Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: துருவங்கள் பதினாறு – அவசியம் பார்க்க வேண்டிய போலீஸ் ஸ்டோரி!

திரைவிமர்சனம்: துருவங்கள் பதினாறு – அவசியம் பார்க்க வேண்டிய போலீஸ் ஸ்டோரி!

861
0
SHARE
Ad

duruvangal-16கோலாலம்பூர் – சடலம் ஒன்று சாலையில் கண்டெடுக்கப்படுகின்றது.. அது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இருவரைக் காணவில்லை என அவர்களது உறவினர்களிடமிருந்து தனித்தனியே காவல்துறைக்கு புகார் வருகின்றது.

இம்மூன்று வழக்கையும் விசாரணை செய்கிறார் காவல்துறை உயர் அதிகாரியான ரகுமான். விசாரணையில் ஒவ்வொன்றாகத் தோண்டத் தோண்ட இம்மூன்று வழக்கிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருப்பது தெரிய வருகின்றது. அது என்ன? என்பதை நோக்கி தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது.

கொலையாளி – போலீஸ், இந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் சினிமா வரை அடிப்படையில் ஒரே காரணத்தை மனதில் வைத்து தான் உருவாக்கப்படுகின்றன. அது என்னவென்றால், விறுவிறுப்பு. ரசிகனின் கவனத்தைச் சிதறவிடாமல் திரையில் ஈர்த்து வைத்திருப்பது.

#TamilSchoolmychoice

dhuruvangal_16அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன். இவ்வளவு சிக்கலான திரைக்கதையை குழப்பமின்றி தான் நினைத்தபடியே காட்சிப்படுத்துவது அதை விட சிக்கலான, சவால் நிறைந்த ஒரு பணி. அதனை மிகத் தெளிவாக செய்திருக்கிறார்.

எங்குமே லாஜிக் இடித்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாகப் பார்த்து திரைக்கதையைக் கையாண்டிருக்கிறார்.

அதிகாலை பேப்பர்காரர், குறும்படம் எடுக்கும் இளைஞர்கள், ரகுமானின் பங்களா பராமரிப்பு வேலைகள் நடப்பதாகக் காட்டுவது என பல இடங்களில் இயக்குநரின் புத்திசாலித்தனம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.

அதேபோல் படத்தில் இடம்பெறும் வசனங்கள் போலீஸ்காரர்களின் நுட்பமாக கவனிக்கும் திறனை உணர்த்துகிறது.

உதாரணமாக, “எக்சைட்மெண்ட்ல என்னிக்கும் குளூவ நோட் பண்ணாம விட்ற கூடாது”, “எல்லா கேஸ்லயும் ஒரு மேஜிக் குளூ வரும். அதை போலீஸ்காரன் தேடிப் போகத் தேவையில்லை. அதுவா அவன தேடி வரும்” போன்ற வசனங்கள் ரசிகனின் ஆர்வத்தைக் கூட்டும் சுவாரசியமூட்டிகளாக செயல்படுகின்றன.

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு

dhuruvangal-pathinaaruகார்த்திக்கின் திரைக்கதைக்கு, பக்கபலமாக படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கிறது.

பல இடங்களில் திரும்பத் திரும்ப ஒரே காட்சிகள் பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலையில், ரசிகனுக்கு சிறிய அளவிலும் சோர்வு ஏற்பட்டுவிடாத வகையில், அதனை மிக அழகாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீஜித் சாராங். அவரது பணியில் ஒரு சிறு தொய்வு ஏற்பட்டிருந்தாலும் கூட ரசிகன் குழம்பியிருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நகர்வையும் திரையில் தேதி, நேரம் உள்ளிட்டவைகளோடு காட்டுவது நெருடவில்லை. ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருக்கின்றது.

அதேநேரத்தில், இந்த விறுவிறுப்பான கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை சுஜித் சாராங் செய்திருக்கிறார். காட்சிகள் அனைத்தும் அவ்வளவு அழகு. இந்தக் கதையைப் பொறுத்தவரையில் முழுக்க முழுக்க போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகர்வதால், பிரம்மாண்டமான காட்சிகளின் தேவை இல்லை. அதனை உணர்ந்துள்ள சுஜித், சம்பவம் நடக்கும் இடங்களில் உள்ள சின்னச் சின்ன விசயங்களைக் கூட கருவிகளாகப் பயன்படுத்தி அக்காட்சியின் வீரியத்தைக் கூட்டியிருக்கிறார்.

உதாரணமாக, கொலை நடக்கும் இடத்தில் கொலையாளியைக் காட்டாமல் நிழலைக் காட்டுவது, சம்பவ நேரத்தில் பெய்யும் கனமழை என ஒளிப்பதிவில் அவ்வளவு சுவாரசியங்கள் நிறைந்துள்ளன.

ஜேக்ஸ் பீஜாய் பின்னணி இசை படம் முழுவதும் மிரட்டல். அதுமட்டும் தனித்துத் தெரியாமல் காட்சிகளோடு பிணைந்து வருவது சிறப்பு.

ரகுமான்

duruvangal-pathinaaruநடிகர் ரகுமானின் கச்சிதமான நடிப்பை கடைசியாக ‘சங்கமம்’ படத்தில் பார்த்தது. அதன் பிறகு பல தமிழ் படங்களில் அவர் வந்து போனாலும் கூட, ‘துருவங்கள் பதினாறு’ அவரை தமிழில் அடுத்த சுற்றுக்கு அழைத்து வந்திருக்கிறது.

தீபக் கதாப்பாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்தும் ரகுமான் படம் முழுவதும் தனது தனித்துவமான நடிப்பால் ஈர்க்கிறார். ரகுமானுக்குப் பதிலாக அவர் நடித்திருக்கலாமோ?, இவர் நடித்திருக்கலாமோ? என ரசிகன் கற்பனை செய்து விடாத படி நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரகுமான்.

புகார் அளிக்க வரும் டெல்லி கணேஷ், சர்வீசில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதை அறிந்தவுடன், “ஐயோ சல்யூட் பண்ணாம உட்காந்துட்டேனே” என்று எழுந்து நிற்பது, “ஒழுங்கா உண்மைய சொல்லல கையக் கால கட்டி ரோட்ல போட்டு காரைவிட்டு ஏத்தச் சொல்லுவேன்” என்று விசாரணையில் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக மிரட்டுவது என அசத்தல் நடிப்பு.

அதோடு, படத்தில் ராஜன், கௌதம், பேப்பர்காரர் என இன்னும் பல மனதில் நிற்கும் கதாப்பாத்திரங்களும் உள்ளன.

கிளைமாக்ஸ் கொஞ்சம் சினிமாத் தனமாக இருப்பதைத் தவிர படத்தைப் பற்றி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தாராளமாக ஒருமுறை திரையரங்கில் பார்த்து திரையரங்கு அனுபவத்தை ரசிக்கலாம்.

மொத்தத்தில், வித்தியாசமான திரைப்பட விரும்பிகள் அவசியம் பார்க்க வேண்டிய போலீஸ் ஸ்டோரி!

-ஃபீனிக்ஸ்தாசன்