சென்னை – இன்று புதன்கிழமை அதிகாலை காலமான பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
சோ பன்முகத் திறமை கொண்டவர் என்றும் மிக உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர், சிறந்த தேசியவாதி, அனைவராலும் மதிக்கப்பட்ட, பிரமிப்புடன் பார்க்கப்பட்ட, யாருக்கும் அஞ்சாத போக்கு கொண்டவர் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எல்லாவற்றையும் விட அவர் எனது மதிப்புமிக்க நண்பர் என்றும் கூறியுள்ள மோடி, “சோவின் துக்ளக் வாசகர்களின் ஆண்டு மாநாட்டில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். எங்கும் காணாத அளவுக்கு ஒரு பத்திரிக்கை ஆசிரியருக்கும், வாசகர்களுக்கும் இடையிலான உறவைக் காட்டும் நிகழ்ச்சி அது” என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தமிழக முதல்வர், ஆளுநர், ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
சோ நல்லுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரமுகர்களும், திரையுலகப் பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சோ மருத்துவமனையில் இருந்த போது அவரை வந்து சந்தித்த ஜெயலலிதா – அதன் பின்னர் ஜெயலலிதாவும் நோய்வாய்ப்பட இன்று இருவருமே ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்த நாளில் பிரிந்ததுதான் சோகம்….
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் புதிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து தங்களின் அஞ்சலியைச் செலுத்தி, சோ குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.
நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, பாஜக தலைவர்கள் இல.கணேசன், பொன்.இராதாகிருஷ்ணன், மதிமுக தலைவர் வைகோ, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் நேரில் வந்து சோவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரி ஆகியோரும் சோ நல்லுடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையில் இன்று புதுடில்லியில் நாடாளுமன்ற மேலவைக்கான (ராஜ்ய சபா) கூட்டம் தொடங்கியபோது சோவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக சோ பணியாற்றியுள்ளார்.