பெய்ஜிங் – சீனாவில் கடன் முதலைகளிடம் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கடனைத் திருப்பித் தருவதை உறுதி செய்ய, தங்களின் நிர்வாண தம்படத்தை (Selfie) எடுத்து அனுப்ப கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
நாடெங்கிலும் 19 முதல் 23 வயதுடைய 163 மாணவிகளின் நிர்வாணப் படங்களும், காணொளிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட இணையத்தில் இருக்கும் மாணவிகளின் நிர்வாணப்படங்கள் மட்டும் 10 கிகா பைட்ஸ் அளவிற்கு இருப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம், சீனாவின் வளர்ச்சியடையாத நிதித்திட்டத்தையும், முறையில்லாமல் இருக்கும் மாணவ கடன் உதவித் திட்டங்களையும் காட்டுவதாக சீன ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.
“எனக்குக் கடன் தருபவரிடம் என்னுடைய நிர்வாண தம்படத்தையும், காணொளியையும் கொடுத்த 3 நிமிடங்களில் எனக்கு 5,000 யுவான் கடன் உதவி கிடைத்தது” என்று மாணவி ஒருவர் சீனா யூத் டெய்லி என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அதோடு, அவர்கள் பெற்ற கடனுக்கு மாதம் 27 விழுக்காடு வட்டி விதிக்கப்படுவதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.