Home கலை உலகம் ராகா அறிவிப்பாளர் விகடகவி மகேன் நேர்காணல்

ராகா அறிவிப்பாளர் விகடகவி மகேன் நேர்காணல்

146
0
SHARE
Ad

ராகா வானொலியின் அறிவிப்பாளராக நேயர்களை ஈர்த்து வரும் விகடகவி மகேனுடன் நடத்தப்பட்ட நேர்காணல்:

உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றியச் சுவாரசியமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

2004-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோவின் ரியாலிட்டி நடனப் போட்டியான ‘ஆட்டம் 100 வகை’-இன் முதல் பகுதி நேரத் தொகுப்பாளராக ஆவதற்கு முன்பு நான் 10 ஆண்டுகளாக இயந்திரப் பொறியாளராகப் பணிபுரிந்தேன். 2011-இல், நான் எனது முழுநேர நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் பயண நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன்.

வானொலி அறிவிப்பாளராவதற்கானப் பின்னணியில் உங்களின் உத்வேகம் என்ன?

#TamilSchoolmychoice

2014 முதல் வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நேர்முகத்தேர்வுகளில் பங்கேற்றதன் மூலம் தொடர்ந்தேன். பயண நிகழ்ச்சியில் பணிபுரிந்தக் காரணமாக நான் அப்போது பெற்ற வாய்ப்பை நிராகரித்து விட்டேன். வெள்ளிக்கிழமைகளில் விருந்தினர் அறிவிப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பை, பேசுவதற்கான எனது ஆர்வம் வழங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ‘ஹைப்பர் மாலை’ அறிவிப்பாளராகப் பணிபுரிந்தேன். ஜனவரி 2024 முதல், புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரான உதயாவுடன் இணைந்துக் ‘கலக்கல் காலை’ அறிவிப்பாளராக வானொலியில் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.

உங்களின் கலக்கல் காலை அங்கத்தில் சிலச் சிறப்பம்சங்களை இரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

அறிவிப்பாளர்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்தும் ‘ராஜா-வா ராணி-யா’ என்ற பிரிவு, இரசிகர்களுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கும் தகவல் பிரிவானக் ‘கூகுள் கூகுள்’, நேயர்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும் தினசரி விவாதத் தலைப்புகள் உட்படக் கலக்கல் காலை-இன் அனைத்துப் பிரிவுகளும் மிகவும் சுவாரசியமானவை மற்றும் என் இதயத்திற்கு நெருக்கமானவை. ‘ராஜா-வா ராணி-யா’ என்றப் பிரிவில் ஓர் அறிவிப்பாளர் ‘ஆண்’ பக்கமும், மற்றவர் ‘பெண்’ பக்கமும் இருப்பர். குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற அறிவிப்பாளர் ஒவ்வொரு மாத இறுதியில் தண்டிக்கப்படுவார்.

உங்களின் இணை அறிவிப்பாளரான உதயாவுடன் இணைந்து கலக்கல் காலையைத் தொகுத்து வழங்குவதில் எவ்வளவு உற்சாகமாக உணர்கிறீர்கள்?

நான் மிகவும் போற்றும் அனுபவமும் அறிவும் மிக்க மூத்த அறிவிப்பாளர், உதயா. உதயாவுடன் இணை அறிவிப்பாளர் பணியை ஏற்க முதலில் எனக்கு சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் குரல் பண்பேற்றம் மற்றும் தொனியில் கவனம் செலுத்துதல், அறிவிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் என பல அறிவிப்புக் கூறுகளை வலுப்படுத்த ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். இப்போது எங்களுக்கு இடையே உள்ளச் சகோதரத்தன்மையை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

நடிகர், பாடகர் மற்றும் தொகுப்பாளராகப் பல அவதாரங்களைக் கடந்து வானொலி அறிவிப்பாளராக மாறிய அனுபவம் எவ்வாறு உள்ளது?

ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகக் கலைத் துறையில் தொடங்கிய என் பயணம் முதல் உற்பத்தித் துறை வரை நான் பல்வேறுப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். எனது அனுபவத்தில், பல்வேறுப் பாத்திரங்களைச் செவ்வெனக் கையாள நேர நிர்வாகம் மிக முக்கியம் என்று எண்ணுகிறேன்.

அறிவிப்பாளராக நீங்கள் எதிர்கொண்டச் சில சவால்கள் யாவை, அவற்றை எவ்வாறுக் களைந்தீர்கள்?

நான், மொழி என்று கூறுவேன். ஏனென்றால், நான் ஒரு ராப் பாடகர் என்பதால், நேரடியான மற்றும் கடினமான எனதுப் பாடல் வரிகள் போல, நான் பேசும் பாணியும் நேரடியானது. இதனால், யார் மனதும் புண்படாமல் பணிவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் முயற்சியில் நான் சவால்களை எதிர்கொண்டேன். அதைத் தொடர்ந்து, நான் இன்னும் புலமை பெறாத வானொலி நிலையத் தொழில்நுட்பப் பணியானப் பேனலிங் மற்றும் அதிகாலை 4 மணிக்கு நான் எழுந்திருக்கும் நேரம் ஆகியவை ஓர் அறிவிப்பாளராக நான் எதிர்கொள்ளும் சவால்களில் சில.

