கோலாலம்பூர் – தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மஇகா உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 51-ம் ஆண்டு பேராளர் மாநாட்டிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த டி.மோகன் இது குறித்து பேசுகையில், “தமிழ்ப் பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்படுவது அவசியமானது. சமய ஈடுபாடு குற்றச்செயல்களை தடுக்கும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இந்த விவகாரத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மலேசிய இந்து இளைஞர் பேரவை சமயக்கல்வியை கட்டாயமாக்குவது குறித்த வேலைகளில் முனைப்பு காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
“எந்த சமயமாக இருந்தாலும் அதனை பின்பற்றுபவர்கள் அது சார்ந்த அறிவினைக் கொண்டிருத்தல் அவசியம். அதற்கேற்ப அந்தந்த சமயம் சார்ந்த கல்வியை அவர்களுக்கு வழங்குதல் வேண்டும். இந்து சமயத்தை பொறுத்த வரையில் சமய ஈடுபாடு குறையும் தருவாயில் வேறு மாதிரியான பிரச்சனைகள் நமது சமுதாயத்தில் உருவெடுக்கின்றன. அதனை தடுக்கும் சக்தியாக மலேசிய இந்து இளைஞர் பேரவை இருத்தல் வேண்டும்.”
“ஆலயங்களும் நமது சமய அறிவினை சமுதாயத்தினர்களுக்கு புகுத்தும் நிலைப்பாட்டினையும், தன்முனைப்பு ஆற்றலை வழங்கும் இடமாகவும் விளங்க வேண்டும். ஆலயங்களை பெரிதாகக் கட்டுவதை விட அந்த ஆலயங்களில் மக்களுக்கான சேவைகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும்”
“நமது நாட்டில் மூவின மக்களும் சுபிட்சமாக வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு நமது ஒற்றுமை வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் சமயம் சார்ந்த சீண்டல்களை நாம் அனுமதிக்க கூடாது. ஜாகிர் நாயக் உள்ளிட்டவர்கள் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் சரி மதம் சார்ந்த சீண்டல்கள் தடுக்கப்பட வேண்டும்”
“அந்த நிலைப்பாட்டினை நாம் கொண்டிருந்தால் நாடும், நாட்டும் மக்களும் ஒரே மலேசியக்கோட்பாட்டில் இன்னும் சிறப்பாக இருக்கும்” இவ்வாறு டி. மோகன் தெரிவித்தார்.
அதோடு மலேசிய இந்து இளைஞர் பேரவை தலைமைத்துவத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்ப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.