Home நாடு “பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 2) – முனைவர் முரசு நெடுமாறன்

“பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 2) – முனைவர் முரசு நெடுமாறன்

1309
0
SHARE
Ad
முனைவர் முரசு நெடுமாறன்

(பொங்கல் பெருநாளை முன்னிட்டு “பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் முரசு நெடுமாறன் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் 2-வது பகுதி. இதன் முதல் பகுதி நேற்றைய (ஜனவரி 13) செல்லியலில் இடம் பெற்றது)

தமிழகத் தமிழர் திருநாளும்
மலேசியத் தமிழர் திருநாளும்

தமிழகத்தில் வாழும் தமிழினத்துக் கால்வழியினரே மலேசியத் தமிழர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றன்று. தொல்பழங்காலம் முதல் தமிழகத்தில் நிலவி வரும் பண்பாட்டுக் கூறுகளின் தொடர்ச்சியே இங்குத் தமிழர் பின்பற்றி வரும் பழக்க வழக்கப் பண்பாடுகள் ஆகும்.

புலம்பெயர்ந்த நாட்டு, காலச் சூழலுக்கேற்ப சிற்சில மாறுதல்கள் காணப்படலாம். எனினும் மூலம் ஒன்றேதான். நிலை இங்ஙனமிருக்க, மேற்படி விழாக்கள்பற்றிய சில வேறுபாடுகள் மாறுபாடுகள் நிலவி வருவதைக் கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

தமிழக அறிஞர்குழு முடிவின்படி தமிழகத்தார் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வருவதையும் கோ. சா. 1952இல் அறிமுகப்படுத்திய தமிழர்திருநாள்வேறு பொங்கல்வேறு என்றுகூறி இங்கு இருவேறு போக்கு நிலவி வருவதனையும் கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழர் திருநாள் நோக்கங்களில் சிற்சில வேறுபாடுகள்

தமிழ் அறிஞர்கள் பொங்கலைத் தமிழர் திருநாள் என்றே கொண்டாடி வரும் நோக்கம், மரபு வழியில் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல், சமயச் சார்பற்றது, உழைப்பிற்கு உயர்வு தருதல், இயற்கையைப் போற்றுதல் என்னும் அடிப்படை நோக்கொடு, தமிழ்க் கலைகளும் பண்பாடும் மேம்படும் வண்ணம் கொண்டாடப்படுவதாகும்.

அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி

கோ. சா. தலைமை ஏற்றிருந்த சிங்கப்பூர் பிரதிநித்துவ சபை தமிழர் திருநாளுக்கு வகுத்த நோக்கங்கள்: “தமிழரிடையே அவர்களின் பழங்கலை, பண்பாடு, இன்னபிறவற்றை எல்லாப் பிரிவிலும் புத்துயிர் பெறச் செய்வது; தற்போதைய தாழ்நிலை போக்கி முன்னேற முடிவெடுப்பது, அதனைத் தமிழர் உள்ளத்தில் பதிய வைப்பது பணிவன்பும் பார்புகழ் செயலும் கடமை உணர்வும் எல்லாத் தமிழரிடத்தும் ஏற்படவழிசெய்வது. பயன் : தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் ஒன்று கூடி நிற்பதால் ஒற்றுமை உரம்பெறும்.

பொது முன்னேற்றம் தழைக்கும், கல்வியில் பிற்போக்குநிலை மாறி முற்போக்குக் கிளைகள் ஓடிப்பரவும். செல்வம் சிறக்கும். வர்த்தக வாய்ப்புக் கொழிக்க வழி காண முடியும் இதர தொழில் துறையாலும் தொழிலாளர்களை உயர்த்துவதனாலும் கலைக் கனிகள் குலுங்கும் ஐக்கியம் அடைந்தோம், அவனியில் உயர்ந்தோம் என்னும் நிலைமை ஏற்படும் (மா. இராமையா, இலக்கிய குரிசில், திசம்பர் 2000).

மேற்படி இரு நோக்கங்களில், கோ. சா. வகுத்த நோக்கங்களில் சமுதாய மேம்பாட்டு நோக்கம் கூடுதலாக உள்ளது. புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் அப்படி நோக்கம் அமைவது சிறப்புக் குரியதே. தமிழர்திருநாளைப் பொங்கல் விழாவாகக் கொண்டால் சமுதாய மேம்பாட்டு நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்று அவர் கருதியிருக்கலாம்.

