ஜோர்ஜ்டவுன்: கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தனது சொந்த மெய்க்காப்பாளரால் பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட டத்தோ ஓங் தெக் குவோங், ‘கேங் 24’ என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் கும்பலின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவன் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பினாங்கு ஜோர்ஜ் டவுன் வட்டார காவல் துறையின் தலைவர் (ஓசிபிடி) துணைக் காவல் ஆணையர் (அசிஸ்டெண்ட் கமிஷனர்) மியோர் பாரிடாலாதிராஷ் இது குறித்து உறுதிப்படுத்தியுள்ளதோடு, டத்தோ எம் என்று அழைக்கப்படும், 32 வயதான அந்த நபரின் நடவடிக்கைகளையும், 24 குண்டர் கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகளையும் அண்மையக் காலமாக கண்காணித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓங், பகாங் சுல்தானிடம் இருந்து டத்தோ பட்டம் பெற்ற போது…
மிக இள வயதிலேயே டத்தோ பட்டம் பெற்ற காரணத்தால் ‘டத்தோ மூடா’ (Datuk muda) என்று அழைக்கப்பட்ட ஓங் பின்னர் சுருக்கமாக டத்தோ எம் என அழைக்கப்பட்டார்.
“நாங்கள் கண்காணித்து வரும் 14 ரகசியக் குண்டர் கும்பல்களில் இந்த 24 கும்பலும் ஒன்றாகும். அவர்கள் பாதுகாப்புப் பணம் கேட்டும், சட்டவிரோத வட்டிக் கடன்கள் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டும் வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், யாரும் முன்வந்து காவல் துறையில் புகார் செய்யவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் எங்களிடம் உள்ளது” என்றும் மியோர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு டத்தோ ஓங்கின் மெய்க்காப்பாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டத்தோ ஓங்கும், மற்றும் இரண்டு நபர்களும் மரணமடைந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர். டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஓங் டத்தோ பட்டம் பெற்றபோது அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும் ஒரு சீனப் பத்திரிக்கையில் 50 பக்கங்களுக்கு முழுப்பக்க விளம்பரங்களை எடுத்தனர் என்றும் பல மாதங்களுக்கு இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களுக்கான செலவு 150,000 ரிங்கிட் என மதிப்பிடப்படுகின்றது.
இரண்டு குண்டர் கும்பல்களின் ஒன்றிணைப்பு
“சியோ சாம் ஓங்” (Sio Sam Ong -Three Little Emperors) என்ற மற்றொரு பயங்கரத் தன்மை கொண்ட குண்டர் கும்பலோடு, ஒன்றிணைந்த பின்னர் 24 குண்டர் கும்பல் மிகவும் பலம் வாய்ந்த கும்பலாக உருவெடுத்தது என்றும் காவல் துறையினர் விளக்கியுள்ளனர். 1992-ஆம் ஆண்டு செப்டம்பரில், சுங்கைப்பட்டாணியில் திருமணத்திற்கு முன்னிரவு நடந்த விருந்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்த சியோ சாம் ஓங் குண்டர் கும்பலும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல் துறை கருதுகின்றது.
“சியோ சாம் ஓங்” கும்பலுடன் 24 குண்டர் கும்பல் ஒன்றிணைந்த பின்னர் “கேங் 234” என அந்தக் கும்பல் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. இருப்பினும் வெளியுலகத்திற்கு 24 கும்பலாகவும் சியோ சாம் ஓங் கும்பலாகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது என்றும் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
234 குண்டர் கும்பல் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவல் துறை சந்தேகிக்கின்றது.
காரணம், கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி பினாங்கில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டைகளில் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதோடு சியோ சாம் ஓங் கும்பலின் 3 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
பல கொலை சம்பவங்களிலும் சியோ சாம் ஓங் கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான பல விவரங்களை இன்றைய ஸ்டார் ஆங்கில நாளிதழ் தனது பிரத்தியேகக் கட்டுரையில் வெளியிட்டுள்ளது.