Home Featured இந்தியா ஸ்ரீமுருகன் கல்வி நிறுவனர் டான்ஸ்ரீ தம்பிராஜாவுக்கு பாரதிய சம்மான் விருது!

ஸ்ரீமுருகன் கல்வி நிறுவனர் டான்ஸ்ரீ தம்பிராஜாவுக்கு பாரதிய சம்மான் விருது!

816
0
SHARE
Ad

tansri-thambirajaபெங்களூர் – கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில், இன்று திங்கட்கிழமை மாலை, மலேசியா ஸ்ரீ முருகன் கல்வி நிலைய நிறுவனர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜாவிற்கு, பாரதிய சம்மான் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதன் மூலம், ஆண்டுதோறும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் இந்தப் பிரவாசி மாநாட்டில் இவ்விருதைப் பெறும் நான்காவது மலேசியப் பிரமுகர் டான்ஸ்ரீ தம்பிராஜா ஆவார்.

மூன்று நாள் பிரவாசி மாநாட்டின் இறுதி நாளான இன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதோடு, மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிறைவு விழாவின் போது வெளிநாட்டில் வாழும் சுமார் 30 இந்தியர்களுக்கு சம்மான் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் பல ஆண்டு காலம் கல்வித்துறையில் தடம் பதித்து வரும் டான்ஸ்ரீ தம்பி ராஜா நாடு தழுவிய நிலையில் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்.

இக்கல்வி நிலையத்தில் கல்வி பயின்று தேர்வுகளில் தேர்ச்சியடைந்த எண்ணற்ற மாணவர்களுக்கு ஸ்ரீமுருகன் கல்வி நிலையமும் அதன் நிறுவனர் தம்பி ராஜாவும், உயர்கல்விகள் பயில முக்கியப் பங்காற்றி வந்துள்ளனர்.

மாணவர்களின் கல்வித் தேர்வுக்கு அடித்தளமாக விளங்கும் ஸ்ரீமுருகன் கல்வி நிலையம் தோற்றுவிக்கப்பட்டு அதன்மூலம் நாட்டில் பல மாணவர்களின் கல்வி உயர்விற்கும் வளர்ச்சிக்கும் ஸ்ரீமுருகன் கல்வி நிலையம் முன்னுதாரணமாக விளங்கி வருகின்றது.

டான்ஸ்ரீ தம்பிராஜாவின் அளப்பரிய கல்விப் பணிக்கு முத்தாய்ப்பாக இந்த பாரதிய சம்மான் விருது வழங்கப்படவுள்ளது கல்வித்துறைக்கும், மலேசிய இந்தியர்களுக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரமாகும்.

இதற்கு முன்னர் இந்த பாரதிய சம்மன் விருதை மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், மலேசியாவுக்கான இந்தியா, தெற்காசியா நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், மலேசிய நாடாளுமன்ற மேலவை முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.வடிவேலு  ஆகிய மூவருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்