இங்கே சிக்கல் என்னவென்றால் பொங்கல் தொடங்கும் நாளிலேயே தமிழர்திருநாளைத் தொடங்கியதில்தான் உள்ளது மேலும் கோ. சாவின் நடவடிக்கைகள் பொங்கலைப் புறக்கணிப்பது போன்று இருந்ததையும் உணரமுடிகிறது. “பொங்கல் திருநாளை நையாண்டிசெய்வதும் சமயத் திருநாள் என்று கூறி மத வேறுபாட்டை உண்டு பண்ணுவதையும் நாம் கண்டிக்கிறோம்” என்று கூறும் கழகம், “தமிழ் முரசில் பொங்கல் விழாச் செய்திக்குத் தடை போடப்பட்டுள்ளதென்று” தம் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழவேளின் இப்போக்குப் புரியவில்லை. காலங்காலமாக இன விழாவாக நடந்து வந்த பொங்கலுக்குரிய நாளில் தமிழர் திருநாள் என்ற பெயரில் ஒரு புதிய விழாவை அவர் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பொங்கலைச் சமயவிழா என்று புறக்கணித்தது ஏன் என்று தெரியவில்லை.

பெரியாரொடு தொடர்புடையவரான அவர், இடைக் காலத்தில் பூசப்பட்டிருந்த மதச்சாயம் மீட்கப்பட்டுத் தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதன்மை தராத காரணத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

திராவிடர் கழகம் தமிழர் பிரதிநித்துவ சபையில் உரைத்த கருத்தை ஏற்க அவர் முன்வராத காரணம் புரியவில்லை. அவர் ஈர்ப்புத்தன்மைமிக்க வணக்கத்திற்குரிய தலைவராய் (Charismatic Leader) விளங்கியதால், அவரிடம் இது குறித்துவிவாதிக்கத் செயலவையினர் தயங்கியிருக்கலாம்; எடுத்துரைத்த கருத்தை அவர் புறந்தள்ளியும் இருக்கலாம். தமிழகத்திலிருந்து இங்கு வந்த பேராசிரியர்களும் கருத்துரைத்தனரா என்று தெரியவில்லை.

“கழகத்தினரைப் பொறுத்தவரை தமிழர் திருநாளுக்கு எதிர்பாளவர்கள் அல்லர்” என்பதனை வெளிப்படையாகவே எடுத்துக் கூறியுள்ளனர். “பொங்கலுக்குப் போட்டியானதல்ல தமிழர்திருநாள் என்று கூறுவோர் ஆறுதிங்கள் கழித்து ஆண்டு மத்தியில் அவ் விழாவினைக் கொண்டாடட்டும். கழகம் மனப்பூர்வமாக வரவேற்கும் சமுதாய ஒற்றுமைக்குப் பணிபுரிவதே கழகத்தின் குறிக்கோள்” (கே. ஆர். இராமசாமி, 1967). இங்ஙனம் தம் நோக்கத்தைத் தமிழவேள் வரையறுத்து உறுதிப்படக் கூறியதாகத் தெரியவில்லை.

மலேசியத் தமிழர் திருநாளால் பொங்கலுக்குத் தாழ்வு ஏற்படுத்திவிடக் கூடாது என்று கழகம் எண்ணியதில் தப்பில்லை. பெரியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர் குழாமே இன உணர்வோடு மதங்கடந்த தமிழர் இனவிழா என எடுத்த பொங்கலைத் தமிழவேள் ஏற்காமல்போன கமுக்கம் கடைசிவரை வெளிப்படாமலேயே போயிற்று.

எழுபது ஆண்டுகளாக இக் குழப்பம் நீடித்தே வருகிறது. வாதங்களைப் புறந்தள்ளி ஆராய்ந்தால் இங்குத் தமிழர் திருநாளுக்கு வகுத்த நோக்கங்களில் பல நிறைவேறியுள்ளன என்பதனை உணரலாம். தோட்டப்புற, பட்டணப்புரத் தமிழர் வாழ்வில் எத்தனையோ முன்னேற்றங்கள் கண்டுள்ளன. தமிழரிடையே கல்வித்துறையில் ஆர்வம் மிகுந்துள்ளது. வீட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகி வருவதைக் கண்டு மகிழ முடிகிறது. பொருளாதாரத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; தொழில் முனைவர்கள் உருவாகி வருகிறார்கள். இப்பொழுது எத்தனையோ மாநாடுகள், கருத்தரங்குகள், தன்முனைப்புத் தூண்டல்கள் நடந்து வருகின்றன. உலக அளவிலான ஒன்றுகூடல்கள் நடந்துவருகின்றன. கொரோனா நோய்பரவிவரும் இக் கடுமையான காலச் சூழலிலும் இயங்கலை வாயிலாக இக்காலச் சூழலுக்கேற்ப எத்தனையோ நல்ல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இனித் தமிழர் திருநாள் நோக்கங்களும் மாறுதல் அடைய வேண்டும்.

பொங்கலின் இன்றியமையாமை

இன்று பொங்கல் உலகளவில் தமிழர் எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்று கூடும் திருநாளாக விரிவு கண்டிருக்கிறது. அமெரிக்க குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பொங்கலுக்கு வாழ்த்துக் கூறும் ஒரு நல்ல நிலை மலர்ந்துள்ளது. மலேசியாவில் பொங்கலுக்குப் பொது விடுமுறை இல்லை எனினும், அரசு ஒப்பிசைவு – அங்கீகாரம் பெற்ற விழாவாக தலைவர்கள் – வாழ்த்துக் கூறும் விழாவாகப் பொங்கல் உறுதிப்பட்டுள்ளது. இவற்றைப் புதிய தலைமுறை சீர்தூக்கிப் பார்த்து ஒருமுடிவுக்கு வந்தாக வேண்டும்.

தமிழவேள் அறிமுகப்படுத்திய தமிழர் திருநாள் கொண்டாடப்பட்ட போதே, பொங்கலை யாரும் புறக்கணிக்கவில்லை.

‘பொங்கலும் தமிழர் திருநாளும்’ என்ற தம் கவிதையில் கவிவாணர் ஐ. உலகநாதன்

“பழமை எண்ணம் பரப்புக பொங்கல்
புதுமை எழுச்சியைப் புதுக்கு திருநாளே”
(கா. கலிய பெருமாள்,
தமிழ்க்குயில், 1967, மார்ச்சு)

என்று பாடினார்.

கிள்ளானில் தமிழவேள் பங்குகொண்ட தமிழர்திருநாள் ஒன்றனில்,

“இல்ல விழாவாய் இருக்கட்டும் பொங்கல்;
மேடை விழாவாய் மிளிரட்டும் திருநாள்”

என்று பாடினார், இக் கட்டுரை ஆசிரியர். தமிழவேள் இதற்கு மறுப்பேதும் கூறவில்லை.

இப்பொழுது பொங்கல் விரிவடைந்து உலகத் தமிழர் விழாவாகியுள்ளது என்பதனை நினைவில் கொள்ளல் வேண்டும்.

“பொங்கலே புத்தாண் டென்று
பூமி யதிரச் சொல்க ………………………. தமிழர்
முகவரியாக வைய மெங்கும்
முகிழ்ந்து நிற்கும் பொங்கல்’
(மா. அ. சந்திரன், மலேசிய நண்பன், 15.01.2015)
என்று விரிவடைந்துள்ளது பொங்கல்.

நிறைவுரை

தமிழின வரலாற்றில் பொங்கலின் நிலை, இடைக்காலத்தில் அதன் சீர்மை குலைந்தமை, மீண்டும் அது புத்துருப் பெற்றமை, மலேசியாவில் அது கொண்டாடப்பட்ட செய்திகள் எழுபது ஆண்டுகளுக்குமுன் இங்கு உருவாக்கப்பட்ட தமிழர் திருநாள் அதனால் ஏற்பட்ட நன்மைகள் நேர்ந்த சிக்கல்கள், இன்றும் தொடரும் குழப்பநிலை போன்றவற்றையெல்லாம் எழுத்துச் சான்றுகளுடனும் தக்கார் வாய்மொழிச் சான்றுகளுடனும் இக்கட்டுரையில் கண்ணோட்டம் இடப்பட்டது.

இங்குத் தமிழர் திருநாள் தோன்றிய காலம் முதல் (1952) அதன் நடவடிக்கைகளில் நிறைவாய்ப் பங்குகொண்டவன் என்னும் முறையிலும் 84 அகவையைத் தொட்டுள்ள என்பட்டறிவின் – அனுபவத்தின் துணை கொண்டும் இக் கட்டுரை எழுதப்பெற்றது.

இக்கட்டுரையை படித்துவிட்டு வெறுமெனே மடித்து வைத்தால் எப்பயனும் இல்லை. வேற்றுமைகள் எல்லாம் ஒழிய, காலமாறுதல்களுக்கேற்பப் பொங்கல் – தமிழர் திருநாளுக்கு ஒரு வடிவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். திறன்பேசி வந்து எல்லாவற்றையும் திசை திருப்பிவிட்ட இன்றைய நிலையில் குறைந்த நேரத்தில் நிறைவாய் பயன்விளையும் வண்ணம் விழாவை எங்ஙனம் வடிவமைக்கலாம் என்று எண்ணி முடிவெடுக்க வேண்டும்.

பொங்கல், தமிழர் திருநாள் என இரு விழாக்களைத் தனித்தனியே கொண்டாடித் தொடர்ந்து வேறுபட்டும் கிடப்பதை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து பொங்கலையே தமிழர் திருநாளாகக் கொண்டாடுவதென முடிவெடுத்தால் மிக மிக விரைந்தோடும் காலத்தோடு ஓடி வெற்றி காணலாம்.

