வத்திகான் – ஏர் ஆசியா தலைவரும், மலேசிய நாட்டின் வணிகப் பிரமுகர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று வத்திகான் நகரில் போப்பாண்டவரைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பு குறித்த விவரங்களையும், போப்பாண்டவருடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் டோனி பெர்னாண்டஸ்.
“எனது வாழ்க்கையில் பல மன்னர்களையும், அரசிகளையும், பிரபலங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால் போப் பிரான்சிசைச் சந்தித்தது மறக்க முடியாத, விவரிக்க முடியாத வித்தியாச அனுபவமாகும். எனது தந்தையார் மட்டும் இருந்திருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார். வணிகத் தலைவர்கள் சமூகத்தில் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என போப்பாண்டவர் ஊக்குவித்தார். எனது பணிகளைத் தொடர்வதற்கான வலிமையை அவரது வார்த்தைகள் எனக்குத் தந்துள்ளது” என தனது பதிவில் டோனி தெரிவித்துள்ளார்.
“எளிமை, பணிவு, திறமை, வெளிப்படையாகப் பேசும் தன்மை, ஆகிய குணநலன்களோடு மக்களின் மனிதராகத் திகழ்கின்றார் போப்பாண்டவர். நமது நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரை நான் கேட்டுக் கொண்டேன். அனைத்து இனங்களும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் இன்னும் மேம்பாடடைந்த நாட்டை நாம் நிர்மாணிக்க வேண்டும் என்றும் அவரை நான் கேட்டுக் கொண்டேன். இவ்வளவு பெரிய, உயர்ந்த, மனிதரின் முன்னிலையில் நிற்கும் மாபெரும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கின்றேன் என்பதை நினைத்து பிரமிக்கின்றேன். எனது விழிகளைத் திறந்து விட்ட அவர், தொடர்ந்து நான் நன்மைகளையே செய்து வருவதற்கான சக்தியையும், வலிமையையும் எனக்குள் விதைத்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட உண்மையான ஆன்மீகத் தலைவர் அவர். தீவிரவாதச் சிந்தனை கொண்ட தலைவர்களை விட போப்பாண்டவர் போன்ற தலைவர்கள் மேலும் அதிகமாக இருந்தால் அதன் மூலம் உலகம் மேலும் சிறப்படையும். போப்பாண்டவர் மத சுதந்திரம் குறித்தும் விரிவாகப் பேசினார்” என்றும் டோனி பெர்னானாண்டஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.