Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: வீரசிவாஜி – பெயரில் உள்ள வீரம் .. திரைக்கதையில் இல்லை!

திரைவிமர்சனம்: வீரசிவாஜி – பெயரில் உள்ள வீரம் .. திரைக்கதையில் இல்லை!

908
0
SHARE
Ad

veera-sivaji-45கோலாலம்பூர் – தனது அக்கா மற்றும் அக்கா மகளுடன் பாண்டிச்சேரியில் வசித்து வரும் சிவாஜி (விக்ரம் பிரபு), வாடகைக் கார் ஓட்டும் தொழில் செய்து வருகின்றார்.

தொழிலில் நேர்மையும், பிறரை நேசிக்கும் குணமும் கொண்ட விக்ரம் பிரபு, தற்செயலாக கதாநாயகி ஷாமிலியைச் சந்திக்கிறார்.

(யாரு ஷாலினி தங்கை ஷாமிலியா? ஆமாங்க.. அவங்களே தான்..)

#TamilSchoolmychoice

மோதலில் தொடங்கும் அவர்கள் உறவு மெல்ல காதலில் வந்து நிற்கிறது. எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கையில், விக்ரம் பிரபுவின் அக்கா மகளுக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவருகின்றது. அறுவை சிகிச்சைக்கு 25 லட்ச ரூபாய் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

ஆங்காங்கே கடன் வாங்கி 5 லட்ச ரூபாய் சேர்த்துவிடும் விக்ரம் பிரபுவை ஒரு கும்பல் மோசடி செய்து ஏமாற்றி விடுகின்றது. பணத்தை இழந்த விக்ரம் பிரபு ஒரு வியூகம் செய்கிறார்.

அவரது வியூகம் வெற்றி பெற்றதா? மோசடிக் கும்பலிடமிருந்து இழந்த பணத்தை மீட்டாரா? காதலியோடு சேர்ந்தாரா? என்பதே இரண்டாம் பாதி சுவாரசியம்.

பார்த்துப் பழகிய காட்சிகள்

veera-sivajiபடத்தின் மிகப் பெரிய குறையாகத் தெரிவதே.. அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்துப் போனவையாக இருப்பது தான்..

“ஐயா .. ஏமாத்திட்டாங்கய்யா..” என்று மழையில் நனைந்தபடி மக்கள் நியாயம் கேட்பது, ஹீரோ காரின் மீது ஹீரோயின் மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது என ரசிகனை ஈர்க்க வேண்டிய சுவாரசியமான காட்சிகள் அனைத்திலும் பழைமை நிரம்பி வழிகின்றது. அதனால் அடுத்தடுத்து நடக்கப் போகும் காட்சிகளை ரசிகனால் எளிதில் கணித்து விடமுடிகின்றது.

முதல் பாதி திரைக்கதையில் காதல் இருக்கிறது, ஹீரோயிசம் இருக்கிறது, அக்கா தம்பி பாசம் இருக்கிறது, தாய்மாமன் பாசம் இருக்கிறது. ஆனால் எதிலுமே ஒரு ஈர்ப்பு இல்லாமல் போனதற்கு முக்கியக் காரணம் காட்சிகளிலோ, வசனத்திலோ, நடிப்பிலோ புதுமை இல்லாதது தான்.

இரண்டாம் பாதியில் விக்ரம் பிரபு போடும் வியூகம் மட்டும் சோர்வடைந்த நம்மை கொஞ்சம் தட்டி எழுப்புகின்றது. ஆனாலும் மீண்டும் அதர பழசான காதல் காட்சிகளைக் கொண்டு வந்து திரைகதையின் வேகத்தையும், சுவாரசியத்தையும் தலையில் தட்டி உட்கார வைத்துகின்றார் இயக்குநர்.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுவைப் பொறுத்தவரையில் நன்றாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழியும், வசனமும், முகபாவணைகளும் அக்கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறது.

என்றாலும், முந்தைய படத்திற்கும், இதற்கும் நடிப்பில் பெரிய வித்தியாசம் இல்லை.

இப்படியே போயிட்டு இருந்தா கஷ்டம் பாஸ்..

ஷாமிலியின் பங்கு

veera-sivaji1கதாநாயகி ஷாமிலி கேமராவிற்கு ஒன்றும் புதிதல்ல.. சிறு வயது முதல் நடித்து வருபவர். அதோடு நடிப்பிற்காகப் பல விருதுகளை வென்றவர். அப்படி ஒரு கதாநாயகி கிடைத்தும் கூட, படத்தில் அவருக்கு ஒரு அழுத்தமான கதாப்பாத்திரம் இல்லாமல் வெறுமனே பைக்கில் வருவதும், போவதுமாக ஒரு பொம்மையாகப் பயன்படுத்தியிருப்பது பலவீனம்.

படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், நிஜத்தில் அஜித் மைத்துனியான ஷாமிலி படத்தில் விஜய் ரசிகை.

விக்ரம் பிரபு – ஷாமிலி சந்திப்பு அனைத்திலும் விஜய் – ஷாலினி நடித்த படத்தின் பாட்டு ஒன்று ஒலிக்கின்றது.

அதைப் பார்க்கும் அஜித் ரசிகர்கள் கோபத்தில் ‘அமர்க்களம்’ பண்ணிவிடுவார்கள் என்பதால், அவர்களை உற்சாகப் படுத்தவும் ஆங்காங்கே ‘தல’ பேரை இழுத்திருக்கிறார்கள்.

காமெடி

ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகாநதி சங்கர் என நான்கு காமெடி நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். அவர்களும் என்னென்னவோ செய்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் திரைக்கதை அமைப்பின் படி, அவர்களின் காமெடி எங்குமே எடுபடாமல் போனது வருத்தம்.

ஒளிப்பதிவு & இசை

எம்.சுகுமார் ஒளிப்பதிவில் பாண்டிச்சேரி பளிச்சென்று அழகாகத் தெரிகின்றது. பறவைக் கண் கோணத்தில் தார் சாலைகள், கட்டிடங்கள், கார் சேசிங் காட்சிகள் அழகு.

இமானின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு கை கொடுத்திருக்கிறது. ‘தாறுமாறு தக்காளி சோறு’, ‘சொப்பன சுந்தரி’ பாடல் இளைஞர்களைக் கவர்கிறது. அதோடு, தாய்மையை போற்றும் ஒரு பாடல் மனதை உருக்குகிறது. அப்பாடலைக் காட்சிப் படுத்தியிருக்கும் விதமும் அருமை.

veera-siva“இருக்கிறவன் கடவுள் கிட்ட கேக்குறான்.. இல்லாதவன் மனுஷன்கிட்ட கேக்குறான், “யோசிக்காம செஞ்சா அது உதவி.. யோசிச்சு போட்டா அது பிச்சை” இப்படி வசனங்கள் மட்டும் ஒரு சில இடங்களில் ஈர்க்கின்றது.

மொத்தத்தில் – வீரசிவாஜி – பெயரில் உள்ள வீரம் .. திரைக்கதையில் இல்லை!

-ஃபீனிக்ஸ்தாசன்