புது டில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் எனும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த மேல்முறையீட்டின் முடிவினை நாளை வியாழக்கிழமை (நவம்பர் 14) உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றம், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அதற்கு எதிராக பொது மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். ஒரு சிலர் கோயிலில் தரிசனம் செய்தும் கீழே இறங்கினர். அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து அது குறித்து உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 தேதியன்று, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கேரளாவின் புகழ்பெற்ற அய்யப்ப சன்னதிக்குள் நுழைவதைத் தடுக்கும் தடையை நீதிமன்றம் நீக்கியது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த இந்து மத நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அது அறிவித்தது.
இதனை எதிர்த்து, புகழ்பெற்ற கோயிலின் மரபுகள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவம்பர் 16 முதல் மண்டல பூசைக்காக கோயில் மீண்டும் திறக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தீர்ப்பு வர இருக்கிறது.
சுமார் 2,500 காவல்துறையினர் மற்றும் பெண்கள் கோவில் வளாகத்திலும் அதைச் சுற்றியும் இரண்டு வாரங்களுக்கு குவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.