கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனைத்து கிறிஸ்துவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“ஆண்டு நிறைவடைவதற்கு முன்பாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ், நண்பர்களையும் குடும்பங்களையும் மலேசியாவிலுள்ள ஒன்றாக இணைக்கின்றது. இந்தத் தருணத்தில் கிறிஸ்துவ மதம் போதிக்கும் நன்னெறிகளையும், மற்ற மிகச் சிறந்த மதங்கள் போதிக்கும் நன்னெறிகளையும் பரஸ்பர மரியாதையோடு நினைவு கூருவதும், ஒருவருக்கொருவர் மத சகிப்புத் தன்மையைப் பின்பற்றுவதும், பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதும் பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். இதே நன்னெறிகள்தான், பலவகைகளிலும் மாறுபட்ட, துடிப்பான நமது மண்ணின் மைந்தர்களை ஒருவரோடு ஒருவர் பிணைத்து வைத்திருக்கின்றது” என நஜிப் தனது கிறிஸ்மஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலும், அயல் நாடுகளிலும் கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் நஜிப் தெரிவித்துள்ளார்.