மனிதவள அமைச்சர், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தை மாதத்தில் உழவர்களால், தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது.
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது.
நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், பழைய குப்பைகளை மட்டுமன்றி, பழிக்கத்தக்க குணங்களையும், செயல்களையும் நீக்கி; போற்றுதற்குரிய குணங்களையும், செயல்களையும் ஏற்போம் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”.
தை முதல்நாள் சூரியனுக்காகப் பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடும் உன்னதமான திருநாள் பொங்கல்.
அதே வேளையில் தைமாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் பொங்கலோடு கலந்த இனிய புத்தாண்டாக இது மலரட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
கொரோனா, வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து மீண்டு வருவோம், இனியொரு தீங்கில்லை என்ற நம்பிக்கையோடு இந்த பொங்கலையும், புத்தாண்டையும் கொண்டாடுவோம். பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
உழைக்க நாம் தயாராக இருக்கும் வரை நமக்குத் தோல்வி என்பதில்லை. பிறரிடம் கையேந்தி வாழ்வதைவிட நாம் உழைத்து வாழ்வதே மேல். உழைக்கும் வர்க்கம் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என நம் முன்னோர்கள் உழைப்பையும், பிழைப்பையும் தேடி கடல் கடந்து சென்றதால்தான் இன்று உலகம் முழுதும் இந்தியர்கள் வாழ்கிறார்கள்.
ஆக எத்தனை இன்னல் வந்தாலும் இந்த புத்தாண்டில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்வோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
இன்றைய சுகாதாரச் சூழலை மனதில் கொண்டு கொஞ்சம் விலகி நின்றே கொண்டாடுவோம். மீண்டும் ஒரு கொரோனா அலை உலக நாடுகளைத் தாக்கி வரும் சூழலில், புதிய நடைமுறைகளுடன், கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்துப் பாதுகாப்புடன் இருப்பது அவரவர் கடமை.
மலேசியக் குடும்பமாக ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.