Home நாடு “பொங்கலும் தமிழர்  திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 1) – முனைவர்  முரசு நெடுமாறன்

“பொங்கலும் தமிழர்  திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 1) – முனைவர்  முரசு நெடுமாறன்

1307
0
SHARE
Ad
முரசு நெடுமாறன்

(பொங்கல் திருநாளை முன்னிட்டு முனைவர் முரசு நெடுமாறன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் முதல் பகுதி. இதன் இரண்டாம் நிறைவுப் பகுதி நாளை செல்லியலில்  இடம் பெறும்)

 முன்னுரை

‘பொங்கல்’ என்னும் சொல், தமிழ்இலக்கியத்தில் நீளப் பயின்றுவரும் சொல். ‘தமிழர்திருநாள்’ என்பது கடந்த நூற்றாண்டில் தமிழ் அறிஞர்கள் பொங்கலுக்கு இட்ட சிறப்புப் பெயர். இப்பொழுது தமிழகத்தில் பொங்கல், ‘தமிழர் திருநாளா’கவே கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் ‘தமிழர் திருநாள்’ கொண்டாடப்பட  வேண்டும்மென்று 1951இல் திட்டமிட்டு, 1952 முதல் தமிழர் பிரதிநிதித்துவ சபை மூலம் அதனை முன்னின்று நடத்தியவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி. தமிழகத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருநாளுக்கும் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் கொண்டாடப்படும் தமிழர் திருநாளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உண்டு என்பதனை நினைவில் கொள்ளல் வேண்டும்.

இந்த வேறுபாடுகள் ஏன் ஏற்பட்டன என்பதனை எல்லாம் மிக ஆழமாக ஆராய்ந்து பல  சான்றுகளைத் திரட்டி இக் கட்டுரை  எழுதப் பெறுகிறது.  எழுபது ஆண்டுகளுக்குமேல் நீடிக்கும் இச் சிக்கலைக் காய்தல் உவத்தல் இன்றி, ஆய்ந்து உண்மை காணும்  நோக்கினைக் கொண்டதே இக் கட்டுரை.

பொங்கலும் தமிழரும்

தமிழர் வரலாற்றில் பொங்கல் திருநாளுக்குத் தனிஇடமுண்டு. நீண்ட நெடுங்காலமாகவே தமிழர் பொங்கலைக் கொண்டாடி வந்தனர்.  இயற்கையைப் போற்றும் விழாவாக, சமயச் சார்பற்ற அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வந்த  பொங்கல் விழா, பிற்காலத்தில் மாறுதல் அடையத் தொடங்கிற்று. ஆரியர் வருகைக்குப் பின் ஏற்பட்ட கலை பண்பாட்டு வரலாற்றுத் திரிபுகள் பொங்கலுக்கும் ஏற்படலாயின; அவ் விடர், பெருங்கேடுபயத்த இடராகவும் ஆயிற்று.

பொங்கல் சங்கராந்தி ஆனமை

#TamilSchoolmychoice

தீபாவளி முதலாய சமய விழாக்களுக்குச் சொல்லப்படும் புராணப் புனைகதைகள் எதுவும் பொங்கலுக்கில்லை. பிற்காலத்தில், இயற்கையைப் போற்றும் விழாவான பொங்கலுக்கும் புராணச்சாயம் பூசி, மகரசங்கராந்தியாக்கினர்.

“பல்லவர்கள் காலத்தில் தை முதல்நாள் மகரசங்கராந்தி (சங்கராந்தி – நுழைதல்) எனப் பெயர் பெற்றது. மகரராசியிலிருந்து நுழைந்து உத்தராயணம் என்ற வடக்குப் பயணத்தை தொடங்கும் நாள் இது என்பதால் இந் நாளில் புனித நீராடிப் புண்ணியம் பெறலாமென்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. இந் நாள், பிரம்மாவின் சாபத்தால் தொழுநோயுற்ற நவக்கிரகங்கள் சிவாலயத்தில் சாப விமோசனம் பெற்றநாளாக ஒரு புராணக் கதை புனையப்பட்டது (இ. ஜே சுந்தர் 2021).

திருவள்ளுவராண்டு அறிமுகமானமை

பொங்கலுக்கு இடைக்காலத்தில் பூசப்பட்ட மதச்சாயம் நீக்கப்பட்ட வரலாற்றை நோக்குமுன் திருவள்ளுவர் ஆண்டு அறிமுகமான வரலாற்றைச் சிறிது கண்ணோட்டமிடுவோம்.

தமிழர் இடைக்காலத்தில்  பிரபவ முதல் அட்சய வரையுள்ள 60 ஆண்டுகளைக் கொண்ட பற்சக்கர முறையிலான ஆரிய ஆண்டு  முறையை பின்பற்றிவந்தனர். தமிழர்க்கெனத் தொடர்ஆண்டுமுறை வேண்டுமென மறைமலைஅடிகள் (1876 – 1950)  1921இல் எண்ணமிட்டார். அவர் பச்சையப்பன் கல்லூரியில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பல்துறை அறிஞர் பெருமக்களைக் கூட்டினார்.  அக் குழுவினர் முடிவுசெய்த தமிழர் தொடர்ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கிறித்துவ  ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் அதுவே திருவள்ளுவர் ஆண்டாகும். தமிழக அரசு இந்த ஆண்டை 1971 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது (கருணைதாசன், தமிழ்ப்பாவை 1.8.1994).

பொங்கலுக்குப் பூசப்பட்ட சமயச் சாயம் விலகியமை

பொங்கல் சமயம் கடந்த – அறுவடையை அடிப்படையாய் கொண்ட இயற்கையைப் போற்றும் விழா என 1935ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற அகில தமிழர் மாநாட்டில் மறைமலை அடிகள், திரு. வி. க., பெரியார், உமாமகேசுவனார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ஆற்காடு இராமசாமி முதலியார், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பி. டி. ராசன், பட்டுக் கோட்டை அழகிரி, பாரதிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்ட அக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் நிகந்தது. இறுதியில் பொங்கல், சமய அடையாளமற்ற தமிழர் பண்டிகை என்பதை தமிழறிஞர்கள் ஒருமனமாக ஏற்றனர் (இ. ஜே. சுந்தர் – சனவரி 2021).

பொங்கல் தமிழர் திருநாள் ஆனமை

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ என்பவர் ‘உலகத் தமிழ் மக்கள் பேரவை’யினைத் தோற்றுவித்து, “உலகத் தமிழ்மக்களே! ஒன்று சேருங்கள்” என்றும் “தமிழ்த்தாயைத் தனியரசாள வையுங்கள்” என்னும் கொள்கை முழக்கம் செய்தார் என்றும் வரலாற்றுச் சான்றுகளுடன் இ. ஜே. சுந்தர் எடுத்துரைக்கிறார் (முகம் மாத இதழ் வெளியிட்ட கட்டுரை, சனவரி 2021). ஆக, தமிழர் திருநாளாகப் பொங்கல் உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக – தமிழர் திருநாளாக அன்றே உருவெடுத்தது.

பின்நாளில் இங்ஙனம் சீர்குலைந்துபோன பொங்கல் திருநாள்  மெய்ம்மை   சீர்மைபெற,  மேற்கொண்ட  முயற்சிகள் பலப்பல. சிற்றூர் வேளாண் மக்களிடம் தை முதல்நாளில் கதிரவனுக்குப் பொங்கலைப் படையலிட்டுக் கொண்டாடும் வழக்கம் நீண்டகாலமாக இருந்தபோதும் தை முதல்நாளைப் பொங்கல் என்ற பெயரில் தமிழர்திருநாளாக  மாற்றியவர் மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்  கா. நமசிவாயனார் (1876 – 1936) ஆவார் (இ. ஜே சுந்தர் 2021).

மலேசியத் தோட்டப்புறங்களில் பொங்கல்

இந்தியத் துணைக் கண்டத்தைத் தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்த பிரிட்டீசாரிடம் அடிமைப்பட்ட நாடாக மலேசியாவும் (அப்போது மலாயா) உட்பட்டிருந்தது. அக் காலகட்டத்தில் இங்குக் காடுகளை  அழிக்கவும் தோட்டப்புறங்களை உருவாக்கவும் தென்னகப் பகுதியிலிருந்து – குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர வைக்கப்பட்ட தமிழர், தொடக்க காலத்திலிருந்தே தம் இல்லங்களில் பொங்கல்வைத்துக் கொண்டாடினர். அது தமிழகச் சிற்றூர்களில் கொண்டாடப்படும்  விழாவை ஒட்டிய ஒன்றாகவே இருந்து வந்தது. மாடுகள் வளர்த்தோர் மாட்டுப் பொங்கலும் கொண்டாடினர்.

