கிள்ளான் : இன ரீதியான தீவிரவாத உணர்வுகள் நாட்டிற்கு நன்மை செய்யாது, மாறாக அனைத்து இனங்களுக்குமான பொதுப் பிரச்சனைகள் அல்லது கோரிக்கைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
நேற்று சனிக்கிழமை (ஜனவரி 20) இரவு கிள்ளான் பாடாங் செட்டி வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், அதே அமைச்சின் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, தாமான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், லோட்டஸ் குழுமங்களின் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், பிகேஆர் உலுசிலாங்கூர் தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“அரசாங்கம் குறைகூறல்களுக்கும், விமர்சனங்களுக்கு செவிசாய்க்கிறது, ஆனால் இனப்பிரச்சினைகளைத் தொடும் தீவிரமான வாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதனால் பயன் ஏதும் விளையப் போவதில்லை. இனங்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் இன்னும் தீர்வு காணாவிட்டாலும் வறுமை, கல்வி, மக்களின் சுகாதாரம், வியாபார வாய்ப்புகள் ஆகிய நான்கு அம்சங்களில் முதன்மையான கவனம் செலுத்தப்படுகிறது” எனவும் அன்வார் தெரிவித்தார்.
“எனது அரசாங்கம் வெறும் பேச்சு மட்டும் பேசுவதில்லை. மாறாக செயல் நடவடிக்கைகளிலும், அமுலாக்கத்திலும் தீவிரம் காட்டுகிறது. ஒவ்வொரு இனத்தின் சார்பாகவும் கோரிக்கைகள் எங்கள் அரசாங்கத்திற்கு வைக்கப்படுகின்றன. மடானி அரசாங்கத்தின் அடிப்படையில் அனைவருக்கும் சரிசமமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள விரும்புகிறோம். இப்படிச் சொல்வது கூட சுலபமில்லை. காரணம் என் இனத்தைச் சேர்ந்த எங்களின் நண்பர்களில் சிலர் எங்களை நோக்கி குறைகூறத் தொடங்கி விடுவர்” எனவும் அன்வார் குறிப்பிட்டார்.
“நான் மற்ற இனங்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன் என்றும் குற்றம் சாட்டப்படுகிறேன். ஆனால் அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதைப் பற்றி எனக்கு கவலையுமில்லை” எனவும் அன்வார் வலியுறுத்தினார்.
“இந்திய சமூகம் எதிர்நோக்கும் வறுமை போன்ற பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே உரிய இனப் பிரச்சனை அல்ல. மாறாக, இது தேசியப் பிரச்சனை. எனவே, அரசாங்கம் எல்லா இனங்களின் பிரச்சனைகளையும் ஒருசேர அணுகுகிறது – சரிசமமாக நடந்து கொள்கிறது.ஒவ்வொரு இந்தியனின் பிரச்சனையும் என்னுடைய பிரச்சனையும் ஆகும். இந்திய சமூகப் பிரச்சனை என எதுவுமில்லை. இது தேசியப் பிரச்சனை. அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கம் கடுமையாகப் பாடுபடுகிறது. பலதரப்பட்ட இனங்களையும், மதங்களையும் கொண்ட உலகின் பல நாடுகளில் நமது நாட்டைப் போல ஒற்றுமையும் அமைதியும் நிலவுவதில்லை. எனவே, நம் நாட்டின் இந்த அமைதியும், ஒற்றுமையும் பாதுகாத்துப் பேண வேண்டியது அவசியமாகும்” எனவும் அன்வார் அறைகூவல் விடுத்தார்.