கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் அதிரடியாக மாறிவரும் மலேசிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன.
ஷா ஆலாமில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முதன் முறையாகக் கலந்து கொண்டு, எதிர்க் கட்சி கூட்டணி கட்டம் கட்டமாக செதுக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே மாநாட்டில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசாவும், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபுவும் கலந்து கொண்டனர்.
அதே வேளையில், பாஸ் கட்சியோடு நெருக்கம் பாராட்டி வரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், தித்தி வாங்சா அரங்கில் மியன்மாரில் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கான ஆதரவுப் பேரணியில் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங்குடன் ஒரே மேடையில், அருகருகே அமர்ந்து கலந்து கொண்டார்.
இதன் மூலம், மலாய்-முஸ்லீம் அடிப்படையில் அம்னோவும், பாஸ் கட்சியும் இணைந்து செயல்படும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைப்பாடு, அடிமட்ட அம்னோ-பாஸ் உறுப்பினர்களிடையே, மற்றும் வாக்காளர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்துதான், அந்த இரு கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் ரீதியாக ஒன்றாக இணையுமா என்பதும் தெளிவாகத் தெரிய வரும்.