மலேசிய திராவிடர் கழக முயற்சி

“தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக் கொள்கைகள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும்  பரவின. 1947ஆம்  ஆண்டுமுதல் பொங்கல் திருநாளைக் கழகத் தோழர்கள் ஆங்காங்கே கொண்டாட முனைந்தனர்.  இதேபோல் சிங்கப்பூரிலும் கொண்டாடப்பட்டது. தமிழ்வேள் கோ. சாரங்கபாணியும் விழாக் குழுவில் இருந்தார் (கே. ஆர். இராமசாமி, 1967).

கோ. சாரங்கபாணியும் தமிழர் திருநாளும்

அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி

பெரியார் பகுத்தறிவு இயக்க உணர்வாளரும் ‘தமிழ்முரசு’ நாளிதழின் ஆசிரியருமான தமிழவேள் கோ. சாரங்கபாணி (1903 -1974)  சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் சாதி,  சமய வேறுபாடுகளை மறந்து தமிழ்மொழியை முன்வைத்து ஒன்றுபடும் எழுச்சித் திருநாளாகத் தமிழர் திருநாள் கொண்டாடப்பட வேண்டுமென்று 1951இல் திட்டமிட்டார்.

அப்பொழுது தமிழர் பிரதிநிதித்துவ சபையின் ஏற்பாட்டில் நடந்த அக் கூட்டத்தில், சிங்கப்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் இணைந்து, “அது பொங்கல் திருநாளின் அடிப்படையிலும் தமிழரின் புத்தாண்டு தைத்திங்கள் முதலாம் நாள் என்னும் அடிப்படையில் – பொருளால் பொங்கல் என்றிருப்பதைவிட மொழியால் இனத்தால், பண்பாட்டால் தமிழர்திருநாளாக அமையவேண்டுமெனவும் பொங்கல்திருநாளின் அடிப்படையில் தமிழர்திருநாள் அமைய வேண்டுமென்ற கருத்தினையும் சிங்கைத் தமிழர் பிரதிநிதித்துவ சபையில் எழுப்பப்பட்டது என்று கே. ஆர். இராமசாமி (1933 – 1997) மேற்படி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் ஏற்கப்பட்ட இக் கருத்து பின்னர் ஏனோ  விடுபட்டது.

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

சிங்கப்பூரின் பல இயக்கங்கள் ஒன்றிணைந்த அமைப்பான தமிழர் பிரதிநிதித்துவ சபை 1952ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தமிழர் திருநாளை அறிமுகப்படுத்திற்று. அதே ஆண்டு மலேசியாவின் பெர்லிசு மாநிலத்திலும் நடந்தது. பின்னர் படிப்படியாக மலேசியாவின் பல பாகங்களிலும் மாபெரும் எழுச்சியொடு நடந்தது, அகில மலாயா தமிழர் சங்கம் தமிழர் திருநாளை முன்னின்று நடத்திற்று.

அச் சங்கம் செயலிழந்தபின் தமிழ் இளைஞர் மணிமன்றம் தமிழர் திருநாளை முன்னெடுத்தது. தமிழர் திருநாளை அன்று இங்கு முன்னின்று நடத்திய தலைவர்களில் ஒருவரான பெரியவர் மா. செ. மாயதேவன், தைப்பிங்கில் (தமிழர் சங்கத்தின் மூலம்) 1954 முதல் விடாமல் தொடர்ந்து அவ் விழா நடந்துவர ஊக்கப்படுத்தி வந்தார்.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மிகப் பேரெழுச்சியொடு கொண்டாடப்பட்டுவந்த தமிழர் திருநாளால் இரு நாடுகளிலும் தமிழரிடையே அளப்பரிய நன்மைகள் விளைந்தன.

இதற்குத் தமிழகத்திலிருந்து இங்கு விழாவில்  உரைநிகழ்த்தவந்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் கொட்டிய தமிழுணர்வு, தமிழர் வரலாற்றை, கலைகளின் சிறப்பை பண்பாட்டின் பெருமைகளை உணரவைத்ததனால் இங்குத் தமிழரிடையே ஒரு தெளிவு ஏற்படத் துணைபுரிந்தது.

பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பெருகினர். ‘தமிழ்முரசு’ நாளிதழின் இணைப்பாக வெளிவந்த மாணவர் மணிமன்ற மலர் மூலம் புதிய தலைமுறை உணர்வுநலத்தொடு வளர்ந்து தமிழ் இளைஞர் மணிமன்றமாகவும் பிறப்பெடுத்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகவும் தமிழர் திருநாள் அடிப்படை போட்டது. முன்பு எப்போதுமே காணாத பேரெழுச்சி தமிழர் திருநாளால் ஏற்பட்டது.

பொங்கல் வேறு தமிழர் திருநாள் வேறா?

தொடக்கத்தில் தமிழர் திருநாள் பொங்கல் அடிப்படை கொண்டது என்ற கருத்தே பரவலாக இருந்து வந்தது. தமிழகத்திலிருந்து இங்கு தமிழர் திருநாளில் உரை நிகழ்த்தவந்த கி. ஆ. பெ. விசுவநாதம் (1899 – 1994) முதலாய அறிஞர்களும் பேராசிரியர்களும் அங்குள்ள சூழல்படி இரண்டும் ஒன்றே என்ற கருத்துப்படவே பேசினர். பொது மக்களில் பலரும் அதே கருத்தைக் கொண்டிருந்தனர்.

படிப்படியாகப் பொங்கல்வேறு தமிழர்திருநாள் வேறுஎன்ற கருத்து துல்லியமாகவே வெளிப்பட்டது. ஆனால் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டுவரும் பொங்கலே தமிழர்ஒற்றுமைத் திருநாள் என்று திராவிடர் கழகம் விடாமல் வலியுறுத்தி வந்தது.

எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள இசையாத கோ. சா. தம் இறுதிக் காலம் வரை தம்மைப் பின்பற்றிய தொண்டர் ஆதரவொடும் ‘தமிழ்முரசு’ நாளிதழின் பக்கபலத்தோடும் தமிழர் திருநாளை நடத்தி வந்தார். விழாக்களில் தமிழ் உணர்வாளர்களொடு பெருமக்களும் அமைச்சர்களும் கலந்து சிறப்புச் சேர்த்து வந்தனர். குமுகாயம் மதித்த தலைவராய் விளங்கிய கோ. சா. அவர்கள் புகழுடம்பெய்தியபின், தமிழர் திருநாள் கொண்டாட்டங்களின் எழுச்சி படிப்படியாகக் குறைந்து வந்தது.

2000ஆம் ஆண்டில் ஏற்பட்டபேரெழுச்சி

தமிழர் திருநாளின் முதன்மையை உணர்ந்த காரைக்கிழார், பாதாசன், பழ. எ. அன்பழகன், மு. க. மா. முத்தமிழ்ச் செல்வன், மு. அன்புச்செல்வன், கு. தேவேந்திரன் போன்ற ஆர்வலர் நடத்தி வந்த முச்சங்கத்தின் மூலம், இளைய தமிழவேள் என்று போற்றப்பெற்ற ஆதி.குமணன் துணையோடு அவர் நடத்திய மலேசிய நண்பன் நாளிதழின் ஆதரவொடும் புத்திரா வாணிக மையத்தில் 5,000 பேரைக் கூட்டிப் பேரெழுச்சியொடு கொண்டாடிப் புத்தெழுச்சியூட்டினர். தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் இதற்கு மிகப் பெருந்துணை புரிந்தது. இவ் விழா தலைநகரில் தொடர்ந்து 16 ஆண்டுகள் நடைபெற்றது.

அமரர் ஆதி.குமணன்

தமிழர் திருநாள் குறித்துப் பலர் பலவகையாகச் சொன்னாலும், குமுகாயத்தின் பலதுறைகளில் அது ஏற்படுத்திய மாறுதல்களை எவரும் மறுக்கவே முடியாது. இன்றுவரை அதன் முதன்மை பேசப்பட்டே வருகிறது.

