சபரிமலை – சுவாமி ஐயப்பனின் திருத்தலமான சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆந்திர மாநிலத்து பக்தர்களாவர்.
காயமடைந்தவர்கள் சபரிமலை சந்நிதான மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கூட்ட நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து சபரிமலை மூல சந்நிதானத்துக்கும், மல்லிகாபுரத்தம்மன் சந்நிதிக்கும் இடையில் இருந்த கயிற்றுத் தடுப்பு அறுந்ததால் கூட்டத்தினர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
மோசமான நிலையில் காயமடைந்த இருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மேலும் மூவர் பம்பா மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
சுவாமி ஐயப்பனுக்கு இன்று திங்கட்கிழமை மண்டல பூஜை நடைபெறுகின்றது. அதனை முன்னிட்டு சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி எனப்படும் ஆபரணங்கள் நேற்று மாலை சபரிமலை சந்நிதானத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகரித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.