மணிலா – டாவோ சிட்டியின் மேயராக இருந்த போது, ‘தனிப்பட்ட’ முறையில் பலரைக் கொலை செய்ததை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்ட்டே ஒப்புக் கொண்டதால், குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்படுத்தும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக இரண்டு பிலிப்பைன்ஸ் செனட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மணிலாவின் நடந்த கூட்டமொன்றில் ரோட்ரிகோ டூடெர்ட்டே பேசுகையில், தான் டாவோ சிட்டியின் மேயராக இருந்த போது, “கொலை வேட்டை” நடத்தும் நோக்கத்தில் பெரிய மோட்டார் சைக்கிளிலில் வீதிகளில் வலம் வந்ததாகவும், உள்ளூர் சட்டத்தின் படி தன்னால் முடியும் அது என்பதைக் காட்ட அவ்வாறு செய்ததாகவும் கூறியது தான் இந்த விசாரணைக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு, “நான் அதைத் தனிப்பட்ட முறையில் செய்திருக்கிறேன்”, “என்னால் செய்ய முடியும் என்றால் உங்களால் ஏன் முடியாது” என்றும் டூடெர்டே அக்கூட்டத்தில் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூலை மாதல் டூடெர்டே அதிபராகப் பதவி ஏற்றதில் இருந்து இதுவரை காவல்துறையின் போதை மருந்திற்கு எதிரான நடவடிக்கையின் கீழ் 2,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருமே கைது செய்யப்படும் சமயத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டூடெர்ட்டேயின் இந்த அறிக்கையால், அவர் விசாரணை செய்யப்படலாம் என்று செனட்டர் லெய்லா டே லிமா தெரிவித்துள்ளார்.
“அது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது என்பதோடு, அரசியலமைப்பின் படி படுகொலைகள் என்பது பெரும் குற்றங்கள் பிரிவின் கீழ் வருகின்றது. அவ்வாறு பெரும் குற்றங்கள் செய்தவர்கள் மீது அரசியலமைப்பின் படி குற்றவிசாரணை நடத்தப்படும் என்று டே லிமா தெரிவித்துள்ளதாக சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.