Home Featured நாடு அடுத்த பிரதமர்: பெரும்பான்மை இந்தியர்களின் தேர்வு அன்வார் இப்ராகிம்!

அடுத்த பிரதமர்: பெரும்பான்மை இந்தியர்களின் தேர்வு அன்வார் இப்ராகிம்!

789
0
SHARE
Ad

anwaribrahim540px_3_540_360_100

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இயங்கும் இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் என்ற மையம் நடத்திய ஆய்வில் பெரும்பான்மை இந்தியர்கள் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் வரவேண்டும் என விரும்புகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

அனைத்து இனங்களையும் சேர்த்து 1,716 பேர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் ஏறத்தாழ 40 சதவீத இந்தியர்கள் அன்வாரையே அடுத்த பிரதமராகக் காண விரும்புகின்றனர்.

#TamilSchoolmychoice

மகாதீர் அடுத்த பிரதமராக வருவதற்கு 33 சதவீத இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மொய்தீன் பிரதமராக வருவதற்கு 19 சதவீத இந்தியர்கள் விருப்பம் தெரிவிக்கும் வேளையில், லிம் கிட் சியாங் பிரதமராக வருவதற்கு 9 சதவீதத்தினரும், ஹாடி அவாங் பிரதமராக 2 சதவீத இந்தியர்களும் விரும்புகின்றனர்.

சீனர்களைப் பொறுத்தவரை லிம் கிட் சியாங் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக தேர்வு பெறுகின்றார். சுமார் 42 சதவீத சீனர்கள் லிம் கிட் சியாங் பிரதமராக வர விரும்பும் வேளையில் சுமார் 32 சதவீத சீனர்கள் அன்வார் பிரதமராக வருவதை விரும்புகின்றனர். மகாதீர் மீண்டும் பிரதமராக 14 சதவீத சீனர்கள் ஆதரவு தரும் வேளையில், 9 சதவீதத்தினர் மொய்தீன் யாசின் பிரதமராக வருவதற்கும், 3 சதவீதத்தினர் பாஸ் தலைவர் ஹாடி அவாங் பிரதமராக வருவதற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மலாய்க்காரர்களில் பெரும்பான்மையோர் மகாதீரை அடுத்த பிரதமராகக் காண விரும்புவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கும் வேளையில், அனைத்து இனங்களுக்கிடையிலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பெரும்பான்மையோர் அன்வார் இப்ராகிமையே அடுத்த பிரதமராகக் காண விரும்புகின்றனர்.

ஆய்வு எடுக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் அடுத்த பிரதமராக நாட்டை அன்வார் இப்ராகிம்தான் வழிநடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு அடுத்த நிலையில் மகாதீர் பிரதமராக வழிநடத்த வேண்டும் என 24 சதவீதத்தினரும், மொய்தீன் பிரதமராக வேண்டும் என 17 சதவீதத்தினரும் விரும்புகின்றனர். லிம் கிட் சியாங் பிரதமராக 15 சதவீதத்தினரும், ஹாடி அவாங் பிரதமராக 14 சதவீதத்தினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களிடையே இன்னும் அன்வார்தான் பிரபலமான அரசியல் தலைவராகத் திகழ்கின்றார். இளைஞர்களில் 29 சதவீதத்தினர் அன்வார் பிரதமராவதையே விரும்புகின்றனர்.

மகாதீர் இன்னும் இளைஞர்களின் ஹீரோதான்!

mahathir 1

இந்த ஆய்வில் ஆச்சரியப்படத்தக்க மற்றொரு முடிவு என்னவென்றால், 90 வயதைக் கடந்த நிலையிலும் மகாதீர் இன்னும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றவராகத் திகழ்கின்றார். அன்வாருக்கு அடுத்து இளைஞர்களிடையே 28 சதவீதத்தினர் நாட்டின் அடுத்த பிரதமராக மகாதீர் வருவதையே விரும்புகின்றனர்.

இளைஞர்களிடையே 16 சதவீதத்தினர் லிம் கிட் சியாங்கையும், மொய்தீன் யாசினையும் பிரதமராகக் காண விரும்பும் வேளையில் ஹாடி அவாங்கிற்கு 11 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான ஷாஹாருடின் படாருடின் இந்த ஆய்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் சிறையில் இருந்தாலும் அரசியல் ரீதியாக அன்வார் இப்ராகிம் இன்னும் முக்கியத்துவம் பெற்றத் தலைவராகத் திகழ்கின்றார் என்பதையே இந்த ஆய்வுகள் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ஆய்வு நடத்தப்பட்டவர்களில் 51 சதவீதத்தினர் அன்வார் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டுள்ளார் என்று நம்புகின்றனர்  அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.