசிக்க முடிந்தது என்றாலும் கூட, முதல் பாதியில் இருந்த பரபரப்பையும், தீவிரத்தையும் பார்க்க முடியவில்லை. அங்கு தான் திரைக்கதை சற்று தொய்வடைய ஆரம்பிக்கிறது. அதோடு, இடையில் வரும் இரண்டு காதல் பாடல்களும் அச்சூழலில் ரசிகனின் மனநிலைக்கு ஏற்ற வகையில் இல்லை. நல்ல பாடல் தான் ஆனால் வைக்கப்பட்ட இடம் ரசிக்க முடியவில்லை.

ஒளிப்பதிவு, இசை

maaveeran-kittu-movie-stills-4-1ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவில் பழனியைச் சுற்றியுள்ள கிராமமும், மலைக்காடுகளும் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேமரா பயணம் செய்துள்ள வீதிகளும், சாலைகளும் கதையோடு நாமும் பயணம் செய்ய பக்க பலமாக உள்ளன.

டி.இமானின் பின்னணி இசை மிகவும் இரசிக்க வைக்கின்றது. பார்த்திபன் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் வரும் பின்னணி இசை நம்முள் பரவசத்தை ஏற்படுத்துகின்றது.

பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசிக்கும் இரகம்.

யாருக்கான படம்?

mvk2நிச்சயமாக இது ஒரு பொழுதுபோக்குப் படம் கிடையாது. தீண்டாமையின் கொடுமையை பற்றி அறிந்து கொள்ளவும், அம்மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற அடைந்த போராட்டங்களையும், துயரங்களையும் அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த படம்.

அப்படிப்பட்ட மனநிலையோடு இப்படத்திற்குச் சென்றால் நிச்சயம் திருப்திபடுத்தும்…

– ஃபீனிக்ஸ்தாசன்