கோலாலம்பூர்: மலேசியாவின் வான்வெளி மதிப்பீட்டை வகை 1-லிருந்து வகை 2-ஆக தரமிறக்கிய நடவடிக்கையைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடம் (எப்ஏஏ) விளக்கம் கோரியுள்ளதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்வைக் கண்டுபிடித்து மலேசியா நிலைமையை மேம்படுத்தும் வகையில் இந்த விளக்கம் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று தெரிய வேண்டும். அதன் தாக்கம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அதனை நாங்கள் சமாளிப்போம். நாங்கள் திறமையற்றவர் என்று அவர்கள் சொன்னால், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், உலகின் 20 பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது.”
“மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு இஸ்தான்புலில் சபிஹா கோக்கென் அனைத்துலக விமான நிலையத்தை (துருக்கியில்) நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர், இது சிறிய சாதனையல்ல.” என்று அவர் தெரிவித்தார்.
“இன்னமும் நிறைய நாடுகள் தங்களின் விமான நிலையத்தை பாதுகாப்பாக நிர்வகிக்க அழைப்பு வந்துள்ளது. கூடுதலாக, இந்தோனிசியா, சீனா, அரேபியாவில் நமது விமானிகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே நாம் திறமையானவர்கள்.”என்று அவர் கூறினார்.
மலேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஏதேனும் தவறுகள் இருந்தால் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று டாக்டர் மகாதீர் முன்பு தெரிவித்திருந்தார்.
எப்ஏஏ மலேசியாவின் வான்வெளி மதிப்பீட்டைக் குறைத்து, நாட்டின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு விமானங்களை அதிகரிப்பதைத் தடைசெய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.