அறிவிப்பாளராக ஏதேனும் சுவாரசியமானத் திட்டத்தில் பணிப்புரிகிறீர்களா? ஆம் எனில், அதைப் பற்றிப் மேலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

உதயா இடம்பெறும் ஓர் இசைக் காணொலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அது உறுதியானப் பிறகு அதைச் சார்ந்தத் தகவல்கள் இரசிகர்களுடன் பகிரப்படும்.

வானொலி அறிவிப்பாளராக உங்களின் சமீபத்திய சாதனைகள் அல்லது மைல்கற்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பொது இடங்களில் இரசிகர்களிடமிருந்து நாங்கள் பெறும் பாராட்டுகளும் அபரிமிதமான ஆசீர்வாதங்களுமே எங்களின் சாதனை என்றுக் கூறுவேன்.

வானொலி அறிவிப்பாளராக உங்களின் வெற்றியை எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?

நேயர்களின் நம்பிக்கையைப் பெறுவது மட்டுமல்லாமல் தினசரித் தலைப்புகளைப் பற்றிய பயனுள்ள நுண்ணறிவு மற்றும் அதை வெளிப்படுத்தும் பேச்சுத்திறன் என வானொலி அறிவிப்பாளராக எனது வெற்றியை இவ்வாறே வரையறுக்கிறேன். நேயர்கள் எந்தவொரு அச்சமுமின்றி நம்முடன் எதையும் பகிர்ந்துக் கொள்ளும் சூழலை உருவாக்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் போது வானொலி அறிவிப்பாளராக வெற்றிப் பெறுகிறோம்.

வானொலி அறிவிப்பாளராக உங்களின் குறிப்பிடத்தக்க நினைவகம் அல்லது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

தமிழ்ப்பள்ளிக்குச் சென்று தமிழ்ப்பள்ளியில் பயில்வதற்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது, எனது ஆஸ்திரேலியா பயணத்தின் போது ராகா மற்றும் எனது அறிவிப்புகளைப் பற்றிய நேயர்களின் நேர்மறையான உரையாடல் என ஒரு வானொலி அறிவிப்பாளராக எனது குறிப்பிடத்தக்க நினைவுகளில் சில.

வானொலி அறிவிப்பாளராக ஆகச் சில முக்கியக் குணங்கள் யாவை?

ஒழுக்கம், அறிவு, சிறந்த கேட்கும் திறன், நேரம் தவறாமை, குழுப்பணி, நட்பு, வேடிக்கை மற்றும் எளிதாகப் பேசும் திறன் ஆகியவை வானொலி அறிவிப்பாளராக இருப்பதற்குத் தேவையான சில குணங்கள் என்று நான் கருதுகிறேன்.

வானொலி அறிவிப்பாளராக விரும்பும் ஒருவருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஓர் அறிவுரை என்ன?

ஒரு வானொலி அறிவிப்பாளராக இருப்பது எளிய விஷயம் அல்ல. ஏனெனில் ஒருவர் நல்லத் தனிப்பட்டத் திறன், பேச்சுத்திறன், அறிவு, பணிவு மற்றும் மிக முக்கியமாகப் பிரபலத்தைப் பொருட்படுத்தாமல் அணுகக்கூடியவராக இருத்தல் அவசியம். எனவே, வானொலி அறிவிப்பாளராகப் பணியைத் தொடர ஒருவர் விரும்பினால் இந்தத் திறன்களையும் குணங்களையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய முன்மாதிரி அல்லது வழிகாட்டியைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக எனது 20-ஆம் வயதுகளின் தொடக்கத்தில் HITZ.Fm-ஐக் கேட்பேன். ஜேஜே மற்றும் ரூடி ஆகியோர் எனது முதல் முன்மாதிரிகள். அதைத் தொடர்ந்து ராகாவின் உதயா மற்றும் ஆனந்தா ஆகியோரும் எனது முன்மாதிரிகள். ஓர் ஊடக ஆளுமையாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ட்ரெண்ட்செட்டர் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் அவரது வார்த்தைகள் மக்களிடம் நேர்மறையாக எதிரொலிக்கின்றன.

வானொலி அறிவிப்பாளராக நீங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்த விருப்புகிறீர்கள்?

வானொலியிலோ அல்லது வேறு எங்கும் என் குரலைக் கேட்கும் போதெல்லாம் இரசிகர்களுக்கு நேர்மறையான உணர்வைக் கொண்டு வந்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பினேன். கலக்கல் காலை நிகழ்ச்சியின் மூலம் தினமும் காலையில் அவர்களின் ஆற்றலைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன்.

இரசிகர்களுக்கு நீங்கள் ஏதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?

நண்பர்களே, இந்த வாழ்க்கையில் கவலைப்பட ஒன்றுமில்லை, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள், மற்றவர்களை மகிழ்வித்தும் மகிழ்ச்சியடைய முடியும். வாழ்க்கை என்பது நமக்குள் மகிழ்ச்சியைக் கண்டறிவதே!