சென்னை – 47 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூக வார இதழ் துக்ளக். பிரபல நடிகரும், வழக்கறிஞருமான சோ.இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த துக்ளக் பத்திரிக்கை ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் நாளில் தனது வாசகர் விழாவை, அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு சோ மறைந்துவிட்டதைத் தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் 47-வது ஆண்டு விழா அவர் இல்லாத வெறுமையோடு – ஆனால் உற்சாகம் குறையாமல் நடத்தப்பட்டது.
தற்போது பிரபல கணக்காய்வாளரும், அரசியல் விமர்சகருமான குருமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது துக்ளக்.
நேற்று நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்தர மோடி, நேரலையாக ஒளிபரப்பப்பட்ட காணொளியின் வழியாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே புதுடில்லியிலிருந்து உரையாற்றினார்.
தமிழக மக்களுக்கு நரேந்திர மோடி ‘வணக்கம்,இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ எனத் தமிழில் கூறி தனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சோ’வைப் பாராட்டிய மோடி
தொடர்ந்து பேசிய மோடி, சோ’வின் அறிவாற்றலையும், அரசியல் விமர்சகத் திறனையும் பாராட்டிப் பேசினார்.
” நான் எனது நெருங்கிய நல்ல நண்பரை இழந்து விட்டேன். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவரைப் போன்று பலமுனைகளில் திறமை வாய்ந்த பன்முகத் திறமையாளரை நான் இதுவரை கண்டதில்லை. தன்னைத் தேடி வந்தவர்களுக்கெல்லாம் அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார். இந்திய அரசியல் வரலாறு பற்றி யார் எழுதினாலும் சோ-வின் பங்களிப்பு குறித்து எழுதாமல் அது முழுமையடையாது” என்றும் மோடி புகழாரம் சூட்டினார்.
“பத்திரிக்கையாளர்களுக்கு அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார். நகைச்சுவை மற்றும் கிண்டல் தொனியில் அரசியல் எழுதுவது சோ-வின் தனித்திறமை. மேலும் அதிகமானவர்கள் அவரது பாணியில் எழுத வேண்டும். நமக்கு இப்போது நகைச்சுவை பாணியிலும், நையாண்டி பாணியிலும் எழுத வேண்டிய அவசியம் உள்ளது. காரணம், நகைச்சுவை புதிய உறவுப் பாலங்களை உருவாக்குகிறது. இன்றைய கால கட்டத்தில் நமது ஒரு பேச்சும், நடக்கும் ஒரு சம்பவமும் பல நூற்றுக்கணக்கான இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களின் வழி “மீம்ஸ்”என்ற கிண்டல் கேலிகளை உருவாக்குகின்றது. அத்தகைய காலகட்டத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்” என்றும் மோடி தனது உரையில் கூறினார்.
துக்ளக் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தியின் அரசியல் அறிவையும், விமர்சனத் திறன்களையும் மோடி தனதுரையில் பாராட்டினார்.
துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு உரையாற்றி, சோ திறமைகள் குறித்தும், பங்களிப்பு குறித்தும் புகழாரம் சூட்டினார்.