‘காலம் பறக்குதடா – தமிழா
வாழப் பறந்திடடா!
கோளம் வலம்வரவே – உலகம்
கோலம் புனையுதடா!
……………………………….
ஒன்றிச் செயல்புரிந்தால் – நாம்
உச்சிக் குயர்வோமென
ஒன்றி முறைவகுப்பாய்!”

என்னும் நினைவில் வாழும் பாவலர் கரு திருவரசு கவிதைக் கொப்ப ஒன்றுபட்டு பொங்கலே தமிழர் திருநாளென கொண்டாட முடிவெடுப்போம். சாதி, சமய, உயர்வு, தாழ்வு என்பன போன்ற வேற்றுமைகளை மறப்போம். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என முடிவெடுப்போம். உலகத் தமிழரெல்லாம் ஒன்றிணைந்து, பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டு ஒன்றுபடுவோம்! உயர்வோம்!

பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என இரண்டு விழாக்களைத் தனித்தனியே கொண்டாடுவதா? பொங்கலையே தமிழர் திருநாளாகக் கொண்டு ஒரே விழாவாகக் கொண்டாடுவதா? என்று முடிவெடுக்க வேண்டும்.

பூனைக்கு மணிகட்டுபவர் யார் என்று ஒதுங்காமல் 2000ஆம் ஆண்டில் தமிழர்திருநாளுக்கு புத்தெழுச்சியூட்டிய அன்பர்கள் பல இயக்கங்களின் ஆதரவோடு இதனில் கருத்துச் செலுத்தி முடிவெடுக்க முயலலாம்.

எடுக்கும் முடிவு இனஅடையாளத்தைக் காப்பதாகவும் வேறுபாடுகளை எல்லாம் கடந்து தமிழர் அனைவரும் ஒன்றுபடும் விழாவாக – வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விழாவாக அஃது வடிவமைதல் வேண்டும். என்பதே பலவாறு ஆய்வு செய்து இக் கட்டுரை எழுதியதன் நோக்கமாகும்.

ஒன்றுபடுவோம்! உயர்வோம்!

பின்குறிப்பு:

கடந்த ஆண்டின் முற்பகுதியில் இக் கட்டுரை எழுதி தட்டச்சுக்கு அனுப்பியபின் இங்கு பல விதமான கருத்து மோதல்கள் எழுந்தன. அதனால் கட்டுரை வெளியிடப்படவில்லை. அவற்றிக்கு இக் கட்டுரையில் விடையுமுண்டு. அந்தச் சிக்கல் பேரளவு தணிந்துள்ள இவ்வேளையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

உசாத்துணை

1. இ. ஜே. சுந்தர், முகம் மாத இதழ், சென்னை, 2021, மே திங்கள்
2. டிரா மலேசியா, தமிழர் திருநாள் மலர், 2016
3. மா. அ. சந்திரன், மலேசிய நண்பன், 15.1.2015
4. கி. வீரமணி, விடுதலை நாளிதழ், 17.6.2012
5. தீக்கதிர், 2.12.2008
6. மா. இராமையா, இலக்கிய குரிசில், திசம்பர் 2000
7. முரசு. நெடுமாறன், மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், 1997
8.. கா. கலிய பெருமாள், தமிழ்க் குயில், மார்ச்சு 1967
9. கே. ஆர். இராமசாமி, பொங்கல் விழா மலர், 1967

அரிய செய்திகளைக் கூறி உதவிய அன்பு நெஞ்சர்:

1. பேரா. மறைமலை இலக்குவனார்
2. முனைவர் இ. ஜே. சுந்தர்
3. தான்ஶ்ரீ க. குமரன்
4. திரு. மா. செ. மாயதேவன்
5. திரு. எ. மு. சகாதேவன்
6. திரு. இரா. அன்பழகன்
7. கவிஞர் பாதாசன்
8. திரு. பழ. எ. அன்பழகன்
9. திரு. கு. தேவேந்திரன்

தொடர்புடைய முந்தைய கட்டுரையைக் கீழ்க்காணும் இணைப்பில்  படிக்கலாம் :

“பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” கட்டுரையின் (பகுதி 1) – முனைவர் முரசு நெடுமாறன்

“பொங்கலும் தமிழர்  திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 1) – முனைவர்  முரசு நெடுமாறன்

(இந்தக் கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளாகும். இந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகள் அல்ல. இந்தக் கட்டுரைகளில் காணப்படும் கருத்துகளின் நம்பகத்தன்மைக்கும், ஆதாரங்களுக்கும் செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது)