Home Featured கலையுலகம் “பாம்பு கொத்துவதற்குத் தலையை திருப்பியது” – நடிகர் கே.எஸ்.மணியம் கூறும் திகில் அனுபவம்!

“பாம்பு கொத்துவதற்குத் தலையை திருப்பியது” – நடிகர் கே.எஸ்.மணியம் கூறும் திகில் அனுபவம்!

1110
0
SHARE
Ad

EVTகோலாலம்பூர் – என் வீட்டுத் தோட்டத்தில்.. மலேசிய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று. கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திகில் திரைப்படம், 2017-ம் ஆண்டு வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது அனைத்துலக திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது.

சிறந்த உருவாக்கத்திற்காக உலகளவில் பேசப்படும் என நம்பப்படும் இத்திரைப்படத்தில், நடிப்பைப் பற்றியும் பேச வைக்க அதில் சில முக்கியக் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

அவர்களில் ஒருவர் தான் மலேசியத் திரையுலகில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த புகழ்பெற்ற நடிகரான கே.எஸ். மணியம்.

#TamilSchoolmychoice

நடிகர் கே.எஸ்.மணியத்தை இத்தனை ஆண்டுகளில், தொலைக்காட்சி நாடகங்களிலும், தொலைக்காட்சிப் படங்களிலும், திரைப்படங்களிலும் எத்தனையோ விதமான கதாப்பாத்திரங்களில் பார்த்திருப்போம்.  இத்திரைப்படத்தில் அவரது ஏற்றுள்ள கதாப்பாத்திரம் இதுவரை அவர் ஏற்றிடாத ஒன்று.

ஆரம்பத்தில் எதிர்மறையாகத் தெரியும் அக்கதாப்பாத்திரம் படத்தின் இரண்டாம் பாதியில் அப்படியே மாறுவது இயக்குநரின் திறமைக்கும், கே.எஸ்.மணியம் அவர்களின் நடிப்புத் திறமைக்குமான சான்று.

பாம்பு ஒன்றுடன் அவர் போராடும் காட்சிக்காகவே அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். விஷமுள்ள அந்தக் கொடிய பாம்புடன் அவர் துணிச்சலாக நடித்திருப்பதை படக்குழுவினரே ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

இத்தனை சுவாரசியங்கள் நிறைந்த அவரது கதாப்பாத்திரம் குறித்து நடிகர் கே.எஸ்.மணியத்திடம் பேசியவை பேட்டி வடிவில் இதோ:-

செல்லியல்: என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தில் எதிர்மறைக் கதாப்பாத்திரம் செய்ய வேண்டும் என்று இயக்குநர் சொன்னவுடன், அதனை எப்படி எடுத்துக் கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்? 

கே.எஸ்.மணியம்: என்னைப் பொறுத்த வரையில் ஒரு நடிகன் எல்லாவித  பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். கார்த்திக் ஷாமளன் அவர்களின் முதல் படமான மெல்ல  திறந்தது கதவுப் படத்தைப் பார்த்தப் பிறகு அவரின் இயக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடையப் படம் ஏதாவது ஒன்றில் நான் நடிக்க வேண்டுமென அப்பொழுது அவரிடம் கூறினேன். என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரம் உண்டு  நடிக்க முடியுமாவென அவர் கேட்டப்பொழுது மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன்.

அவரிடம் நான் ஒன்றை மட்டும் கூறி உறுதிபடுத்திக் கொண்டேன். அது பெண்களைத் துன்பப்படுத்தும் காட்சியோ, கற்பழிப்புக் காட்சியோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே. என் வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பத்தில் எதிர்மறையான கதாபாத்திரமாக தோன்றினாலும் அது வேறு விதமான ஒரு கதாபாத்திரம். மேலும் ஒரே விதமான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து செய்வதால் இவருக்கு இதுதான் வருமென்ற எண்ணம் படம் பார்ப்பவர்களுக்குத் தோன்றும், நடிப்பும் சலித்துவிடும். அந்த”TYPE CAST” மாற வேண்டும் யாராவது எதிர்மறையான கதாபாத்திரங்களைத் தர மாட்டார்களா? என்று எதிர்பார்த்திருந்த எனக்கு ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ ஒரு நிறைவைத் தந்தது.

evtசெல்லியல்: உங்களின் நடிப்புக்குத் தீனி போடும் வகையில் அக்கதாப்பாத்திரம் இருப்பதாய் உணர்கிறீர்களா? 

கே.எஸ்.மணியம்: ‘என் வீட்டுத் தோட்டதில்’ திரைப்படத்தில் என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிப்புக்கு நிறையவே வாய்ப்பிருந்தது. அதை நிறைவாகவே செய்திருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். அதை ரசிகர்கள் தான் சொல்லவேண்டும். எனக்கு பாம்பென்றாலே பயம். நான் பாம்போடும் நடிக்கின்றேன் என இயக்குனர் ஆரம்பத்தில் சொல்லவில்லை. ஒளிப்பதிவுக்கு முதல் நாள் தான் அதை சொன்னார். மனதில் நடுக்கம் இருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக பாம்பு மன்னர் (பாம்பாட்டி) பக்கத்திலேயே இருந்தார். அவருடைய பல் பிடுங்காத நாகப்பாம்பு அது. நடித்து முடித்தவுடன் என்னை விட நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்கள் யாரென்றால் இயங்குநரும், படக்குழுவினரும் தான்.

செல்லியல்: இதுவரை நேர்மறையான கதாப்பாத்திரங்களில் உங்களைக் கண்டு ரசித்த ரசிகர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

கே.எஸ்.மணியம்: நான் முன்ன சொன்ன மாதிரி இது முழுமையான அல்லது கடுமையான வில்லத்தனம் பொருந்திய கதாபாத்திரம் அல்ல.ஒரு சில மனிதருக்குள் பொதுவில் ஏற்க முடியாத சில குணங்கள் இருக்கும். அவர்களுக்கு அது தவறாக தோன்றாமல்  இருக்கலாம். பிறருக்கு அது உடன்படாத ஒரு செயலாகத் தோன்றும் அது மாதிரியான கதாபாத்திரம் தான் அது. ஏற்பார்கள் என்றே எண்ணுகிறேன். படத்தில் என் கதாபாத்திரத்தின் முடிவு அவர்களின் வெறுப்பை மாற்றிவிடுமென்றே நம்புகிறேன்.

evt1செல்லியல்: அப்படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்? 

கே.எஸ்.மணியம்: பாம்போடு நடிக்கும் காட்சியில் ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும். பாம்பு என் முதுகின் மேல் ஊர்ந்து செல்லும் போதும் பக்கத்தில் படமெடுத்துக் காத்திருக்கும்போது சிறிது கால் அசைந்தாலும் கொத்துவதற்கு பாம்புத் தலையைத்  திருப்பும்போதெல்லாம், இயக்குனர்,”சார் அசையாதீங்க.. அசையாதீங்க” என்று கத்தும் போது,”பல் பிடுங்குன பாம்புதானே? ஏன் இவர் இப்படி பதற்றமா இருக்காரு?” என்று நான் எண்ணினேன். நான் குப்புறப்படுத்திருந்ததால் நடப்பது என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை. காட்சிக்கான ஒளிப்பதிவு முடிந்த பிறகு தான் அது பல் பிடுங்காத பாம்பென்று அறிந்தேன். அதை மறக்கவே முடியாது.

செல்லியல்: ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ படம் குறித்து உங்களின் பார்வை என்ன?

கே.எஸ்.மணியம்: இத்திரைப்படம் நம் மலேசியத் திரைப்படங்கள் தொடாத ஒரு கருவைப் பின்னணியாகக் கொண்டது. நிச்சயம் மக்களைக் கவரும். நான் இப்பொழுது கனடாவில் இருக்கின்றேன் . என் பேரன் ஒருவன் பல்கலைக்கழகத்தில்  திரைப்படத் துறையில் இறுதி ஆண்டு படிக்கின்றான். அவனும் அவன் நண்பர்களும் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ முன்னோட்டக் காட்சிகளின் ஒளிப்பதிவையும், காட்சிகளையும் பார்த்துவிட்டு இது மலேசியப் படமாகத் தெரியவில்லை, ஹாலிவுட் படத்துக்கு நிகராக இதைச் சொல்லலாம் என்று சொன்னபோது  நான் உண்மையிலேயே இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனரை என் மனதுக்குள் பாராட்டினேன். நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றாது. ‘என் வீட்டுத் தோட்டதில்’ விளைச்சளை பயமின்றி வாங்கலாம். பண விரயம் ஆகாது.

– இவ்வாறு நடிகர் கே.எஸ்.மணியம் தெரிவித்தார்.

உண்மை தான்..  நிச்சயமாக இது சராசரிப் படம் கிடையாது.. ரோலர்கோஸ்டர் அனுபவம் என்று சொல்லுவார்களே அது போல், படத்தில் பல இடங்களில் திகிலும், ஆசுவாசப்படுத்த சில காட்சிகளும், காதலாகி கசிந்துருக சில காட்சிகளும் என முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.

ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம், உலகிலேயே திகில், மர்மங்கள் நிறைந்த குறும்படங்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்களை அங்கீகரிப்பதற்கென நடத்தப்படும் முதல் மற்றும் ஒரே திரைப்பட விழாவான புவேர்ட்டோ ரிக்கோ திகில் திரைப்பட விழாவில் (Puerto Rico Horror Film Fest – PRHFF) ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரையீடு கண்டது.

அடுத்ததாக, தற்போது, மெக்சிகன் தேசியத் திரைப்படக் காப்பகத்தில் திரையிடத் தேர்வாகியுள்ள இத்திரைப்படம், மெக்சிகோ சினிமா ரசிகர்களையும் மிரட்டவுள்ளது.

இத்திரைப்படவிழாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசியாவில் இருந்து வந்திருக்கும் திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த செய்தியாளர்கள் அதன் தரத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனாதாக திரைப்படவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரம்மாண்ட திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் படமே ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்பது கூடுதல் சிறப்பு.

அதோடு மிக விரைவில் மலேசிய ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கப் போகிறது..காத்திருப்போம்..

 – ஃபீனிக்ஸ்தாசன்