“கதை, கட்டுரை, கவிதை எழுதுவோர்க்கு மட்டும் வேண்டுமானால் தமிழர் திருநாள் பயன்படலாம். ஆனால் சமுதாயத்தில் தமிழர்திருநாள் மறுமலர்ச்சியை உண்டுபண்ணியதாகக் கூறுவது நாளேடுகளிலும் மேடைகளிலும்தான் கூறலாம். ஒவ்வொரு தமிழரின் நெஞ்சும் அறியும் உண்மை அதுவல்ல என்பதை (மேலேசுட்டிய கட்டுரை) கே. ஆர். இராமசாமி அவர்கள் தமிழர் திருநாள் ஏற்படுத்திய எழுச்சியை இப்படிக்குறைத்து மதிப்பிட்டுச் சிறுமைப்படுத்தியது ஏற்புடையதன்று.

தமிழர் திருநாளால் விளைந்த பயன்களை உண்மையில் சிறப்பு மலர்கள், தனிப்படைப்புகள், தக்கார் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இதனை உணர்த்தும். நினைவில் வாழும் பழம் பெரும் எழுத்தாளர் மா. இராமையா நடத்திய ‘இலக்கியக் குரிசில்’ என்ற மாத இதழில் தமிழர் திருநாளால் விளைந்த பயன்களைத் தொடர்ந்து எழுதி வந்தார்.

2016ஆம் ஆண்டு மிட்லண்டு மாநாட்டு மண்டபத்தில் “டிரா மலேசியா” என்னும் இயக்கத்தின் தலைமையில் பல அமைப்புகள் ஒன்றுகூடி நடத்திய தமிழர் திருநாள் விழா மலரில், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி. சரவணன் வழங்கியுள்ள வாழ்த்துரையில்,

“தைப்பிங் இளைஞர் மணிமன்றத்தின் மூலம் தொடர்ந்து 10 வருடங்கள் என்னுடைய தலைமையில் தமிழர் திருநாளை ஏற்று நடத்தியுள்ளேன். மொழி ரீதியாக, சாதி ரீதியாக சமூகநிலை ரீதியாகப் பிளவுபட்டிருந்த இந்தியர்களை (தமிழர்களை) ஒன்றிணைக்கவே தமிழவேள் கோ. சாரங்கபாணி தமிழர் திருநாளை மலேசியாவில் அறிமுகப்படுத்தினார். எனவே, மலேசிய இந்தியர்களின் (தமிழர்களின்) இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு உகந்த விழாவாகத் தமிழர் திருநாள் அமையும் என்று கூறியுள்ளார் (சி. சரவணன், 2016).

டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்

வாழும் சான்றாளர் பெருமக்களாக விளங்கும் 90 அகவையைத் தொட்டிருக்கும் கூட்டுறவுக் காவலர் தான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம், 84 அகவைகொண்ட முன்னாள் துணையமைச்சர் தான்ஸ்ரீ க. குமரன் போன்ற பழம்பெருந்தலைவர்கள் தமிழர் திருநாளால் விளைந்த பயன்களைப் பட்டியல் இடுவர்; தொடர்ந்து அவ் விழா நடத்தப்பட வேண்டும்மென்னும் விழைவை வெளிப்படுத்துவர்.

அவர்கள் இப்படிச் சிறப்பித்துச் சொல்வதன் மூலம், கோ. சா. திறனாய்விற்கு – விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது கருத்தன்று. பல்வேறு துறைகளில் மலேசியத் தமிழர் எழுச்சிக்கு வித்திட்ட தமிழர் திருநாளை இகழும் தன்மையில், கருத்துரைத்தல் ஏற்புடையதன்று என்பதனை உண்மை உணர்ந்தார் ஒப்பவே செய்வர்.

சமுதாயம் ஏற்ற உறுதியும் அரசு ஒப்பிசைவு வழங்கியமையும்

2001லும்  2008லும் மலேசியத் தமிழ் இலக்கியக் கழக முன்னெடுப்பில், மலேசிய திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம் ஆகிய இயக்கங்களின் ஒத்துழைப்போடு மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவராய் இருந்த நினைவில் வாழும் மு. மணிவெள்ளையன் (1948 – 2011) தலைமையில்  தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற உலக அளவிலான பரிந்துரை மாநாடுகள் நடந்தன.  அம் மாநாடுகளில், “டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே தை முதல்நாளே தமிழர் புத்தாண்டென்று அறிவிக்க வேண்டு”மென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  (தீக்கதிர் – 2.12.2008).

