Home Featured தொழில் நுட்பம் அண்ட்ரோய்டுடன் கைகோர்த்து மீண்டும் களமிறங்கும் நோக்கியா!

அண்ட்ரோய்டுடன் கைகோர்த்து மீண்டும் களமிறங்கும் நோக்கியா!

1221
0
SHARE
Ad

nokia_6-android-phoneகோலாலம்பூர் – ஒரு காலத்தில் செல்பேசி என்றாலே அது ‘நோக்கியா’ என்ற முத்திரை சின்னம் பதித்த செல்பேசிதான். எங்கும் எதிலும் நோக்கியா மயம்தான்.

ஆனால் பின்னர் காலம் மாறியது. தொலைபேசிகளுக்கு மாற்றாகப் பார்க்கப்பட்ட செல்பேசிகளில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் புகுத்தப்பட்டு அவை, ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் திறன்பேசிகளாக உருவெடுத்தன.

இந்த காலகடத்தில்தான் தனது ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கியது நோக்கியா.

#TamilSchoolmychoice

ஐபோன் ரக திறன்பேசிகளை அறிமுகப்படுத்தி ஆப்பிள் நிறுவனம் திறன்பேசிகள் உற்பத்தியில் கால்பதித்ததோடு, மிகவும் அதிநவீன அதேவேளையில், மக்களுக்குப் பயனான பல உள்ளடக்கங்களை தனது ஐபோன்களில் தந்து, அனைத்தையும் செல்பேசிகளுக்குள் அடக்கும் தொழில் நுட்ப விந்தையை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.

இன்னொரு புறத்தில் கூகுள் நிறுவனம் செல்பேசிகளுக்கான அண்ட்ரோய்டு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

தென்கொரிய நிறுவனமான சாம்சுங் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆப்பிளுக்கு இணையாக திறன்பேசிகளை தயாரிக்கத் தொடங்கி உலகச் சந்தையின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது.

இதனால் பலத்த நஷ்டங்களை எதிர்நோக்கி பின்னடைவு கண்ட நோக்கியா, தற்போது மீண்டும் திறன்பேசிகள் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அண்ட்ரோய்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “நோக்கியா 6” என்ற முத்திரை சின்னத்துடன் கூடிய திறன்பேசிகளை முதல் கட்டமாக சீனாவில் அறிமுகப்படுத்துகிறது.

இதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் நோக்கியா 6 சந்தைகளில் இடம் பெறும். நோக்கியா முத்திரைச் சின்னத்தின் உரிமத்தைக் கொண்டுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த புதிய திறன்பேசிகளை உற்பத்தி செய்கிறது.

அண்ட்ரோய்டு 7.0 நொகட் (Nougat) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நோக்கியா 6 உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு ‘சிம்’ (SIM) அட்டைகள் பயன்படுத்தும் வகையில் இந்தத் திறன்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற திறன்பேசிகளுடன் எந்த அளவுக்குப் போட்டி போட்டு, சந்தையில் நோக்கியா மீண்டும் இடம் பிடிக்கப் போகிறது என்பதைக் காண தொழில்நுட்பத் தரப்பினரும், வணிகத் தரப்பினரும், பயனீட்டாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.