கோலாலம்பூர் – விரைவுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பேருந்தை வேகமாகச் செலுத்தினாலோ அல்லது வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டாலோ, அதில் பயணம் செய்யும் பயணிகள் நேரடியாக போக்குவரத்து ஆணையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தரை பொதுப்போக்குவரத்து ஆணையம் (Spad) அறிவித்துள்ளது.
இது குறித்து தரைப் பொதுப்போக்குவரத்து ஆணையத்தின் மூத்த நிர்வாகி சே ஹாஸ்னி சே அகமட் சையத் கூறுகையில், விரைவுப் பேருந்துகளில் இனி, போக்குவரத்து ஆணையத்தின் 24 மணி நேர அவசர அழைப்பு எண்கள் இருக்கும் என்று தெரிவித்தார்.
“பயணிகள் எல்லா விவரங்களையும் தெரிவிக்க வேண்டும், அதாவது, என்னது? எங்கே? எப்போது? ஏன்? மற்றும் எப்படி? போன்ற கேள்விகளின் அடிப்படையில் பயணிகள் புகார் அளிக்க வேண்டும்” என்று சே ஹாஸ்னி தெரிவித்துள்ளார்.
பயணிகளின் புகார் கிடைத்தவுடன் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் சே ஹாஸ்னி உறுதியளித்துள்ளார்.