“தமிழ்ப்புத்தாண்டு குறித்து மலேசிய இயக்கங்களின் அறிவுபூர்வமான கோரிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்துத் தலைவர் கலைஞர் (1924 – 2020)  2008ஆம் ஆண்டில், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அரசினால் அறிவிப்புச் செய்து உலகத் தமிழர்உள்ளங்களில் பால் வார்த்துப் பேருவகை கொள்ளச் செய்தார்” (தமிழக ‘விடுதலை’ நாளிதழ், (17.6.2012).

சென்னைக் கலைவாணர் அரங்கில் நடந்த அக் கூட்டத்தில் இக் கட்டுரையாளரும் கலந்து கொண்டார். பொங்கல் விழா மதச்சார்பற்றது; எல்லாத் தமிழரும் இணைந்து கொண்டாடத்தக்கது என்பதனையும் கலைஞர் தெளிவுப்படுத்தினார்.

தமிழகத்தில் கலைஞருக்குப் பின் முதலமைச்சர் ஆன ஜெயலலிதா அம்மையார், பழையபடி சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்தார் (2011).

22.2.2012ஆம், நாள் மீண்டும் கோலாலம்பூர் கே. ஆர். சோமா அரங்கில் மலேசிய இலக்கியக் கழகத் தலைவர் திரு. அ. இராமன் தலைமையில் மலேசிய திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசியத் தமிழ்க் காப்பகம், மலேசிய சைவத் தமிழ்க் காப்பகம், மலேசிய சைவ நற்பணிக் கழகம் ஆகியன பங்குகொண்ட பேராளர் கூட்டம் நடத்தப்பெற்றது.

“தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு” என்ற  மலேசியத் தமிழ் இயக்கங்களின் பரிந்துரை மாநாட்டுத்  தீர்மானத்தை தமிழக முதல்வராய் இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மலேசியச் செய்தித் தொடர்பாளர் ந. பொன்னுசாமி மூலம் அனுப்பி வைத்தது. அதனை மதித்து ஏற்ற கலைஞர் 2008ஆம் ஆண்டில் முடிவெடுத்தபடி தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மறுமுறை உறுதிப்படுத்தினார். (கி. வீரமணி, விடுதலை நாளிதழ் – 17.6.2012).

டான்ஸ்ரீ ஆர்.நடராஜா

மலேசியத் தமிழர் – இந்தியர் தாய் கோயிலான கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் தான்ஸ்ரீ ஆர். நடராஜா தமிழக அரசின் முடிவைத் தொடக்கத்தில் ஏற்கவில்லை. பின்னர் தக்கார் மூலம் வரலாற்று உண்மைகளை உணர்ந்து – மதித்து ஏற்று பத்துமலை வளாகத்தில் பொங்கல், புத்தாண்டு, திருவள்ளுவர் நாள் ஆகிய சிறப்பு நாள்களைக் குறிக்கும் வண்ணம் மூன்று பெரும்பானைகளில் பொங்கல் வைத்து வரவேற்றார் (14.01.2013); தொடர்ந்து ஆண்டு தோறும் நடத்தி வருகிறார். இது தமிழ் உணர்வாளர்களுக்குப் பெருமகிழ்வைச் சேர்த்து வருகிறது.

ஆனால் மலேசிய இந்து சங்கம் சித்திரை மாதமே ‘தமிழ்’ப் புத்தாண்டுப் பிறப்பு என்னும் பழைய போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது; பொங்கலைச் சமய விழாவாகவே கருதிச் செயல்பட்டு வருகிறது. எனினும் உண்மையான தமிழ் உணர்வாளர்கள் மதவெறியை மனத்தில் கொள்ளாதார் தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்னும் முறையில் சமயச்சார்பற்ற, இயற்கையைப் போற்றும் அறுவடைத் திருநாள் என்னும் முறையிலேயே கொண்டாடி வருகின்றனர். கிறித்துவ, முசுலிம் பெருமக்களும் இதனை ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய கட்டுரை :
“பொங்கலும் தமிழர்  திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 2)

“பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 2) – முனைவர் முரசு நெடுமாறன்

(இந்தக் கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளாகும். இந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகள் அல்ல. இந்தக் கட்டுரைகளில் காணப்படும் கருத்துகளின் நம்பகத்தன்மைக்கும், ஆதாரங்களுக்கும் செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது)