Home Featured நாடு அன்வார் இப்ராகிம் தீர்ப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

அன்வார் இப்ராகிம் தீர்ப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

615
0
SHARE
Ad

anwar-ibrahim-prayers

புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென தொடுத்திருந்த விண்ணப்பத்தை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தள்ளுபடி செய்துள்ளது.

மலாயா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் மக்கினுடின் (Tan Sri Zulkefli Ahmad Makinudin)  வாசித்த அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் – கூறுகள் பின்வருமாறு:

  • அன்வார் இப்ராகிமுக்கு எதிராகக் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் பிரதமர் துறை அலுவலகத்திற்கும் இடையில் தொடர்புகள் இருந்ததாகவோ, அவர்களுக்கிடையில் பரிமாற்றங்கள் எதுவும் நிகழ்ந்ததாகவோ ஆதாரம் காட்டப்படவில்லை.
#TamilSchoolmychoice

anwar-ibrahim-verdict-prayers-wan-azizah-speech

நேற்றிரவு அன்வார் இப்ராகிம் இல்லத்தில் நடத்தப்பட்ட சிறப்புத்  தொழுகை நிகழ்ச்சியில் அன்வாரின் மனைவியும் பிகேஆர் கட்சித் தலைவியுமான வான் அசிசா உரையாற்றுகின்றார்….

  • பிரதமர் துறை அலுவலகம் அன்வார் தீர்ப்பு குறித்து வேகமாகவும், அவசரம் அவசரமாகவும் விடுத்த பத்திரிக்கை அறிக்கையை அடிப்படையாக வைத்து, அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது.
  • அன்வாருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாகவோ, அதற்குப் பின்னரோ கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும், பிரதமர் துறை அலுவலகத்திற்கும் இடையில் தொடர்புகள், பரிமாற்றங்கள் இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. பிரதமர் துறை அலுவலகத்தின் ஊடகப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ தெங்கு சரிபுடின் தெங்கு அகமட்டின் சத்தியப் பிரமாணப் பதில், இதனை உறுதிப் படுத்தியுள்ளது.
  • அன்வாருக்கு எதிராக 2015 பிப்ரவரியில் வழங்கப்பட்ட 60 பக்கத் தீர்ப்பில் நீதிபதிகள் அன்வார் தரப்பு எழுப்பியிருந்த வாதங்களுக்கான தீர்ப்புக்கான தெளிவான, விரிவான காரணங்களையும், முன்வைத்திருக்கின்றனர்.

anwar-ibrahim-fed-court-verdict-14-december

புத்ரா ஜெயாவிலுள்ள கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெளியே அன்வாருக்கு ஆதரவாகத் திரண்டவர்கள் நடத்திய தொழுகை

  • அன்வாருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே, வாதங்களும் வாதப் பிரதிவாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்ததால், பிரதமர் துறை அலுவலகத்தின் தலையீடும், அறிக்கையும், நீதிபதிகளின் தீர்ப்பை பாதித்தது எனக் கூற முடியாது. எனவே, தனக்கு நியாயமான நீதியை நிலைநாட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அன்வாரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
  • பிப்ரவரி 10-ஆம் தேதி (2015) பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை மீது கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எந்தவித அதிகாரமும், செல்வாக்கும் இருக்கவில்லை. அத்தகைய அறிக்கையை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரமும் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இருக்கவில்லை.
  • அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா முறையாக நியமிக்கப்பட்டவர் என்பதோடு அவர் வழக்கை நடத்துவதற்கான எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்தார். எனவே, முரண்பாடான நலன்களை அவர் கொண்டிருந்தார் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷாபி அப்துல்லா அன்வாருக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு முறைகேடாக நடந்து கொண்டார் என முன்வைக்கப்பட்டிருக்கும் வாதங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. காரணம் அவற்றால் அன்வாருக்கு எதிராக கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தூண்டப்பட்டது எனக் கொள்ள முடியாது.

anwar-ibrahim-verdict-nurul-izzah-outside-court

இன்று கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெளியே, அன்வாருக்கு ஆதரவாகத் திரண்ட ஆதரவாளர்களிடையே அவரது புதல்வியும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா உரையாற்றுகின்றார்….

  • ஓரினப் புணர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வழவழப்பான ஜெல்லி, தரைவிரிப்பு (கார்பெட்) மற்றொரு அறையிலிருந்து கொண்டு வரப்பட்டது போன்ற அம்சங்கள் உயர் நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதால், அவை குறித்த வாதங்களால் அன்வாருக்கு எதிரான கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி எழுத முடியாது.
  • ஆதாரங்களின் தொடர்புகள், இணைப்புகள் விடுபட்டிருக்கின்றது என்ற வாதத்தையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
  • மேற்கூறிய காரணங்களால், 2015 பிப்ரவரியில் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் அன்வாருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்து நிராகரிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்கின்றோம்.

-செல்லியல் தொகுப்பு