புது டில்லி: கடந்தாண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் முடிவினை இன்று வியாழக்கிழமை நீதிமன்றம் வழங்கியது.
தீர்ப்பின் முடிவில் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட உத்தரவுக்கு தற்போதைக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை ஏழு நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்று நூற்றாண்டுகளாக பெண்கள் வழிபட விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.
இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அதற்கு எதிராக பொது மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். ஒரு சிலர் கோயிலில் தரிசனம் செய்தும் கீழே இறங்கினர். அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து இன்று முடிவு வழங்கப்பட்டுள்ளது.