சிங்கப்பூர் – ஜோகூர் பாசிர் கூடாங் அருகே, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணியளவில், இரண்டு கொள்கலன் கப்பல்கள் மோதியதில், கப்பல் ஒன்றில் இருந்து 300 டன் எண்ணெய் கடலில் சிந்தியது.
சிங்கப்பூர் பதிவு பெற்ற கப்பல் (WAN HAI 301) மற்றும் ஜிப்ரால்டர் பதிவு பெற்ற கப்பல் (APL DENVER ) ஆகிய இரண்டு பாசிர் கூடாங் துறைமுகத்தில் மோதியதை ஜோகூர் துறைமுக அதிகாரிகள் கண்டதாக சிங்கப்பூர் கடல்வழி மற்றும் துறைமுக ஆணையம் (எம்பிஏ) தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் ஜிப்ரால்டர் பதிவு பெற்ற கப்பல் சேதமடைந்து, அதிலிருந்து ஏறத்தாழ 300 டன் எண்ணெய் சிந்தியதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தற்போது எண்ணெய் சிந்தியதால் ஏற்பட்ட மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 4 ஹெலிகாப்டர்களை ஜோகூர் துறைமுக ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே, சிங்கப்பூர் கடலிலும் எண்ணெய் திட்டுக்கள் காணப்பட்டதாகவும், அவற்றை சுத்தப்படுத்த 8 ஹெலிகாப்டர்கள் மூலம் மாசுக் கட்டுப்பாட்டு மருந்துகள் தெளிக்கப்படும் என்றும் எம்பிஏ தெரிவித்துள்ளது.