கோலாலம்பூர் – புது வருடத்தை வரவேற்கும் வகையில், அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில், “மை ஜெர்னி” மற்றும் “கே.ல் டூ காரைக்குடி” போன்ற புத்தம் புதிய அசத்தலான நிகழ்ச்சிகள் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில் ஒளிபரப்பப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி, மலேசியா மண்ணில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவையான மற்றும் நியாயமான விலையில் கிடைக்கும் சாலையோர உணவுகளைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய பரிமாணத்தில் ‘ரசிக்க ருசிக்க’ பாகம் 3 நிகழ்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இது குறித்து அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “நாங்கள் எங்களின் உள்ளடக்கங்களை முன்னேற்றம் காணும் வகையில் புது முயற்சியுடன் பலதரப்பட்ட தரமான நிகழ்ச்சிகளை உள்நாட்டு மற்றும் உலகளவில் உள்ள நேயர்களுக்கு வழங்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரிவுப்படுத்தி வருகிறோம். அவ்வகையில், சுற்றுலா மற்றும் உணவு உட்பட வாழ்க்கையில் நுண்ணிய விஷயங்களில் ஆர்வமுள்ள நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் துணை நிற்கும்,” என்றார்.
“அதோடு, இதன் வழி புதிய ஆண்டில் சரியான, மகிழ்ச்சியான மற்றும் எதிர்பார்ப்புடைய சூழ்நிலையை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிகள் புதிய வாழ்க்கை அனுபவங்களைச் சந்திக்கவும் வழிவகுக்கும்” என அவர் தெரிவித்தார்.
“மை ஜெர்னி” – டிசம்பர் 31- ஆம் தேதி முதல் (ஒவ்வொரு சனிக்கிழமை, இரவு 9.30 மணிக்கு) 13 அத்தியாயங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில் கிளாசிக் கார் ஆர்வலர்களான ருக்சன் முனிசிங் மற்றும் மணிவண்ணன் மணிகுமாரன் தங்களுடைய “Classic 1971 Ford Capri” இரக காருடன் ஐந்து நாடுகளுக்கு ஒரு அபார பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மலேசியாவில் தொடங்கி தாய்லாந்து, மியான்மார், இந்தியா இறுதியாக கடல் கடந்து இலங்கையைச் சென்று அடைந்து சுமார் 11,000 கிலோ மீட்டர் தூரம் வரைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையைப் பிரதிப்பலிக்கும் வகையில் இவர்களின் பயணத்தின் போது நம் நாட்டின் தேசியக் கொடியையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கியுள்ளனர்.
“கே.எல் டூ காரைக்குடி” – ஜனவரி 1-ஆம் தேதி முதல் (ஒவ்வொரு ஞாயிறுக்கிழமை, இரவு 9 மணிக்கு) 39 அத்தியாயங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியை நம் மண்ணின் மைந்தன் டேனிஸ் குமார் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அறிவிப்பாளர் நிஷா வொங் தொகுத்து வழங்குவார்கள். இவர்கள் இருவருமே ராயல் என்பீல்ட் பைக்கையைக் கொண்டு மலேசியா, தாய்லாந்து, மியான்மார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சுமார் 7000 கிலோ மீட்டர் தூரம் வரைப் பயணித்துள்ளனர்.
“ரசிக்க ருசிக்க பாகம் 3” – ஜனவரி 1-ஆம் தேதி முதல் (ஒவ்வொரு ஞாயிறுக்கிழமை, இரவு 9.30 மணிக்கு) 2014-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இரசிகர்களின் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பைப் பெற்ற “ரசிக்க ருசிக்க” நிகழ்ச்சி மீண்டும் புத்தம் புது பொலிவோடு பாகம் 3 விரைவில் ஒளிபரப்படவுள்ளது. 13 அத்தியாயங்கள் கொண்ட இந்நிகழ்ச்சியை பால கணபதி வில்லியம் தொகுத்து வழங்குவார். கெடா முதல் ஜோகூர் மாநிலம் வரை சாலையோர உணவுகளைப் பற்றியைத் தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.