கிள்ளான் – மலேசியாவின் தமிழ் இலக்கிய உலகில் ‘முரசு’ என்ற சொல் உதிர்க்கப்பட்டால், இயல்பாகவே, அடுத்து நம் நினைவில் உடனடியாக நிழலாடும் பெயர் முரசு நெடுமாறன்.
‘பாப்பாவின் பாவலர்’ என இன்னொரு சொல் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடத்திலும், மலேசியத் தமிழ்க் கவிஞர்களிடத்திலும் முன்மொழியப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவதும் ‘முரசு நெடுமாறன்’ என்ற பெயர்தான்.
தமிழ்க் கணினி ஆர்வலர்களுக்கோ, ‘முரசு’ என்றதும் நினைவில் வரக் கூடியது ‘முரசு அஞ்சல்’ என்ற தமிழ் மென்பொருள். இதற்கான காரணப் பெயரும் முரசு நெடுமாறன்தான், என்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆம்! முரசு நெடுமாறனின் புதல்வர் முத்து நெடுமாறன்தான் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் உருவாக்குநர் – வடிவமைப்பாளர்!
முரசு நெடுமாறன், பொங்கல் கொண்டாடப்படும் ஜனவரி 14-ஆம் தேதியைத் தனது பிறந்த நாளாகக் கொண்டவர்.
நேற்று ஜனவரி 14-ஆம் தேதி தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கின்றார் முரசு நெடுமாறன்.
மலேசியத் தமிழ் உலகில் தனது இலக்கியப் படைப்புகளாலும் –ஆய்வுப் பணிகளினாலும், இலக்கிய விமர்சனங்களாலும்,
-மலேசியத் தமிழ் எழுத்துலகத்தின் வரலாற்றை எதிர்கால சமுதாயத்திற்காக தொகுத்துத் தந்திருக்கும் அயராத உழைப்பாலும் –
-மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் முக்கிய அம்சங்களைக் கொண்ட குறிப்புகளை ஒரே தளத்தில் தொகுத்து வழங்கிய முயற்சிகளின் காரணமாகவும்,
மதிப்பிற்குரிய முரசு நெடுமாறனின் பங்களிப்பும், உழைப்பும் என்றும் நினைவு கூரப்படும்.
கேரித் தீவில் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, பின்னர் தமிழ்ப் பள்ளி ஆசிரியராக, தனது வாழ்க்கையைத் தொடக்கிய அவர் தனது அயராத முயற்சியினால் பட்டப் படிப்பை முடித்து, முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.
பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகவும், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றிய முரசு நெடுமாறன் மலேசியப் பள்ளிகளில் தமிழ்க் கல்விக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்.
அவரது பாடல்கள், எழுத்துப் படிவங்கள் மலேசியக் கல்விப் பாடத் திட்டங்களில் திட்டங்களில் இடம் பெற்றிருக்கின்றன. எஸ்பிஎம் தமிழ் இலக்கியத் தேர்வுக்கான வழிகாட்டி நூலான “எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் தேர்வுப் பாசறை” என்ற நூலையும், மாணவர்களுக்காகப் படைத்தவர் முரசு நெடுமாறன்.
மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களின் தமிழ் இலக்கிய அடையாளத்தை நமக்கு எடுத்துக் காட்டும் வண்ணம் அவரது அயராத உழைப்பினாலும், ஆய்வுப் பணிகளாலும் மலர்ந்த ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’, ‘மலேசியத் தமிழரும் தமிழும்’ என்ற இரு நூற்கள், முரசு நெடுமாறனின் இலக்கிய ஆய்வுப் பணியையும், உழைப்பையும் எடுத்துக் காட்டும் சான்றுகள்!
தனது 80-வது வயதைக் கடக்கும் இன்றைய நிலையிலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் குறித்த குறிப்புகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரும் பெரும்பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.
அன்னாரின் தமிழ்ப் பணி மேலும் தொய்வின்றி, தொடர வேண்டும், அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து மொழிக்கும், இலக்கியத்திற்கும் பங்காற்றி வரவேண்டும் என செல்லியல் குழுமத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
-இரா.முத்தரசன்
பின்குறிப்பு – பாப்பாவின் பாவலர் முரசு நெடுமாறனின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புதல்வர் முத்து நெடுமாறன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கீழ்க்காணும் பதிவை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானதெனக் கருதுகிறோம்:
“எங்கள் வீட்டில் பொங்கலே நாங்கள் உணர்வோடு கொண்டாடும் பண்டிகை! தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு என்பதெல்லாம் பிறந்ததிலிருந்தே எங்களுக்கு ஊட்டப்பட்ட உணர்வுகள். இது தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் செல்ல நேரமில்லை. மகிழ்வதற்கும், கொண்டாடுவதற்கும், பெருமை கொள்வதற்கும் நிறைய உள்ளன. மகிழ்வோம்! கொண்டாடுவோம்! பெருமை கொள்வோம்!
பொங்கல் என்றாலே எங்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு: எங்களுக்குத் தமிழ்ப்பால் ஊட்டி வளர்த்த அப்பா பிறந்த நாளே, தை முதல் நாள் தான்!
எண்பது ஆண்டுகள்! பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன். இத்தனை ஆண்டுகளாக இவர் செய்தத் தொண்டு என்ன என்று கேட்டால், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் மூன்றை வரிசைப்படுத்திச் சொல்வோம்: முதலாவது, தமிழ். முதலாவதை செய்யாதபோது இரண்டாவதாக அவர் செய்யும் தொண்டு, தமிழ். இரண்டையும் செய்யாத போது மூன்றாவதாக அவர் செய்வதும் தமிழே!
இன்னும் பல ஆண்டுகள் உடல்நலத்தோடும் உளநலத்தோடும் வாழ்ந்து உலகுக்கும் எங்களுக்கும் அவர் தொடர்ந்து தமிழ் தொண்டாற்றவேண்டும்!”
-முத்து நெடுமாறன்