பெய்ஜிங் – இந்தோனிசியாவின் ஆச்சே பகுதியை நிலநடுக்கம் தாக்கி பலத்த உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் மேற்குப் பகுதி மாநிலமான சின்ஜியாங் (Xinjiang) வட்டாரத்தை இன்று 6.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
சின்ஜியாங் பகுதியின் தலைநகரான உரும்கி நகரிலிருந்து மேற்கு நோக்கி 100 கிலோமீட்டர் தொலைவில் 6 கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
இருப்பினும் இதுவரை மிகப் பெரிய பொருட் சேதமோ, உயிர்ச் சேதமோ அறிவிக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியிலுள்ள பேரங்காடியில் அடுக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து கீழே விழுந்தன என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உரும்கி நகரை நோக்கிய இரயில் பயணங்கள் நிறுத்தப்பட்டு, இரயில் பாதைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
சின்ஜியாங் சீனாவின் மிகப் பெரிய மாநிலப் பிரதேசமாகும். பரந்த பாலைவனத்தையும், மலைகளையும் கொண்டுள்ள இந்தப் பிரதேசம் சீனாவின், எண்ணெய், எரிவாயு மற்றும் பருத்தி உற்பத்தி பகுதியாகத் திகழ்கின்றது.